Homeசெய்திகள்கட்டுரைசாட்டையடி போராட்டம் பிற்போக்குத்தனமானது... குற்றவாளிகளை பாதுகாக்கும் பாஜக... ஆளுர் ஷாநவாஸ் குற்றச்சாட்டு!

சாட்டையடி போராட்டம் பிற்போக்குத்தனமானது… குற்றவாளிகளை பாதுகாக்கும் பாஜக… ஆளுர் ஷாநவாஸ் குற்றச்சாட்டு!

-

- Advertisement -

அண்ணாமலை நடத்திய சாட்டையடி போராட்டம் மிகவும் பிற்போக்குத்தனமானது என்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான ஆளுர் ஷாநவாஸ் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:- தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாட்டையடி போராட்டம் நடத்தியுள்ளார். மேலும், ஆட்சியில் இருந்து திமுகவை அற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என அறிவித்துள்ளார்.  ஒரு பிரச்சினை நடந்தால் அந்த பிரச்சினைக்கு தீர்வு காண நினைக்கும் தலைவர்கள், அரசியல் கட்சிகள் என யாராக இருந்தாலும் அந்த பிரச்சினை மீது கவனம் கொடுப்பார்கள். ஆனால் அண்ணாமலைக்கு அந்த பிரச்சினை மீது கவனம் வருவதை விட்டு, தன் மீது கவனம் வருவதற்காக ஒரு வேலையை செய்வார்.

பாஜக தலைவராக பொறுப்பேற்றது முதல் அண்ணாமலை தன் மீது கவனம் வருவதற்காக எந்த எல்லைக்கும் செல்வார். சாட்டையால் அடித்துக்கொண்ட போராட்டம் என்பது மிகவும் பிற்போக்கானது. போராட்ட வடிவங்களிலும் கூட மாண்பை கடைபிடிக்கும் மாநிலம் தமிழகம். இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது, இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வன்முறையே நடைபெறாமல் அமைதி வழியில் போராட்டத்தை நடத்திக் காட்டிய மாநிலம். இங்கு வந்து சாட்டையால் அடித்துக் கொள்வது, செருப்பு அணிய மாட்டேன் என்று கூறுவது பிற்போக்குத்தனமாது. அரசை எதிர்க்க  ஆயிரம் போராட்ட வழிகள் உள்ளன.

திமுக கூட்டணியையும் சரி, திமுக அரசையும் சரி அண்ணாமலையால் அசைத்துப் பார்க்க முடியாது. நீங்கள் இனி செருப்பே போட முடியாத நிலைதான் வரும். ஆனால் அவர் செருப்பு அணிய வேண்டும் என்று தான் சொல்லுகிறோம். செருப்பு போட்டு நடப்பது என்பது தனி மனித உரிமை. எதன் பொருட்டும் நாம் அதை இழக்கக்கூடாது. சவுக்கால் அடித்துக்கொல்வது என்பது மனித உரிமை மீறல். அதை அடுத்தவர் செய்தாலும் சரி, தனக்குத்தானே செய்து கொண்டாலும் சரி தவறுதான். அதில் இருந்து விடுபட்டு நாம் மேம்பட்ட நிலைக்கு சென்று கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் போராட்டம் நடத்துவதை அனுமதிக்கவில்லை என அண்ணாமலை புகார் கூறுகிறார். தமிழகத்தில் போராட்டம் நடத்த அனைவருக்கும் அனுமதி உள்ளது. அப்படி அனுமதி தரா விட்டால் தடையை மீறி போராட்டம் நடத்தலாம். அப்போது, வழக்குப்பதிவு செய்வதும், கைதுசெய்து மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவிப்பதும் சட்டம் கொடுத்துள்ள வழிமுறைதான். அதை பின்பற்றி எந்த அரசும் செய்யக் கூடியது தான். ஆனால் போராடுபவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது, கண்ணீர் புகை குண்டுகளை வீசுவது, டிரோன் தாக்குதல் நடத்துவது போன்றவற்றை யார் செய்கிறார்.

இந்த மூன்றரை ஆண்டுகளில் திமுக அரசு எங்காவது போராடுபவர்கள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளதா?. ஆனால் டெல்லியில் என்ன நடக்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் என்ன நடக்கிறது. புல்டோசர் கொண்டு வீடுகளை இடிக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களை பார்க்க செல்லும் தலைவர்களையும் தடுக்கிறார்கள். ராகுல்காந்தியை எங்காவது அனுமதிக்கிறீர்களா. ஆனால் தமிழ்நாட்டில் போராட்டம் நடத்த அனுமதிக்கவில்லை என புகார் தெரிவிக்கிறார் அண்ணாமலை. பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை எதிர்ப்பதாக அண்ணாமலை கூறுகிறார். அப்படி எனில் பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவளிப்பது யார். அவர்களை விடுதலை செய்தது யார். விளையாட்டு வீராங்கனைகள் உள்பட நாட்டில் பல்வேறு இடங்களில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர்களை பாதுகாப்பது பாஜக அரசு. அதுபோன்று, இங்கு நடைபெற்றுள்ளதா?

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கண்டனத்திற்கு உரியது. இந்த விவகாரத்தில் அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்துள்ளது. 3 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் இது சாத்தியமா?. ஆனால் அண்ணாமலை இதில் அரசியல் செய்கிறார். இந்த விவகாரத்தின் சீரியஸ்னஸ் தெரியாததால் அண்ணாமலை இப்படி பேசுகிறார். குற்றவாளிகளை அரவணைப்பதும், பாதுகாப்பதும் தான் பாஜகவின் கொள்கை. ஆருத்ரா வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவரும் பாஜகவில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். உங்களுடன் அவர்கள் புகைப்படம் எடுத்ததாலேயே உங்களுக்கு தொடர்பு உள்ளது என கூறலாமா?. ஏன் உங்கள் மீது கேள்வி வருகிறது என்றால் நீங்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான். பல குற்றவாளிகளுக்கு பொறுப்பு கொடுத்து கட்சியில் சேர்க்கின்றனர். அப்படி அங்கு இல்லை. கட்சியினர் தவறு செய்தால் அவர்களை நீக்கலாம், அல்லது எங்கள் கட்சிக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை என்றுதான் கூற முடியும்.

"கோவையில் என்.ஐ.ஏ. கிளை, காமராஜர் உணவகங்கள்..."- வாக்குறுதிகளை அள்ளி வீசிய அண்ணாமலை!

அண்ணாமலையின் அரசியல் அப்படி அல்ல. அவர் குற்றவாளிகளை திட்டமிட்டே கட்சியில் சேர்க்கிறார். குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறார். அதனை நியாயப்படுத்தியும் பேசியுள்ளார். அப்படி எந்த கட்சி தலைவரும் நியாயப்படுத்தியது இல்லை. மாணவி பாலியல் விவகாரத்தில் குற்றவாளிகளை யாரும் நியாயப்படுத்தவில்லை. நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம். நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. இப்படி ஒரு நிலை இருக்கும்போது அண்ணாமலை அதை ஒரு பெரிய விஷயமாக காட்டி திசை திருப்பி, அரசியல் செய்வதுடன், பிற்போக்கான நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளது. தன் மீது கவனத்தை திருப்புவது அருவருப்பானது. இன்று அண்ணாமலை பற்றி தான் பேசப்படுகிறது, மாணவி குறித்து யாரும் பேசவில்லை.

தஞ்சை பள்ளி மாணவி விவகாரம் உள்பட அவர் கையில எஉண்மை தெரியவந்ததால் அண்மை வாயை மூடிக்கொண்டிருக்கிறார். மாணவி பாலியல் வன்கொடுமை உண்மையில் உங்களுக்கு அக்கறை இருந்தால் பிரச்சினைக்கு தீர்வு சொல்லுங்கள். பல்கலைக்கழகத்திற்குள் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து கேள்வி எழுப்புங்கள். ஆனால் அதை விட்டு மலிவான அரசியல் செய்வது, இந்த பிரச்சினைக்கு கேடு செய்வது, அரசியலுக்கும் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்துகின்றனர். தன்னுடைய இருப்பை காட்டிக்கொளவதற்காக எல்லாரும் அரசியல் செய்ய தொடங்கினால் எங்கே போய் முடியும். இது கண்டிக்கத்தக்கது.

15 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால் திமுகவுக்கு நிபந்தனை அற்ற ஆதரவு அளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி வழங்கிய 10.5 சதவீத வன்னியர் உள்இடஒதுக்கீடே உச்சநீதிமன்றத்தில் நிற்கவில்லை. 15 விழுக்காடு என்பது எப்படி வழங்க முடியும். இது மற்ற அனைத்து கட்சிகளையும் விட பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் நன்றாகவே தெரியும். தெரிந்தும் வன்னியர் சமூக இடஒதுக்கீட்டை மையப்படுத்தி கடந்த தேர்தலையும் அவர்கள் கையில் எடுத்தார்கள். இந்த தேர்தலையும் சந்திப்பதற்காக கையில் எடுக்கிறார்கள் என்றால் இவர்கள் அந்த மக்களை வைத்து அரசியல் செய்கின்றனர்.

உள் இடஒதுக்கீடு என்பது ஒரு ஆணையத்தை அமைத்து, உரிய பரிந்துரைகளை பெற்ற பின்னர்தான் அமைக்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு, பல்வேறு விவரங்களின அடிப்படையில் தான் இதனை வழங்க முடியும். அப்படி இருக்கையில் அவசர கதியில் அரசாணை பிறப்பித்தால் இது நீதிமன்றத்தில் நிற்குமா, நிற்காதா என்று அவர்களுக்கு நன்றாக தெரியும். அப்ப ஏன் வாங்கினீர்கள்?. எடப்பாடி பழனிசாமி கொடுத்தது சரி என்று கூறினால், இன்று ஏன் தவறாகிவிட்டது. அன்று வன்னியர் மக்களை தங்கள் பக்கம் திருப்ப அதனை வாய்ப்பாக பார்த்தார்கள். இன்று அது அந்தரத்தில் தொங்குகிறது.

தற்போது 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். திமுக கூட்டணியில் இடம்பிடித்து விடலாம் என எதிர்பார்த்தார்கள் கிடைக்கவில்லை. விசிக கூட்டணியை விட்டு வெளியே போகும் என்று பார்த்தார்கள் அதுவும் நடைபெற வில்லை. இப்போது திமுக எதிர்ப்பு நிலைப்பாடு எதிர்க்க வேண்டும். அதற்காக எடப்பாடி கொடுத்தார். ஸ்டாலின் நினைத்தால் கொடுக்கலாம். அதனால் 15 சதவீதம் தர வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார். சென்றமுறை 10.5 சதவீதம் கொடுத்தபோதே நிற்கவில்லை என்கிறபோது, 15 சதவீதம் எப்படி நிற்கும். அப்போது, உங்களது நோக்கம் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வாங்கித் தருவது அல்ல. தேர்தலை எதிர் கொள்ள வேண்டும், மக்கள் ஓட்டை வாங்க வேண்டும். அதற்கு ஒரு கூட்டணிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் அவ்வளவுதான்.

வன்னியர் இடஒதுக்கீட்டிற்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதற்கு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். ஆனால் பாமக அதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாநில அரசை காரணம் காட்டி, மாநில அரசுதான் இதற்கு காரணம் என கூறி திசை திருப்பி, வன்னியர் சமுக மக்களின் ஓட்டுக்களை வாங்க வேண்டும் என்பது தான் அவர்களது நிலைப்பாடு. இதற்கு தீர்வு காண நினைப்பவர்கள் பிரச்சினையை சரிசெய்ய தான் விரும்புவாரகள், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

MUST READ