உத்தரபிரதேசம், பீகார் போன்ற வடமாநிலங்களில் பள்ளிகளில் ஒரு மொழி மட்டுமே கற்பிக்கப்படுவதாகவும், ஆனால் தமிழ்நாட்டில் மூன்று மொழிகளை கற்பிக்க வேண்டும் என்று பாஜக கூறுவதாகவும் மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சி குறித்தும், மும்மொழி கொள்கையின் அவசியம் குறித்த தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பத்திரிகையாளர் ஆர்.கே. பங்கேற்று பேசியதாவது:- நான் பொள்ளாச்சி அருகில் உள்ள ஒரு சிபிஎஸ்இ பள்ளியில் படித்தேன். அங்கும் இந்தி இருந்தது. நான் இந்தி 2வது மொழியாகவும், 3வது மொழியாகவும் இருந்தது. எனக்கு தமிழ் சரியாக வராது என்பதால் நான் இந்தியை 2வது மொழியாக எடுத்து படித்தேன். மூன்றாவது மொழியாக தமிழை எடுத்து படித்தேன். இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியமும், அவசரமும் யாருக்கு இருக்கிறதோ அவர்கள் இந்தி பிரச்சார சபாவில் தொடங்கி எவ்வளவோ இடங்களில் கற்றுக்கொள்ள முடியும். சமீபத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வந்து திமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக மாறி விட்டார். அதனால் மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால் காசு தர மாட்டேன் என்று மிகப் பெரிய குண்டை தூக்கிப்போட்டு சென்றுள்ளார். அதனால் திமுகவுக்கு இங்கே ஒரு விவாத பொருள் கிடைத்துவிட்டது. தமிழ்நாட்டில் இன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. திமுக அரசு மக்களுக்கு என்ன செய்திருக்கிறது? என்று எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, யார் அந்த சார்? என்று எதிர்க்கட்சிகள் தொடர் திமுக எதிர்ப்பு பிராச்சாத்தில் ஈடுபட்டு வந்த சூழலில் தற்போது அவை எல்லாம் அடிபட்டு போய் திமுக செய்வது சரிதான் என்ற நிலையை ஏற்படுத்தி விட்டது.
முதலில் எதற்கு மும்மொழி கொள்கை என்ற ஒரு கேள்வி எழுகிறது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் பதில் அளித்துள்ளார். அண்ணா கூறினார், ஆங்கில மொழி வாயிலாக தான் நாம் உலகத்தோடு தொடர்பு கொள்ளமுடியும். அதனால் ஆங்கிலத்தை கற்றுக்கொள்ள வேண்டும். இதேபோல் தமிழ் எனது தாய்மொழி, அதனால் நான் இங்கே தமிழில் பேசிக் கொண்டிருக்கிறேன். இதே கொரியாவில் வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்பதால் தென்கொரிய தூதரகம் வாயிலாக இளைஞர்கள் அந்த மொழியை கற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கிறோம். இந்தி கற்றுக்கொண்டால் எனக்கு என்ன வேலைவாய்ப்பு கிடைக்குமா? என அந்த வீடியோவில் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்புகிறார். அது ஒரு உண்மையான கேள்விதானே.
ஒரு இடத்திற்கு சென்று, அங்கு வாழ வேண்டும் என்றால் அந்த மொழியை கற்றுக் கொடுக்கிறார்கள். வரதராஜ முதலியார் என்பவர் மும்பையில் பெரிய டான் ஆக இருந்தவர். அவர் என்ன இந்தி மொழி கற்றுக்கொள்ள வில்லையா? ஆசிர்வாதம் ஆச்சாரி டெல்லியில் உள்ளார். அவருக்கு என்ன இந்தி தெரியாதா? நாம் எங்கு செல்கிறோமோ அங்குள்ள பாஷையை கற்றுக்கொள்கிறோம். இருக்கின்ற கேள்வி என்ன என்றால் பள்ளியில் இந்தியை படிக்க வைத்தால் அதற்கான வேலைவாய்ப்பு உள்ளதா? என்கிற கேள்விதான் எழுகிறது. இதற்கு மேல் ஒரு அவலம் என்ன என்றால் நவோதயா பள்ளிகளில் ஜெர்மன் மொழிக்கு பதிலாக சமஸ்கிருதத்தை கொண்டு வந்துள்ளனர். ஜெர்மன் படித்தால், அதற்கேற்ப வேலைவாய்ப்பு கிடைக்கிறது. அல்லது ஜெர்மனி நாட்டிற்கு செல்ல உதவுகிறது. நெதர்லாந்துக்கு இடம்பெயர்ந்தோ அல்லது படிப்புக்காக போக வேண்டும் என்றால், உங்களுக்கு டச்சு மொழி தெரிந்திருப்பது அவசியமாகும். எனக்கு வேலைவாய்ப்பு, வாழக்கூடிய வசதிகள் இருப்பதால் நான் டச்சு மொழியை தான் கற்றுக்கொள்வேன். சமஸ்கிருதத்தை கற்றுக்கொள்வதால் எனக்கு நீங்கள் வேலைவாய்ப்பு கொடுப்பீர்களா? நான் பூசாரி வேண்டுமானால் ஆகலாம். ஆனால் குறிப்பிட்ட சாதி இல்லாதவர்களுக்கு அந்த வேலை கிடையாது.
பாஜகவினர் இந்தி அல்ல மூன்றாவதாக ஏதாவது ஒரு மொழியை கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள். ஏற்கனவே பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாடச்சுமை அதிகமாக உள்ளது. இதற்கிடையில் நீங்கள் இன்னொரு மொழியை படியுங்கள் என்று சொல்கிறார்கள். எனக்கு ஒரு வேலைக்கு செல்வதற்கோ, வேறு இடத்தில் சென்று வசிப்பதற்கோ தான் மொழி என்பது தேவைப்படுகிறது. மொழியை வைத்து நீங்கள் வேறு எதுவும் செய்ய முடியாது. மும்மொழி கொள்கையை தென்னிந்தியாவின் மற்ற மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளும்போது தமிழ்நாடு மட்டும் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்கிறார்கள். அவர்கள் ஏன் பேசவில்லை என்றால் ஆட்சியாளர்கள் அந்த அளவிற்கு அலட்சியமாக உள்ளனர். நான் கேரளாவை சேர்ந்தவன். அங்கே இந்தி திணிப்பு பிரச்சினைகள் எல்லாம் கிடையாது. அவர்கள் நீட் குறித்தே பேசவில்லை. தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக கணத்த குரலை எழுப்பும்போது தான் அவர்களும் இப்படி ஒரு பிரச்சினை உள்ளது என்பதை புரிந்து கொள்கிறார்கள். அதற்கும் அந்த அளவிற்கு பெரிய விஷயமாகவில்லை. இதேபோல் தான் கர்நாடகா, ஆந்திராவிலும் நீட் விவகாரம் பெரிய பிரச்சினை ஆகவில்லை. இது அரசியல் விழிப்புணர்வு மிகுந்த மக்கள் உள்ள தமிழ்நாட்டில் தான் எடுபடுகிறது. நமக்கு அப்படி ஒரு பாரம்பரியம் உள்ளது. நாம் இந்தி திணிப்பை 1935 முதல் எதிர்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அதன் பிறகு மொழிப்போருக்காக பலர் உயிர் தியாகம் செய்துள்ளனர். நாம் அறிவியல், தொழில்நுட்பம் என்று படிப்போம், மாட்டு கோமியம், வடமொழி வார்த்தைகளை உச்சரிக்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அது எப்போது தேவைப்படுகிறதோ அப்போது படிக்கிறேன். அதில் உங்களுக்கு என்ன பிரச்சினை.
மத்திய அரசின் கல்வி திட்டத்தின் பெயர் சமக்ர சிக்ஷா அபியான் என்று வைத்திருக்கிறார்கள். திட்டங்களின் பெயர்களை ஆங்கிலத்தில் வைத்திருக்கலாம். அல்லது மாநில மொழியில் மாற்றம் செய்திருக்கலாம். ஆனால் யாருக்கும் புரியாமல் இந்தியில் வைக்கிறார்கள். அப்போது அவர்கள் எந்த மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்பது தெரிகிறது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தற்போது புதிதாக சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். கே.வி. பள்ளிகளில் ஜெர்மன் மொழி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் உள்ளனர். தற்போது ஜெர்மன் மொழி படிக்கக்கூடாது. அனைவரும் சமஸ்கிருதம் படிங்கள் என்று சொல்கிறார்கள். இதன் மூலம் மத்திய பாஜக அரசின் விருப்பம் என்பது இந்தி அல்லது சமஸ்கிருதத்தை படிக்க வைப்பது தான். வேறு எந்த மொழிக்கும் முன்னுரிமை கிடையாது.
மத்திய பிரதசம், உத்தரபிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களில் எங்காவது இரண்டாவது மொழி கற்பிக்கப்படுகிறதா?. அந்த மாநிலங்களில் இந்தியை தவிர வேறு எந்த மொழியாவது கற்பிக்கப்படுகிறதா?. அங்கு இரண்டு மொழியே இல்லாத போது, தமிழ்நாட்டில் மூன்றாவது மொழி படியுங்கள் என்று சொல்கிறார்கள். அப்படி என்றால் உத்தரபிரதேசத்தில், பிகாரில் முதலில் நீங்கள் மூன்றாவது மொழியை கற்றுக் கொடுங்கள். அங்கு மும்மொழி கொள்கை வெற்றிகரமாக அமல்படுத்தி விட்டால், தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை தாராளமாக செயல்படுத்தலாம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.