Homeசெய்திகள்கட்டுரைதிருமாவளவன் ஒரு ஆளுமைமிக்க தலைவர்

திருமாவளவன் ஒரு ஆளுமைமிக்க தலைவர்

-

என்.கே.மூர்த்தி

தமிழகத்தில் உள்ள ஏனைய அரசியல் கட்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் அடிப்படையில் வேறுபாடு இருக்கிறது. மற்ற கட்சிகளோடு விசிகவை ஒப்பீடு செய்யவே கூடாது. உதாரணத்திற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி,பாஜக போன்ற கட்சிகளின் தலைவர்கள் முதல் அதன் கடைசி தொண்டர்கள் வரை அவரவர் நடத்தைகளுக்கு ஏற்ப சமூகத்தில் மரியாதை கிடைக்கும். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் , அதன் நிர்வாகிகளுக்கும் எவ்வளவு நேர்மைக்கு சொந்தக்காரராக இருந்தாலும் பொது சமூகத்தில் அந்தளவுக்கு மரியாதை கிடைப்பதில்லை. இந்த சமூக கட்டமைப்பில் அந்த கட்சியின் கொள்கைகளை கொண்டு செல்லும் மாநில, மாவட்ட, வட்ட நிர்வாகிகளுக்கு பெரும் சிக்கல் இருக்கிறது. சில மாவட்டங்களில் கூட்டணி கட்சி நிர்வாகிகளே சமமாக நடத்துவதில்லை என்கிற எதார்த்த நிலையை புரிந்துகொள்ள வேண்டும்.

மற்ற கட்சிகளுக்கு தேர்தல், தேர்தல் கூட்டணி, வெற்றி தோல்வி அதோடு அவர்கள் வேலை முடிந்துவிட்டது. ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தலுக்கு அப்பாலும் சாதிய பண்பாட்டு தளத்தில் தீண்டாமைக்கு எதிராகவும், சமத்துவத்திற்காகவும் தொடர்ந்து போராட வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு கூடுதலாக இருக்கிறது. அந்த அங்கிகாரத்தை நோக்கித் தான் திருமாவளவன் நிதானமாக கடந்த 40 ஆண்டுகளாக உழைத்து வருகிறார்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஒடுக்கப்பட்டு கிடக்கும் அந்த சமூகத்திற்கு அரிதாக கிடைத்த மாமனிதர் தான் தொல். திருமாவளவன். விடுதலை சிறுத்தைகள் கட்சி 1982ல் தொடங்கப்பட்டது. அதற்கு முன்பே, மாணவர் பருவத்தில் இருந்தே அம்பேத்கர், பெரியார் கொள்கையில் களமாடி வருகிறார். அவர் மாநிலம் முழுவதும் பட்டி தொட்டி எங்கும் நடந்தும், வாகனத்திலும் பயணம் செய்தார். செய்துக்கொண்டே இருக்கிறார். அவர் எப்பொழுது தூங்குகிறார், எப்பொழுது விழித்திருக்கிறார் என்று கண்டுப் பிடிக்க முடியாத அளவிற்கு கடுமையாக உழைக்கிறார். அவருக்கு பின்னால் பெரும் செல்வந்தர்களோ, பணம் படைத்தவர்களோ இல்லை. கஞ்சிக்கும், கூழுக்கும் அன்றாடம் கஷ்டப்படுகின்ற எளிய மக்களிடம் அரசியலை பேசுகிறார், புரிய வைக்கிறார், ஒன்று திரட்டுகிறார், அமைப்பாக்கி உரிமைகளுக்காக போராட வைக்கிறார். அவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் தொடர்ந்து செய்து வருகிறார்.

சாதி அடுக்குகள் கொண்ட சமுக அமைப்பில், விசிகவையும், அதன் அடுத்தக்கட்ட தலைவர்களையும் வெறுப்பவர்கள் நிறைய சாதி அமைப்புக்கள், தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வளர்ந்து விடக் கூடாது, வளர்ந்து சமமாக நம்மோடு அமர்ந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்துவரும் ஆதிக்க சமூகத்தினர் தொடர்ந்து கொடுத்து வரும் தொல்லைகள் ஏராளம். அவற்றை எல்லாம் நிதானமாக அணுகி, மோதல் அரசியலை தடுத்து அறிவு தளத்திற்கு மாற்றி வருகிறார்.

அவருக்கு அரசியல் களத்தில் இருந்து வரும் எதிரிகள், பண்பாட்டு தளத்தில் இருந்து வரும் கொடூர தாக்குதல்கள் என்று அனைத்தையும் பொறுமையாகவும், துணிச்சலுடனும், பணிவாகவும், நேர்மையாகவும், அறிவு நுட்பத்துடன் அணுகி ஒவ்வொன்றையும் முறியடித்து கொண்டு தொண்டர்களை வழிநடத்தி செல்கிறார்.தொண்டர்களுக்கு அண்ணனாகவும், தலைவனாகவும், உற்றத் தோழனாகவும் இருந்து அறிவுரையை ஆலோசனை போன்று வழங்கி பாதுகாத்து வருகிறார். தற்பெருமை, கோபம், பொறாமை எதுவும் தன்னுடைய தலைக்கு ஏறுவதற்கு அவர் ஒருபோதும் அனுமதித்தது கிடையாது. அதேபோன்று கட்சி, அரசியல், தொண்டர்கள் பிரச்சினை என்று ஏராளமான பணி சுமைகளுக்கு இடையில் படிப்பதையும் எழுதுவதையும் அன்றாட பணியில் ஒரு அங்கமாகவே கொண்டுள்ளார். அவர் எழுதிய ஆட்சியில் பங்கு, எளிய மனிதனுக்கும் அதிகாரம் போன்ற ஒவ்வொரு வரிகளும் காலம் கடந்தும் தொண்டர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து வருகிறது.

தேர்தல் காலக்கட்டத்தில் கூட்டணியில் உள்ள பெரிய கட்சிகள் கொடுக்கும் இடையூறுகள், அவமரியாதைகள் அனைத்தையும் நிதானத்துடன் கையாளும் ஆளுமை மிக்கவர். தற்போது திமுக கூட்டணியில் இருந்து விசிக வை வெளியேற்ற கட்சிக்குள்ளும், கட்சிக்கு வெளியில் இருந்தும் வந்த நெருக்கடிகளை, சூழ்ச்சிகளை கையாண்ட விதத்தை எந்த அளவிற்கு வேண்டுமானாலும் பாராட்டலாம். அவர் அரிதாகவே கோபப்படுகிறார்.

தமிழ்நாடு அரசியல் தலைவர்களில் தனித்துவம் மிக்கவராகவும், அடுத்த தலைமுறையினருக்கு முன்னுதாரணமான தலைவராகவும் திகழ்கிறார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தன்னுடைய அரசியல் வழிகாட்டி எங்கள் அண்ணன் திருமாவளவன் என்று சொல்லும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறார். மேலும் அறிவு தளத்தில் நின்று சாதி, மதம் கடந்து சிந்திக்கின்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஈர்க்கும் ஆசிரியராக மாறியிருக்கிறார்.

தலித் மக்களை மட்டும் மையப்படுத்தி தொடங்கப்பட்ட விசிகவில் இன்று தலித் அல்லாதவர்களும் அந்த கட்சியில் ஆர்வமுடன் சேர்ந்து பணியாற்றும் சூழலை உருவாக்கியவர் திருமாவளவன். சாதி, மத வெறுப்பு அரசியலுக்கு எதிராக நின்று, அதே வழியில் விசிக தொண்டர்களையும் வழிநடத்தி வந்த திருமாவளவன், அதே கொள்கையுள்ள திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 2016ல் இடம் பெற்றார். அன்று முதல் அந்த கூட்டணி வெற்றிக் கூட்டணியாக மாறியது. தொடர்ந்து திமுக கூட்டணியை உடைக்க பல வழிகளில் முயற்சி செய்கிறார்கள். ஆனால் திருமாவளவன் உறுதியுடன் கொள்கை கூட்டணியில் பயணிக்கிறார்.

ஒரு கட்சியின் வெற்றிக்கு அடிப்படை தேவை (1) கொள்கை தெளிவுள்ள ஒரு தலைவர் வேண்டும் (2) நல்ல கட்டமைப்பு உள்ள கட்சி. (3) தெளிவும், உறுதியும் கொண்ட நோக்கம், அதற்கான வேலைத் திட்டம் ஆகிய மூன்று அம்சங்கள் இருந்தால் அந்த கட்சி இன்று இல்லாவிட்டாலும் வருங்காலத்தில் நிச்சயமாக வெற்றிப் பெற்றே தீரும். ஒரு நாள் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அந்த இடத்தை பிடிக்கும்.

MUST READ