பெரியாரின் 51 வது நினைவு நாள் விழாவில் திராவிடத் தலைவர் கி.வீரமணி முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு கைத்தடி ஒன்றை பரிசாக அளித்தார். திராவிட மாடல் குறித்து கேலி செய்பவர்களுக்கு இந்த கைத்தடி போதும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார்.
தந்தை பெரியாரின் 51 வது ஆண்டு நினைவு நாளான இன்று சென்னை பெரியார் திடலில், பெரியார் பகுத்தறிவு கணினி நூலகம் மற்றும் ஆய்வு மய்யத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்து நூலகத்தை பார்வையிட்டார். அங்கு வைக்கப்பட்டிருந்த அரசமைப்புச் சட்டப் புத்தகத்தையும் பார்வையிட்டார். தொடர்ந்து பெரியாரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உடன் திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, அமைச்சர்கள் சேகர்பாபு, கயல்விழி செல்வராஜ், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி, திராவிடம் ஒரு குறிப்பிட்ட எல்லையை சார்ந்தது அல்ல, சுயமரியாதை யாருக்கெல்லாம் வேணுமோ அவர்களுக்கெல்லாம் சொல்லி கொடுப்பது திராவிடம். பெரியார், அண்ணா, கலைஞர் அனைவரும் சேர்ந்த கலவையாக இருக்கக்கூடிய ஒப்பற்றவர் நம் முதல்வர். 50 ஆண்டுகளுக்கு முன்பு நெருக்கடி, இப்போதும் நெருக்கடி. திமுக செயற்குழு கூட்டத்தில் பேசியதை கேட்டு அதிர்ந்து போனோம், இயக்கத்தினருக்கு பாடம் சொல்லி கொடுத்தீர்கள். தனி மனிதர் பதவிக்காக அல்ல, சமுதாய வாழ்வு காக்க, பெண் அடிமை ஒழிப்பு அழிக்க இந்த இயக்கம் ஆட்சியில் இருக்க வேண்டும்.
பெரியார் உலகமயம், உலகம் பெரியார் மயம். தமிழக முதலமைச்சருக்கு நினைவு சின்னம் அளிக்க உள்ளோம். தாய் வீடு தரக்கூடிய மிகப் பெரிய பரிசு. தைரியம், துணிச்சலோடு களமாடும் முதலமைச்சர் என்பதால் உங்களுக்கு ஒரு பரிசு அளிக்க உள்ளோம் என கூறிய கி.வீரமணி, பெரியாரின் கைத்தடி ஒன்றை நினைவு பரிசாக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு வழங்கினார். இந்த கைத்தடி திராவிடத்தை காக்கும் கைத்தடியாக இருக்கும் என்றும் பேசினார்.
தொடர்ந்து மேடையில் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின், என்ன பேசுவது என புரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறேன்.காரணம் ஆசிரியர் ஐயா அளித்த பரிசை வாங்கும் போது என்னையே நான் மறந்துவிட்டேன். வாழ்க்கையில் எத்தனையோ பரிசுகள் பெற்றிருக்கலாம். ஆனால் இந்த பரிசுக்கு எதுவும் ஈடாகாது என்பதை நான் உணர்ந்து கொண்டிருக்கிறேன். போதும் எனக்கு இது போதும்.
திராவிட மாடல் என்றால் என்ன என்று கேலி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த கைத்தடி ஒன்றே போதும். தாய் வீட்டுக்கு வந்து இருக்கிறேன். தாய் வீட்டுக்கு வரும்போது எல்லாம் உணர்ச்சி எழுச்சியை தொடர்ந்து பெறுவது உண்டு, அதைப் பெற்று தற்பொழுது நின்று கொண்டிருக்கிறேன். ஆண்டாண்டு காலம் வாழ்க ஒடுக்கப்பட்ட தமிழினம் ஒற்றுமை பெறவும், சுயமரியாதை பற்றி மேல் எழுந்து நிற்க பாடுபட்டு அயராது உழைத்த பெரியார் நினைவு நாளில் கருத்துக்களை, எண்ணங்களை, போராட்டங்களை, தியாகங்களை வாழ்க்கை வரலாற்றை இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில் டிஜிட்டல் மூலமாக ஆய்வு மையத்தை இன்று திறந்து வைத்துள்ளோம். தந்தை பெரியார் தொண்டர்கள் இந்த பயணத்தை தொடங்கி முன்னெடுப்பை செய்து உள்ளதாக கூறினார்.
அவர் வாழ்ந்த காலத்தில் அவர் முற்போக்கு கருத்துக்களுக்காக பழமைவாதிகள் மற்றும் பிற்போக்குவாதிகளிடம் கடும் எதிர்ப்பை சந்தித்தார். ஊருக்கு வரத்தடை, பேசத் தடை, கோவிலுக்குள் நுழைய தடை, எழுதத் தடை, பத்திரிக்கை நடத்த தடை, போராட்டம் நடத்த தடை அத்தனை தடைகளையும் உடைத்து வீதிகளில் மட்டும் நுழைய வில்லை நம் மனதிலும் நுழைந்திருக்கிறாா். பெரியார் மறைந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகும் அவரைப் பற்றி பேசி புகழ்ந்து வரலாற்றை எடுத்து சொல்லி இருக்கிறோம், இது தான் தந்தை பெரியாரின் தனித் தன்மை. திராவிட பேரியக்கத்தை, பெரியார் கொள்கைகளை காத்து வருபவர் ஆசிரியர் வீரமணி, சுற்றி சுற்றி பணி செய்தததை பார்க்கும் போது ஆச்சரியமாக உள்ளது, அதற்கு பெரியாரிடம் அவர் கற்ற படத்தை தான் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து எங்களை போல் இளைஞர்களை ஊக்கமளிக்க வேண்டும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக தமிழக முதலமைச்சராக பெரியாரின் தொண்டராக கேட்டுக்கொள்கிறேன், வாழ்த்துகிறேன்.
இன்று தந்தை பெரியாரை உலகமயமாக்கி உலகத்தின் பொது செத்தாக கொண்டு சேர்த்திருக்கிறோம். இந்த நூலகத்தை உருவாக்கிய ஆசிரியர் வீரமணி அவர்களுக்கும் அன்புராஜ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். 1974 ஆம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக இருந்த போது இங்கு பகுத்தறிவு நூலகத்தை தொடங்கி வைத்திருக்கிறார். இன்று பெரியார் திடலில் டிஜிட்டல் நூலகத்தை எல்லா வகையிலும் பயன்படும் வகையில் அவரின் மகன் ஸ்டாலின் முதலமைச்சராக வந்து தொடங்கி வைத்துள்ளேன். எப்பவும் பயனுள்ள பணிகளை பார்த்து பார்த்து செய்யக்கூடியவர் ஆசிரியர்.
பெரியாருக்கு கம்பீரமான சிலை இளைய சமூகத்திற்கு பயன்படும் வகையில் நூலகம் அமைத்து வைக்கம் விழாவை சிறப்பாக நடத்தினோம், அப்போது நான் உணர்ந்தது ஐயா ஆசிரியர் மெய் மறந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாராட்டி வாழ்த்தினார், இன்னும் என்னை நீங்கள் பாராட்டி வாழ்த்த வேண்டும் அதற்கு நான் காத்திருப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பெரியார் நினைவிடத்தில் மரியாதை செய்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திராவிட தலைவர் கி வீரமணி, தந்தை பெரியார் உடலால் மறைந்தாலும் உணர்வால் நிறைந்திருக்கிறார். பெரியார் நினைவுகள் பல வகையான உயிரோட்டங்களாக உலகம் முழுவதும் உள்ளது. வைக்கம் கொண்டாட்டம் வெற்றி விழா என்பது இரு மாநில அரசுகள் நடத்திய அந்த நிகழ்ச்சி மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது. தீண்டாமை அழிந்து ஜாதியற்ற புதிய சமுதாயம் அடிமைகளும் ,அறியாமையும் இருக்கக்கூடாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 51 வது நினைவு தினத்தை நாம் அனுசரிக்கிறோம். பெரியார் மறைவுக்குப் பின் திராவிட இயக்கங்கள் இருக்காது சுயமரியாதை இயக்கத்திற்கு வேலை இல்லை என்று எதிரிகள் நினைத்தார்கள். குறிப்பாக திராவிட மாடல் தலைவராக உள்ள முதலமைச்சரின் மு க ஸ்டாலின் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பாக பேசினார்.
எதிர்ப்புகள் வந்து கொண்டே தான் இருக்கும் அவற்றை உரங்களாக எடுத்துக்கொண்டு பயிர்களை சிறப்பாக வளர்க்க வேண்டும். உலகம் முழுவதும் பெரியார் கொண்டாடப்படுகிறார். இளைஞர்கள் பெரியாரைப் பார்க்க விட்டாலும் அவரின் எழுத்துக்களால் கவர்ந்த அறிவு புரட்சியாக மேலும் மேலும் சிறப்பாக வளர்ந்து கொண்டு உள்ளது. எதிர்நீச்சல் அடிப்பது இந்த இயக்கத்திற்கு சிறப்பானது வாடிக்கையானது அது வெற்றி பெறக் கூடியது என்பதுதான் இந்த நடப்புகள் தெளிவாக காட்டுகின்றன. நூறாண்டு காலம் வரலாற்றில் எதிர்ப்புகளை சுயமரியாதை இயக்கம் சந்தித்துதான் வந்துள்ளது. மேலும் எதிர்ப்புகள் வரும்போது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி களமாடும் இயக்கமாக இந்த இயக்கம் என்றும் நடமாடும் என்றார்.
இன்று திறக்கப்பட்ட பெரியார் பகுத்தறிவு டிஜிட்டல் நூலகத்தில், திராவிட இயக்க நூல்களையும், தமிழில் வெளிவந்த டிஜிட்டல் நூல்களையும் படிக்கும் வசதி உள்ளது. தமிழில் இயங்கும் மின் நூலகங்களையும், ஆவணக் களஞ்சியங்களையும் அணுகும் வசதியும், உலகில் முதன்மையான மின் நூலகங்களின் புத்தகங்களையும் ஆவணங்களையும் இங்கிருந்தே படிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 4450 சதுர அடியுடன், மூன்று தளங்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 1,06,874 நூல்கள் உள்ளன. நூறு ஆண்டுகளுக்கும் முந்தைய திராவிட இயக்க இதழ்கள் முதல் நடப்பு வரையிலான ஆவணங்கள், ஒலி ஒளி பதிவுகள், பாதுகாப்பு மின்னாக்க பணிகள், நகல்வடுப்பு, குறிப்புதவி உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் இந்த பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யத்தில் உள்ளன. பெரியார் தடியால் தடைகளை உடைதெரிவது போல் காணொளி ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது.