இன்றைய நிலையில் நாட்டில் மிகப்பெரிய அளவில் பொருளாதார நெருக்கடி உள்ளதாகவும், அதில் இருந்து திசை திருப்ப கல்விக்கொள்கை விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.
மும்மொழி கொள்கை விவகாரத்தில் பாஜகவின் செயல்பாடுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- இந்தியாவில் முதல் மொழிகளுக்கான கணக்கெடுப்பு கடந்த 1894ஆம் ஆண்டு முதல் 1928ஆம் ஆண்டு வரை பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நடைபெற்றது. அதில் நாட்டில் மொத்தம் 733 மொழிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதில் 10 சதவிகிதம் மொழிகள், பழங்குடியின மொழியாகும். இவற்றில் பெரும்பாலன மொழிகள் அழிந்து விட்டது. இதற்கு காரணம் பின்னர் 10 ஆயிரம் பேருக்கு குறைவாக பேசினால் அதை மொழிக் கணக்கில் சேர்க்க வேண்டாம் என்றார்கள். இப்படி குறைத்துக்கொண்டே வந்து 220 மொழியாக மாறியது. இதில் எழுத்துருக்களை பல மொழிகள் இழந்துவிட்டன. சில மொழிகளுக்கு எழுத்துருக்கள் உள்ளன. நூற்றில் ஒரு மொழியான இந்தியின் எண்ணிக்கை எப்படி உயர்கிறது என்றால்? பிராந்திய மொழிகள் அழிவுறும்போது அடுத்த அடுத்த கணக்கெடுப்பில் இந்தி என்று குறிப்பிடுவதுதான் இதற்கு காரணமாகும். இந்தியை கற்றுக்கொண்டால், அந்த மொழி உங்களுக்கு நிச்சயம் உதவாது. ஏனென்றால் அந்த அந்த மாநிலங்களில் உள்ளூர் மொழிகளுடன் கலந்தே இந்தி பேசப்படும். அதனால் நாம் இந்தியை கற்றுக் கொண்டும் பயனில்லை. இதற்கெல்லாம் நமது பலமான எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனக்கூட்டத்தை போட்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மும்மொழி கொள்கைதான் சிறந்து என்று சொல்கிறார். அதற்கு உதாரணம் கேட்டால், டாஸ்மாக்கில் ஊழல் நடைபெறுகிறது என்று சொல்லுகிறார். அமித்ஷா மகன் எப்படி கிரிக்கெட் வாரிய தலைவராகினார் என்று நாமும் கேட்கலாம். இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டில் நடைபெறும் பிரச்சினைகளை திமுக திசைத் திருப்புகிறது என்றால், நீங்களும் அதைதான் செய்கிறீர்கள். இப்போது மொழி ரீதியான இந்த விவாதம் இந்தியாவுக்கு எந்த விதத்தில் தேவையானது? நாம் மிகப்பெரிய அளவில் பொருளாதார நெருக்கடியில் இருக்கிறோம். நாட்டில் பெரிய அளவில் வேலைவாய்ப்பின்மை இருக்கிறது. கிராமப்புற வறுமை வாட்டி வதைக்கிறது. அப்படி இருக்கையில் இதை பேச வேண்டிய நிலையை பாஜகதான் ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டின் பிரச்சினைகளில் இருந்து திமுக திசை திருப்புகிறது என்றால், இந்தியாவின் பிரச்சினைகளில் இருந்து பாஜக திசை திருப்புகிறது அல்லவா? அதுமட்டும் சரியானதா? டிரம்ப் மாற்றி மாற்றி வரி விதித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு ஐரோப்பிய ஒன்றியமும் வரி விதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் இவ்வளவு பெரிய பிரச்சினைகள் இருக்கிறபோது, இங்குள்ள பாஜக, தர்மேந்திர பிரதான், அண்ணாமலை எதை பற்றி பேசுகிறார்கள் என்றால் தேசிய கல்விக்கொள்கை. அந்த தேசிய கல்விக்கொள்கை எதற்கு? ஒரே மாதிரியான கல்வி கொள்கை என்றால், அதற்கு ஒரே மாதிரியான கற்றல் முறை இங்கே இருக்கிறதா? முதலில் நீங்கள் அதை கொண்டுவர வேண்டும். இது புதிய கல்விக்கொள்கை அல்ல 3வது கல்விக் கொள்கையாகும். முதல் 2 கல்விக்கொள்கைகளும் 10 பைசாவுக்கு தேராமல் போய்விட்டது. புதிய கல்விக் கொள்கையின் சிறப்பம்சம் என்ன? பஞ்ச கோஷ் கொண்டுவந்து விட்டீர்கள். ஐந்து வகையான நிலை. அதிலிருந்து மாணவர்களுக்கு ஹோலிஸ்டிக் அப்ரோச். அதுதான் பி.எம். ஸ்ரீ பள்ளிகளின் நோக்கமாகும். அந்த நிலைகள் என்ன என்றால் கடைசியில் ஆனந்தமய கோஷ் அடைவதுதான்.

அதில் ஒன்றை விஞ்ஞானபய கோஷ் என்கிறார்கள். இது விஞ்ஞானம் தொடர்பானது என்று பார்த்தால் பகுத்தறிவு என்று சொல்கிறார்கள். அதைதானே பெரியார் இவ்வளவு நாட்களாக சொல்லிக்கொண்டிருக்கிறார். இதற்கு நாங்கள் எந்த காலத்திலேயே போய் விட்டோமே. அப்படி சொல்லும்போது நீங்கள் பிரபஞ்சத்தில் இருந்து எடுக்க வேண்டும் என்று நண்பர் ஒருவர் சொன்னார். அதைதான் அண்டத்தில் உள்ளது பிண்டம் என்று நாங்கள் சொல்கிறோம். ஆயிரம் வருடங்களுக்கு மேலாக எங்களுக்கு தெரிந்த விஷயத்தைதான் மீண்டும் புதிய கல்விக்கொள்கை என்று கொண்டுவருகிறீர்களா? அதுதான் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்கிறார். ஏற்கனவே எங்களுக்கு தெரிந்த விஷயத்தை எங்களிடம் வந்து திணிக்கிறீர்களா? என முதலமைச்சர் கேட்கிறார். இந்த பிரச்சினை மோதல் போக்கோடுதான் முடிக்கு வரும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.