மன்னராட்சியை எதிர்ப்பதாக கூறும் ஆதவ் அர்ஜுனா, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆக உதவி புரிந்தது ஏன் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் ஆதவ் அர்ஜுனா மீது திருமா எடுக்கும் முடிவு தான் அவர் மீதான நம்பகத் தன்மையை தீர்மானிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய், விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் திமுகவை கடுமையாக விமர்சித்தனர். மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது என திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டி இருந்தனர். இந்த நிலையில், இந்த பிரச்சினைகள் அனைத்துக்கும் மூலக் காரணம் ஆதவ் அர்ஜுனா தான் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் திருமா வேடிக்கை பார்ப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக பிரபல யூடியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:- அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா மேடையை முழுக்க முழுக்க அரசியலுக்கு பயன்படுத்த விதை போட்டவர் ஆதவ் அர்ஜுனா. அதை வேடிக்கை பார்த்தவர் திருமாவளவன். எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் ஒரு கட்சியின் தலைவராக விஜய் பங்கேற்பதிலும், அதே மேடையில் திருமாவளவனும் பங்கேற்பது ஒன்றும் தவறு இல்லை. ஆனால் ஒரு கூட்டணியில் தொடர்ந்து கொண்டே, பேச வேண்டிய நேரம் இதுவல்ல என்பதை தெரிந்து கொண்டே ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என திருமாவளன் கேட்கிறார். அதை தர வேண்டிய திமுக அமைதி காக்கிறது. அப்போது, ஆட்சியில் பங்கு நான் தருகிறேன் என சொல்லும் விஜய் உடன் அவர் நூல் வெளியீட்டு விழாவில் ஒரே மேடையில் இடம்பெற்றால் எப்படி இருக்கும். ஆட்சியில் பங்கு தொடர்பாக இருவரும் பேசிய சில மாதங்களில் இதுபோன்ற மேடையில் பங்கேற்றால் என்ன மாதிரியான விவாதத்தை கிளப்பும் என்பதை புரியாதவர் அல்ல திருமாவளவன். அதனால் தான் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
விஜய் மாநாட்டில் பேசிய பேச்சுக்கும், விகடன் நிகழ்ச்சியில் பேசிய பேச்சுக்கும் இந்த விழாவில் நான் பங்கேற்றது மட்டுமின்றி நீயும் பங்கேற்பது சரியல்ல என்று ஆதவ் அர்ஜுனாவிடம் தெரிவித்திருக்க வேண்டியவர் திருமா. ஆதவ் கருத்து அவர், வாய்ஸ் ஆப் காமன் அமைப்பின் நிறுவனர் என்ற முறையில் பேசியதாக இருக்கலாம். ஆனால், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் அவர். விகடனை, பிரபல நாளிதழை ஏன் கேள்வி கேட்க வில்லை என கூறும் திருமாவளவன், இந்த நிகழ்ச்சி இந்த வடிவத்தில் இப்போது தேவையா? என்று ஆதவ் அர்ஜுனாவிடம் கேட்டாரா? நீங்கள் கேட்டீர்கள் என்றால் அதற்கு ஆதவ் அளித்த பதில் என்ன? இதற்கு திருமா பதில் அளிக்க வேண்டும். அதைவிடுத்து அவர் எத்தனை பக்க அறிக்கை விட்டாலும் பயனில்லை.
ஆதவின் நூல் வெளியீட்டு விழா பேச்சு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், அது அவரது மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளதாகவும், இது குறித்து ஆதவிடம் விளக்கம் கேட்கப்படும் எனறும் தெரிவித்துள்ளார். எத்தனை முறைதான் அவர் ஆதவிடம் விளக்கம் கேட்பார். தவறு செய்தவர் ஆதவ் அர்ஜுனா, நீங்கள் எத்தனை முறை அவர் கூட்டணியை உரசுவது போன்று பேசுதை வேடிக்கை பார்ப்பீர்கள். விகடன் புத்தக விற்பனையை அதிகரிக்கவும், பிரபல நாளிதழ் பலமான திமுக கூட்டணியை முறிக்க வேண்டும் என்பதற்காக எழுதியதாக கூறும் நீங்களே அதற்கு துணை போகலாமா?. நூல் வெளியீட்டு விழா தொடர்பான தகவலை கசியஎ விட்டது யார் என்று மற்றவர்களை கேள்வி கேட்கும் திருமா, முதலில் ஆதவிடம் இது குறித்து கேட்டாரா? அதற்கு ஆதவ் அளித்த பதில் என்ன? திருமாவளவனுக்கு நெருக்கடியையும், நிர்பந்தத்தையும் ஏற்படுத்தும் ஒரேநபர் ஆதவ் அர்ஜுனா தான். திருமா, இதனை எவ்வளவு காலம் வேடிக்கை பார்க்க போகிறார்.
யாருடைய அழுத்தத்திற்கும் நான் அடிபணிய மாட்டேன் என்று கூறும் திருமாவளவன், ஆதவ் அர்ஜுனாவின் மறைமுக அழுத்தத்திற்கு அடிபணிவது ஏன். கூட்டணியை உடைக்கும் விதமான ஆதவின் பேச்சுக்களை வேடிக்கை பார்க்கும் திருமா, இது தொடர்பாக அவருக்கு ஒரு முறையாவது விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளாரா?. அல்லது இதுதான் தனது ஸ்ட்ராட்டர்ஜி என எண்ணுகிறாரா?, அப்படி எனில் திருமாவிடம் குறைந்தபட்ச நேர்மையை நான் எதிர்பார்க்கிறேன். இந்த விவகாரம் திருமாவளவன், ஆதவ் அர்ஜுனா ஆகிய இருவர் இடையிலான பிரச்சினை தான். திருமாவளவன் வேறு யாரையும் துணைக்கு அழைத்தாலும், ஒரு பொறுட்டாகக்கூட மதிக்க மாட்டார்கள்.
மன்னராட்சி முறையை ஒழிக்கப்போவதாக ஆதவ் அர்ஜுனா கூறுகிறார். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. அவ்வாறு மன்னரின் வாரிசு என கூறப்படுவருக்கு வாக்களிப்பது மக்களி தனிப்பட்ட விருப்பம். அவ்வாறு மக்கள் வாக்களித்து வெற்றி பெற்றால் அது மன்னராட்சி கிடையாது. ஆதவ் அர்ஜுனா கூறுவதுபோல திமுக ஆட்சி மன்னராட்சி என்று வைத்துக் கொண்டாலும், அது அமைய காரணமாக உள்ளது கூட்டணி. இந்த கூட்டணி அமைப்பதில் பெரும் பங்கு வகித்தவன் நான் என திருமாவளவன் அடிக்கடி கூற கேட்டுள்ளோம். அப்படி எனில் மன்னராட்சியை உருவாக்கிய உங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம். அப்போது கலைஞரின் மகன் ஸ்டாலின் முதலமைச்சராவை தடுக்காமல் வேடிக்கை பார்த்த நீங்கள், இன்று ஸ்டாலின் மகன் உதயநிதி முதலமைச்சர் ஆவதை மட்டும் தடுப்பேன் என கூறுவது ஏன்?. அல்லது ஸ்டாலின் வரை எல்லாம் ஓகே, உதயநிதி மட்டும் வேண்டாம் என்று எண்ணுகிறீர்களா. இதற்கு காரணம் ஆதவ் அர்ஜுனாவின் தனிப்பட்ட அரசியல் அபிலாஷைகள் தான். காஞ்சிபுரம் திமுக மாநாட்டில் நின்ற திருமாவின் பேச்சும், நேற்று விகடன் மேடையில் ஆதவின் பேச்சும் முற்றிலும் மாறுபட்டது. இதற்கு திருமாவளவன் தான் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லா விட்டால் திருமாவளவன் தலைமை பண்பை இழந்து விட்டார் என்றே அர்த்தமாகும்.
விஜயிடம் ஆதவ் அர்ஜுனாவை ரசிக்க வைத்து எது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தானே. எடப்பாடி பழனிசாமியோ, மு.க.ஸ்டாலினோ இதற்கு பதில் அளிக்காத நிலையில், விஜய் அவசரப்பட்டு இந்த வாக்குறுதியை அளித்ததால் அவரிடம் செல்வது தான் உங்கள் திட்டம் என்றால், உங்களிடம் என்ன அரசியல் பார்வை உள்ளது. திருமாவளவனை தலைவராக ஏற்றுக் கொண்டுள்ள ஆதவ் அர்ஜுன், மேடையில் விஜயை புகழ்வது ஏன். அம்பேத்கர் பிறந்த மகாராஷ்டிராவுக்கு முன்னதாகவே தமிழ்நாட்டில் உள்ள கல்லுரிகளுக்கு அவருடைய பெயரை வைத்தது திராவிட இயக்கம் ஆகும். ஆதவின் பேச்சு என்பது விஜயை புகழ்வதும், புத்தகத்தை விளம்பரப்படுத்துவது மட்டும் தான். அதனால் தான் ஆதவின் பேச்சை, அக்கட்சியை சேர்ந்த ஆளுர் ஷாநவாஸ் கூட எதிர்க்கிறார். அவருக்கு புரிந்த அரசியல் திருமாவுக்கு புரியாமல் இருக்கிறது. இந்த விவகாரத்தில் திருமாவளவன் எடுக்கும் முடிவும், அவர் பெறும் தெளிவும் தான் அவர் மீதான நம்பகத் தன்மையை தீர்மானிக்கும். ஆனால் அவர் வெளியிடும் அறிக்கை ஆதவை காப்பாற்றும் விதமாக உள்ளது.
வேங்கை வயல் விவகாரம் குறித்து தனது மனவேதனையை வெளிப்படுத்திய விஜய், அங்கு நேரில் சென்று மக்களை பார்த்தாரா?, அல்லது அதற்காக வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தினாரா? அல்லது அதை கண்டித்து ஒரு டிவிட் தான் போட்டாரா?. இந்த விவகாரத்தில் இவ்வளவு நாள் விஜய் அமைதியா இருந்தது ஏன். மேடை கிடைக்கும் போது தான் இதுகுறித்து பேசுவீர்களா. இது தான் உங்கள் அரசியலா?. சம்பிரதாயத்துக்கு புகைப்படம் எடுப்பது, அறிக்கை விடுவது பிடிக்காது என்று கூறும் விஜய், தனது வீட்டில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய புகைப் படங்களை ஏன் செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பினார். ஏன் கட்சி சார்பில் அறிக்கை மட்டும் விட்டிருக்கலாம் அல்லவா. நீங்கள் நான் வெளியே வந்தால் மக்கள் கூட்டம் கூடுவார்கள் எனறு கூச்சப்பட்டுக் கொண்டு வீட்டிற்குள்ளே இருந்தால், திடீரென மக்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவார்கள் என எண்ணக் கூடாது. மக்களை சந்திப்பதில் உள்ள சங்கடங்களை சம்பிரதாயம் என கூறி சமாளிக்க முயற்சிக்கக்கூடாது.
விஜய் நூல் வெளியீட்டு விழா பேச்சு என்பது, மாநாட்டு பேச்சை விட சற்று கூர்படுத்தியுள்ளார். அதற்கு திமுக தான் பதில் அளிக்க வேண்டும். அம்பேத்கரை பெருமைப்படுத்தும் நூல் வெளியீட்டு விழாவில் கூட திருமாவளவன் பங்கேற்கவில்லை என விஜய் கூறுகிறார். ஆனால் திமுகவை விமர்சிப்பது தான் அம்பேத்கரை பெருமைப்படுத்தும் செயலா?. திமுக எதிர்ப்பு என்ற சிறு வடத்திற்குள் அம்பேத்கரை சுருக்க வேண்டாம். அந்த விழாவில் விஜய் பேசியது அரசியல். அதற்கு திமுக பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.