பல்கலைக்கழக துணை வேந்தர் நியமன விவகாரத்தில் மாநில அரசின் பங்கை இல்லாமல் செய்வது, மத்திய அரசின் அதிகார மீறல் என்று பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு குற்றம்சாட்டியுள்ளளார். மேலும், இந்த விவகாரத்தில் மாநில அரசு தனக்குள்ள அரசியலமைப்பு சட்ட உரிமையை பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்வது தொடர்பாக யூஜிசி வெளியிட்டுள்ள வரைவு அறிக்கையின் பின்னணி குறித்து பிரின்ஸ் கஜேந்திரபாபு யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- துணை வேந்தர் தேர்வு விவகாரம் தொடர்பான யூஜிசியின் வரைவு அறிக்கை என்பது மிகவும் கவலையோடு பார்க்க வேண்டிய விஷயமாக பார்க்கிறேன். அரசமைப்பு சட்டத்தை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் பல்கலைக் கழக மானிய குழு இதுபோன்ற சட்ட வரைவு விதிகளை உருவாக்க முடிகிறது என்றால், அந்த பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு அரசமைப்பு சட்டம் குறித்து என்ன புரிதல் இருக்கும் என்ற முக்கியமான கேள்வி எழுகிறது. இது யரோ ஒருவரின் அதிகாரத்தை பறிக்கின்ற செயல் என்று மட்டும் பார்க்க முடியாது. அந்த சட்டம் தனக்கு வழங்கும் அதிகார வரம்பை மீறி செய்யப்பட்ட ஒரு செயலாக பார்க்க வேண்டும்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் பரிந்துரையின் பேரில் கடந்த 1950களில் முதன் முறையாக பல்கலைக்கழக மானியக்குழு சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் நோக்கம் என்ன என்றால், இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் உள்ளன. அந்த மாநிலங்களுக்கு தங்களுக்கான பல்கலைக் கழங்களை உருவாக்க உரிமை உள்ளது. அவ்வாறு உருவாக்கப்படும் பல்கலைக் கழகங்களுக்கு தரம் குறித்த ஆலோசனை தேவைப்பட்டால், உயர் ஆய்வில் தேவைப்படும் ஆலோசனைகளை யூஜிசி வழங்கலாம். அதனை தாண்டி பல்வேறு துறைகளில் வெளிநாடுகளில் நிகழும் மாற்றங்கள் குறித்து வழி காட்டுதல்களை வழங்கலாம். பாடத்தை எப்படி படிக்க வேண்டும், எப்படி பாடம் நடத்தலாம் என்று யூஜிசி வழிகாட்டுதலை வழங்கும். அதில் தேவையான அளவு நாம் எடுத்துக் கொள்ளலாம். உதாரணமாக ஒரு பல்கலைக் கழகத்திற்கு பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றால், அந்த பேராசிரியருக்கு என்ன என்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்றும், குறைந்தபட்ச ஊதியம் வழங்குவது உள்ளளிட்டவை குறித்த வழிகாட்டுதல்களை வழங்கும். இதனை ஏற்பதும், ஏற்காததும் மாநில அரசின் சொந்த முடிவாகும். அதேபோல், ஆய்வு மாணவர்களுக்கு நிதி வழங்கவும், ஆராய்ச்சியில் ஈடுபடும் பல்கலைக் கழங்களுக்கு நிதி வழங்கவும் தொடங்கப்பட்ட ஒரு அமைப்புதான் யுஜிசியே தவிர, மாநில அரசின் பல்கலைக் கழகங்களை கட்டுப்படுத்துவதற்காக தொடங்கப்படவில்லை
1980-களில் உலகம் முழுவதும் தாராளமய போக்கு தொடங்கி, 1990-களில் தாராளமயம், தனியார் மயம், உலகமயம் என மிகப்பெரிய வீச்சு எடுக்கிறது. அப்போது வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை இந்தியாவிற்குள் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களை கட்டுப்படுத்துவது யார் என்றும், சட்ட அங்கீகாரம் வழங்கவும் யூஜிசியின் சட்ட விதிகளில் திருத்தங்கள் கொண்டுவந்தனர். தற்போது பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு விட்டது. அந்த திருத்தங்கள் அதன் அடிப்படை நோக்கங்களுக்கு எதிராகத்தான் செயல்பட தொடங்கின. திருத்தங்களை ஏற்பதும், ஏற்காததும் மாநிலங்களின் விருப்பம் ஆகும். ஆனால் செய்துதான் ஆக வேண்டும் என்று கட்டாயம் இல்லை. தமிழ்நாடு அரசு சட்டங்களை கொண்டுவந்து 13 பல்கலைக் கழகங்களை உருவாக்கி வைத்துள்ளது. அப்போது, சட்டம் பெரியதா? அல்லது சட்ட விதிகள் பெரியதா என்று பார்த்தால் சட்டம் தான் பெரியது. அதனால் தமிழக அரசு இயற்றியுள்ள சட்டம்தான் செல்லும். அதனால்தான் யூஜிசி என்ன கடிவாளம் போடுகிறார்கள் என்றால், தேசிய கல்விக்கொள்கையின் கூறுகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், நீங்கள் பட்டப்படிப்பை நடத்த முடியாது என்கிறார்கள். அதாவது தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் செல்லாது என எச்சரிக்கை விடுக்கின்றனர். அதை சொல்வதற்கு யுஜிசிக்கு அதிகாரம் இல்லை. கலிபோர்னியா பல்கலை.யில் பட்டம் பெறுகிறேன் என்றால், அந்த பட்டம் செல்லுமா? செல்லாதா? என்று சொல்ல நீங்கள் யார்? சென்னை பல்கலை.யில் பட்டம் பெற்று ஆக்ஸ்போர்டில் மேற்படிப்பு படிக்க சென்றால் அதனை ஆக்ஸ்போர்டு ஏற்கிறது. ஆனால் நீங்கள் ஏற்க மாட்டீர்களா? , மிரட்டலுக்கு உள்ளான மனநிலையை உருவாக்குகிறார்கள்.
மெக்கார்த்திசம் என்பது அரசுக்கு எதிராக பேசுவது தவறு என்ற பயத்தை மாநில அரசுகளுக்கு உருவாக்குகிறார்கள். அம்பேத்கர் என்றால் அவர்கள் அரசியலமைப்பு சட்டம் என்றுதான் பார்க்கிறார்கள். யூஜிசியின் இந்த சட்ட வரைவை ஒரு சூழ்ச்சியின் நீட்சியாகத்தான் பார்க்கிறேன். இந்த விவகாரத்தில் மத்திய அரசிடம் இருந்து கேள்வி கேட்டு, அரசை பதில் சொல்ல வைக்க வேண்டிய இடத்தில் யார் உள்ளனர் என்றால், நாடாளுமன்றம் உள்ளது. எனவே பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் வலுவாக சொல்ல வேண்டும். மக்களுக்கு தெரியப்படுத்தாமல் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்றால், சட்டப்படி மாநில அரசுக்கு உள்ள வாய்ப்புகளை பயன்படுத்திய பின்னர் தான் செல்ல வேண்டும்.
நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் விவாதிக்க என்ன என்ன கூறுகள் உள்ளது என்றால் கஸ்தூரி ரங்கன் குழு கூறியுள்ளது. அதன் அறிக்கையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பாக சட்டங்கள் இயற்ற வேண்டிய அவசியம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுதான் வரைவு தேசிய கல்வி கொள்கை 2019. அதன் பிறகு தான் மற்ற சட்டங்கள். கஸ்தூரி ரங்கன் இந்த பரிந்துரைகளை அளிக்க காரணம் என்ன என்றால், அரசமைப்பு சட்டத்தில் கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. பல்கலைக் கழகம் யாருடைய பட்டியலில் உள்ளது என்றால், மாநில அரசுக்கு உள்ளது. மத்திய அரசு பல்கலைக் கழங்களை உருவாக்க அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அப்படி சட்டத்தின்படி நிறுவப்பட்ட பல்கலைக் கழங்களில் நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும், நிர்வாகி தேர்வு எப்படி இருக்க வேண்டும் என்றும் அந்த சட்டம் சொல்கிறது. துணைவேந்தர் அந்த தலைமை பொறுப்பில் உள்ளார் என்றால், அவருக்கான தகுதிகள் என்ன? அவரை தேடுதல் குழு எவ்வாறு அமைக்க வேண்டும், யார் அமைக்க வேண்டும் என்றும் விதிகள் உள்ளது.
இது குறித்து எல்லாம் சட்டமன்றத்தில் ஏன் விவாதிக்க வில்லை என்பதுதான் எனது கேள்வி. யூஜிசியின் புதிய விதிகளை திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த சட்டத்தை இன்னும் வலிமையாக இயற்ற வேண்டும். தமிழ்நாட்டு பல்கலைக் கழகம் வழங்கிய பட்டங்கள் செல்லாது என்று சொல்ல மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. அப்படி சொன்னாலும் அதனை வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் ஏற்றுக் கொள்ளாது. 1950களில் இருந்து பள்ளிகளை, கல்லுரிகளை, பல்கலைக் கழங்களை தொடங்கியது மாநில அரசுகள்தான். மத்திய அரசுகள் தொடங்கியவை அனைத்தும் உயர் ஆய்வு நிறுவனங்கள். ஆனால் தமிழக பல்கலைக் கழகங்கள் அனைத்து தரப்பினருக்கான பல்கலைக்கழங்கள். சமூக நீதிக்காக உருவாக்கப்பட்டவை. அதனை நடத்திய அனுபவம் மாநில அரசுக்கு இருக்கும்போது, மாநில அரசுதான் பல்கலை.க்கு யாரை துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என சட்டத்தின் படிதான் தேடுதல் குழுவை அமைக்க முடியுமே தவிர, உன் பல்கலைக் கழகத்திற்கு நான் வந்து தேடுதல் குழுவை எப்படி அமைக்க வேண்டும் என யுஜிசி சொல்கிறது என்றால், இதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அப்படி ஒரு தலைமுறைக்கு பட்டம் கிடைக்கா விட்டாலும் பரவா இல்லை. எனவே இந்த விவகாரத்தில் மாநில அரசு தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்.
மத்திய பல்கலைக் கழகங்களுக்கு குடியரசுத் தலைவர் வேந்தர் என்றாலும், அவர் பிரதமர் தலைமையிலான அமைச்சரவை குழுவின் பரிந்துரைகளை ஏற்றே துணை வேந்தரை நியமிக்க முடியும். தனியார் பல்கலைக் கழகங்களுக்கு அதன் உரிமையாளர் தான் துணைவேந்தருக்கான தேடுதல் குழுவை அமைக்க முடியும். ஒரு முதலாளி தேடுதல் குழு அமைக்கலாம் என்றால், தமிழக அரசின் பணத்தில் உருவாக்கப்பட்ட பல்கலைக் கழகத்திற்கு, வேந்தர் என்பவர் ஒரு கவுரவப்பதவி ஆளுநருக்கு அளிக்கப்பட்டுள்ளது அவ்வளவுதான். அவரால் ஆலோனை வழங்கவும் முடியும், வழிகாட்டுதல்களை வழங்க முடியும் அவ்வளவுதான். அவரால் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது. இங்கே சட்டமன்றம் உள்ளது. முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை உள்ளது. தர்க்க ரீதியாக பார்த்தாலும் துணை வேந்தர் நியமன விவகாரத்தில், தனியாருக்கு ஒரு விதி, மாநில அரசுக்கு விதி என்று கூறலாமா?.
ஆளுநர் தனக்கு அதிகாரம் உள்ளது என்று நினைக்கிறார். நான் நினைத்தால் மசோதாக்களில் கையெழுத்து போட மாட்டேன் என்று கூறுகிற அதிகாரம் அவருக்கு எங்கிருந்து வந்தது என்றால், அவர் இன்னும் காலனி ஆதிக்க மனநிலையில் இருந்து வெளியே வரவில்லை என்பது தான் அர்த்தம். கூட்டாட்சி உள்ளிட்ட எந்த தத்துவத்தின் அடிப்படையில் நீங்கள் பேசினாலும் அனைத்து உரிமைகளும் மாநில அரசுக்கு தான் உள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் 1949ல் தனது நிறைவு உரையில் பேசியபோது, மாநிலங்கள் நகராட்சி அளவிற்கு தனது அதிகாரங்களை குறைத்துக்கொள்ளும் என குற்றம்சாட்டுகிறீர்கள். அப்படி இருக்க அரசியலமைப்பு சட்டத்தின்படி சாத்தியமே இல்லை. மாநிலமும், மத்திய அரசும் சமம். மாநிலங்களுக்கு இந்த உரிமையை அரசியலமைப்புச் சட்டம்துதான் கொடுக்கிறது. மத்திய அரசிடம் இருந்து கொடுக்கவில்லை. இந்த எல்லையை மத்திய அரசு நினைத்தாலோ, நீதிமன்றம் நினைத்தால் மாற்றிக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார். அதனால், ஒரு வலுவான அரசமைப்புச் சட்டம் உள்ளது என்றால் அதை பாதுகாக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது. மாணவர்களுக்கு பட்டம் செல்லா விட்டாலும் பரவாஇல்லை. போராட வேண்டும். எனவே ஒட்டு மொத்தமாக இந்த வரைவை திரும்ப பெற வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.