திமுகவின் வாக்கை பிரிக்க பண்ருட்டி வேல்முருகன், எடப்பாடி பழனிசாமி ஆதரவுடன் தனி கூட்டமைப்பை உருவாக்க முயற்சித்து வருவதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைவது உறுதி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்றைய அரசியல் சூழல் குறித்தும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் கூட்டணி குறித்தும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் பிரபல யூடியூப் நிறுவனத்திற்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :- ஆதவ் அர்ஜுனா விசிகவில் குழப்பம் ஏற்படுத்த முயன்றது என்பது ஒரு ஆபரேஷன். இதற்கு தலைமை வகித்தது அதிமுக. அதிமுக – பாஜக கட்சிகள், திமுக கூட்டணி பலமாக இருக்கக்கூடாது என்பதற்காக அதில் ஆதவ் அர்ஜுனாவை இறக்கிவிட்டனர். அவர் தனது லாட்டரி செல்வாக்கையும் பயன்படுத்தி விசிகவை சீர்குலைக்க முயற்சித்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. தற்போது தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதனால் விசிகவை, திமுக கூட்டணியில் இருந்து கூட்டிவர முயற்சி செய்தார்கள். ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்துவிட்டது. ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அதுவும் உறுதி செய்யப்பட்டு அவர் விஜய் கட்சிக்கு செல்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் யாரையும் கட்சியில் சேர்ப்பது இல்லை என்பதில் உறுதியாக உள்ளார்.
இந்த விவகாரம் எப்படி தெரிய வந்தது என்றால், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த காளியம்மாள், விஜய் கட்சியில் சேர பல்வேறு வகைகளில் முயற்சித்து வந்தார். ஆனால் அவரது செயல்பாடு தெரிந்ததால் விஜய், அவரை தனது கட்சியில் சேர்க்கவில்லை. இதற்கு பின்னர் ஆதவ் அர்ஜுனா அதிமுகவுக்கு செல்ல முயற்சித்தார். எடப்பாடி பழனிசாமியிடம் அப்ளிகேஷன் போட்டு, விஜயை சாக்காக வைத்து, விசிகவை தூக்குவது திட்டம். ஆனால் இது லாட்டரிக்கான வேலை என ஆதவ் அர்ஜுனா எக்ஸ்போஸ் ஆகிவிட்டார். இப்போது ஆதவை அதிமுகவில் சேர்த்தால் லாட்டரி பணத்திற்காக சேர்த்ததாக விமர்சனம் எழும். மேலும் விசிகவிலேயே கட்சி கட்டுப்பாட்டை மீறியவர், அதிமுகவுக்கு வந்தால் என்னாவது என்று பயம் உள்ளது. எனவே அதிமுக ஆதவை சேர்க்க மறுத்துவிட்டது.
விசிக – ஆதவ் அர்ஜுனா விவகாரம் முடிந்துவிட்டது. அடுத்தது யார் என்று பார்த்தால் பண்ருட்டி வேல்முருகன். அவரது கோரிக்கைகளை பார்த்தால் முதல்வர் வரவில்லை, துணை முதல்வர் வரவில்லை என்று சொல்கிறார். திமுகவிடம் கேட்டால், சி.எம். எப்போதும் சேம்பரிலேயே இருக்க வேண்டும், சி.எம். எப்போது வந்தாலும் வேல்முருகனை பார்த்துவிட்டுதான் செல்ல வேண்டும் என நினைக்கிறாரா? என கேட்கின்றனர். இந்த பக்கம் எடப்பாடி பழனிசாமியிடமும் வேல்முருகன் பேசுகிறார். அங்கிருந்தும் பணம் தருகின்றனர். இந்த பணப்பரிமாற்றத்திற்கு மத்தியில் வேல்முருகனை பேச வைக்கிறார்கள். அடுத்து கொங்கு ஈஸ்வரன் பேசுவார். அதன் பின்னர் யார் பேசுவார்கள் என்று தெரியாது. தனது தொகுதி மக்களுக்கு ஒரு கோரிக்கை நிறைவேற்ற முடியவில்லை என்றால், தான் எதற்காக அரசியலில் இருக்க வேணடும் என வேல்முருகன் கேட்கிறார். அப்படி என்றால் அவர் கடந்த மூன்றரை ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார். இந்த மூன்றரை ஆண்டுகளில் முதலமைச்சரிடம் அவர் என்ன என்ன கோரிக்கைகள் வைத்தார். அதில் எத்தனை கோரிக்கைகள் நிறைவேற்றித் தரவில்லை என சொல்ல வேண்டும்.
தனது பண்ருட்டி தொகுதிக்கு கலைக்கல்லூரி கேட்டேன், ஆயுர்வேத கல்லூரி கேட்டேன், தரவில்லை என்கிறார். இந்த மூன்றரை ஆண்டுகளில் தெரியாத ஒரு விஷயம், ஏன் திடீரென அவருக்கு உதயம் ஆகியுள்ளது. இவர்கள் எல்லோரும் விர்ச்சுவலாக திமுகவை மிரட்டுகின்றனர். அவர்கள் அட்டென்ஷனை தேடுகிறார்கள். ஏனென்றால் தேர்தல் வருகிறது. தேர்தலில் சில சாதக, பாதகமான விஷயங்கள், சில செட்டில்மெண்ட்டுகள் உள்ளன. காசு கொடுப்பதுதான் அது. திண்டுக்கல் சீனிவாசன் சொல்வது போல 100 கோடி, 150 கோடி ரூபாய் வைத்துக்கொண்டு ஒவ்வொரு கட்சிக்கும், தொகுதிக்கும் 10 சீட், 20 சீட் மாத்தி மாத்தி கொடுப்பதில் இருக்கிறார்கள். எடப்பாடியை சொல்வதுதான் ஸ்டாலினுக்கும். இவர்களை எல்லாம் முதலமைச்சர் மெயின்டெயின் பண்ணுகிறார். திமுக ஜெயித்துவிடும் என்பது போல மெயின்டெயின் பண்ணுகிறார். அதுக்கு ஒரு செலவு உள்ளது.
தமிழக வாழ்வுரிமை கூட்டணி என்ற அமைப்பை ஏற்படுத்த வேல்முருகன் முயற்சிக்கிறார். இந்த கூட்டணி மூலம் திமுக வாக்கு வங்கியை பிரித்து, திமுகவை தோல்வி அடைய செய்வது அவர்களது திட்டம். எடப்பாடி பழனிசாமி ஆசிர்வாதத்தில் நடைபெறும் முயற்சி இது. இன்னொரு கூட்டணி அமைய வாய்ப்பு இருந்தால் இது சரிதான். நீங்கள் வாய்ப்பை ஏற்படுத்துங்கள். அதிமுகவோடு கூட்டணி அமையுங்கள். நீங்கள், விஜய், விசிகவும் சேர்த்து ஒரு கூட்டணி அமையுங்கள். அப்படி ஒரு கூட்டணி அமைத்து, அதிமுகவை உத்வேகப்படுத்துங்கள், அதுபோன்ற வாய்ப்பு உள்ளது. கடந்த தேர்தலில் வேல்முருகன் உதய சூரியன் சின்னத்தில் போட்டிபோட்டு வெற்றி பெற்றார். திமுகவினர் இவரது வெற்றிக்காக பாடுபட்டுள்ளனர். அதை எல்லாம் மறந்துவிட்டு, இப்போது புத்திசாலித்தனமாக கூட்டணியை மாற்றினால் தொகுதி மக்களுக்கு, ஆதரவாளர்களுக்கு நன்மை என்கிறார். திமுக விசிக விஷயத்திலும் சரி, வேல்முருகன் விஷயத்திலும் சரி ஒரு நிலைப்பாடு எடுத்தது. போகிறவர்கள் போங்கள். அதன் பிறகுதான் திருமாவளவன் ஒரு முடிவு எடுத்தார். நிகழ்ச்சிக்கு போகிறது என்றால் போங்கள், ஆதவ் அர்ஜுனா சொல்கிறபடி முடிவு எடுங்கள் என்று திமுக சொன்னது. திருமாவளவன் இல்லை இல்லை நான் போக மாட்டேன். நான் தான் இந்த கூட்டணி உருவாக பாடுபட்டேன் என திருமாவளவன் ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறார். ஆதவ் அதில் எக்ஸ்போஸ் ஆகிறார் வெளியே தள்ளப்படுகிறார்.
விகடன் சோ போன்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்து திமுகவை விமர்சனம் செய்தார்கள். பத்திரிகையை 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஆதவ் விலை பேசியதாக தகவல் வெளியானது. இப்போது அது மிஸ் ஃபையராகி விட்டது. அவர்கள் எதிர்பார்த்தது போல புத்தக வெளியீட்டு விழாவுக்கு திருமாவளவன் வரவில்லை. ஆதவ் அர்ஜுனா செய்த ஷோ சரியில்லை. விஜய் பேசியதும் சரியில்லை. அம்பேத்கர் நிகழ்ச்சியில், அம்பேத்கர் குறித்து யாருமே பேசவில்லை. இதனால் ஆனந்த் டெல்டும்டே வேதனை அடைந்துள்ளார். புத்தக வெளியீட்டு விழா தோல்வி அடைந்ததால் திமுகவை திருப்திப்படுத்த விகடன் முயற்சிக்கிறது. நான் முதல்வன் திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து, நம்பிக்கை விருதுகள் என்ற பெயரில் விருது ரெடி செய்து, அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைகளால் கொடுப்பது போல அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் கடந்த முறை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என குறிவைத்து செயல்பட்டு வருகிறது. இந்த இடைத் தேர்தலில் அதிமுகவின் திட்டம் என்னவென்றால், இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றாலும் வாக்கு வித்தியாசம் 10 ஆயிரம் வாக்குகளுக்குள் இருக்க வேண்டும் என நினைக்கிறது. அவர்களது நம்பிக்கைக்கு உரிய விஜய் இடைத் தேர்தலில் நிற்கபோவது இல்லை. எம்.ஜி.ஆர். திண்டுக்கல் இடைத்தேர்தலில் மாயத்தேவரை நிற்க வைத்து பரிசோதனை செய்ததுபோல, விஜய் நிற்கவைக்க வில்லை. அவர் நேரடியாக 2026 சட்டமன்ற தேர்தலில் நிற்கிறார். அப்படி என்றால் அதிமுகவுக்கு கூட்டணி யார் வருவது. அமித்ஷா விவகாரத்தில் விசிக, திமுக, காங்கிரஸ் என அனைவரும் எதிர்ப்பு இயக்கம் நடத்துகின்றனர். ஆனால் இந்த விவகாரத்தில் அதிமுக வாயே திறக்கவில்லை. இந்த விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவிக்காமல், ஜெயக்குமார் தெரிவித்ததே தனது கருத்து என்கிறார். ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் குறித்தும் அதிமுக வாய் திறக்க வில்லை. சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த உத்தரபிரதேச நீதிமன்ற நீதிபதி மீதான தகுதி நீக்க விவகாரத்திலும் அதிமுக கையெழுத்து போடவில்லை.
ஈரோடு கிழக்கு தேர்தலில் அதிமுக – பாஜக நெருக்கம் உருவாகிறது. இதற்கு தடை யார் என்றால் அண்ணாமலை தான். இதனால் உடனடியாக அவரது மைத்துனர் சிவக்குமார் வீட்டில் ரெய்டு நடைபெறுகிறது. சிவகுமாருக்கு நெருக்கமான செந்தில் என்பவரது வீட்டிலும் ரெய்டு நடைபெறுகிறது. அரவக்குறிச்சி தேர்தலுக்கு கொடுத்த பணத்தில் அவர்கள் செங்கல்சூளை அமைத்தார்கள். அதற்காக உக்ரைனில் இருந்து இயந்திரங்கள் வாங்கினர். கோடிக்கணக்கில் சீட்டுப்பணம் நடத்தினார்கள். மேலும், தங்களுடைய பணத்தில் கோவையில் 7.5 ஏக்கர் நிலத்தை வாங்கினார்கள். செந்தில், சிவகுமார் வீட்டில் ரெய்டு நடப்பது என்பது அண்ணாமலை வீட்டிலேயே ரெய்டு நடைபெற்றது போலத்தான். அதிமுக கூட்டணிக்கு நோ செல்லாதே என்று தான் இந்த ரெய்டு. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து கட்சித் தலைமை முடிவு எடுக்கும் என கூறினார். அப்போ ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் இருவரும் சங்கமம் ஆகிவிட்டார்கள். இதனால் ஓபிஎஸ் இந்த முறை இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டார். அப்படி கூட்டணி அமையா விட்டால் என்னாகும். இரட்டை இலை வழக்கு தேர்தல் ஆணையத்தில் உள்ளது. எடப்பாடி முரண்டு பிடித்தால் சின்னத்தை முடக்கி, பாஜகவை போட்டியிட வைத்து 2ஆம் இடத்தை பிடித்து விடுவார்கள். எனவே பாஜக – அதிமுக கூட்டணி என்பது கன்பார்ம்.
அதிமுக பொதுக்குழுவில் தொண்டர்கள் விரும்பும் கட்சியுடன் கூட்டணி என சொன்னது விஜய் கட்சி குறித்துதான். அவர் பேசுகிறார். ஆனால் விஜய் கட்சியுடன் கூட்டணி அமைய வாய்ப்பு இல்லை. இதேபோல் சீமானுடனும் கூட்டணி அமைய வாய்ப்பு இல்லை. இதனால் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக கூட்டணிதான் உறுதியாக அமையும். திமுக கூட்டணியில் இருந்து செல்வதாக கூறப்படும் விசிக, தவாக ஆகிய கட்சிகள் பாஜக எதிர்ப்பை அடிப்படையாக கொண்டவை. அதிமுக – பாஜக கூட்டணி அமைந்தால் இவர்கள் அங்கு செல்ல முடியாது. எனவே திமுக கூட்டணி – அதிமுக கூட்டணி இடையே தான் மோதல் உள்ளது. நடுவில் விஜய், சீமான் தனிப்பட்ட ரோல்தான் செய்வார்கள். இதுதான் தமிழ்நாட்டில் 5 முனை போட்டி நடைபெறும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுகவை குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் அதிமுகவின் திட்டம்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் இளங்கோவனின் மனைவி போட்டியிடுவதா?, மகன் போட்டியிடுவதா என இளங்கோவன் பேசிய ரகசிய வீடியோ முதலமைச்சரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரிடம் செல்போனில் பேசினால் சரிவராது என அவரே தனது மனைவியின் செல்போனில் பேசி, ஒரு வேளை தான் இறந்துவிட்டால், தமிழக காங்கிரஸ் எப்படி செயல்பட வேண்டும் என அவரே சொல்லி இருக்கிறார். இப்போது அதுதான் ஈரோடு கிழக்கு தொகுதியில் யார் வேட்பாளர் என்பதை தீர்மானிக்கும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.