Homeசெய்திகள்கட்டுரைஉண்மை பிரச்சினைகளில் இருந்து மக்களை மடைமாற்றும் விஜய்! விளாசும் இந்திரகுமார் தேரடி!

உண்மை பிரச்சினைகளில் இருந்து மக்களை மடைமாற்றும் விஜய்! விளாசும் இந்திரகுமார் தேரடி!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று எதிர்க்கட்சிகள் சொல்வது, மக்களின் உண்மையான பிரச்சினைகளை பேசாமல் மடைமாற்றம் செய்கிற வேலையாகும் என்று பத்திரிகையாளர் இந்திரகுமார் தேரடி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தவெக தலைவர் விஜய் திமுக அரசின் மீது தொடர்ச்சியாக வைத்து வரும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து, பத்திரிகையாளர் இந்திரகுமார் தேரடி யூடியூப் சேனல் ஒன்றுக்கு நேர் காணல் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோரது அன்றாட பணி என்ன என்றால், தமிழ்நாட்டில் நடக்கக் கூடிய, பத்திரிகைகளில் வரக்கூடிய செய்திகளை தொகுத்து நாள்தோறும் வழங்கிக் கொண்டிருப்பதுதான். பத்திரிகைகளுக்கு உள்ளுர் காவல் நிலையம் தகவல் சொல்லிதான் அந்த செய்தியை போடுவார்கள். அப்படி என்றால் காவல் நிலையம் தரப்பில் சொல்லப்பட்டதால்தான் உங்களுக்கே தெரிகிறது. சரி வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படுவதை சொல்லும் எதிர்க்கட்சிகள், அந்த வழக்குகளின் விசாரணை நிறைவடைந்து, முடித்து வைக்கப்படுவதை போட்டீர்களா? 2022ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை 9025 ஆகும். இதே காலகட்டத்தில் உத்தர பிரதேசத்தில 65,000 குற்றங்கள் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 50 சதவீத வழக்குகள் அந்த ஆண்டிலேயே முடித்துவைக்கப்பட்டு உள்ளன. ஆனால் உ.பி.யில் 20 சதவீதம் கூட முடித்துவைக்கப்பட வில்லை. அப்போது எது பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்?

ஜெகபர் அலி  இறப்புக்கு நீதி வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாடு முழுவதும் அதிகரித்து கொண்டிருக்கிறது. மத்தியில் உள்ள பாஜகவின் செயல்திட்டமே பெண்களுக்கு எதிரான குற்றங்களை திட்டமிட்ட வகையில் மேற்கொள்வதாகும். அதனை 2002 குஜராத் படுகொலை சம்பவத்தில் இருந்து நாம் பார்க்கலாம். சமீபத்தில் நடைபெற்ற மணிப்பூர் கலவரத்தில் என்ன? நடைபெற்றது என்றும் பார்த்தோம். திட்டமிட்ட வகையில் ஒரு கட்சியே இதை செய்து கொண்டிருக்கிறது என்கிறபோது இங்கிருக்கிற கட்சி அதை ஆதரிக்கிறதா? என்றால் இல்லை. பாலியல் குற்றவாளிகளை கட்சிக்குள் சேர்த்துக் கொண்டிருக்கிறது ஒரு கட்சி. தவெகவை இப்போது தான் கட்சி தொடங்கி உள்ளார்கள். அதிலும் பாலியல் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அப்போது, இவற்றை எல்லாம் விஜய் தான் தூண்டுகிறாரா?  தமிழ்நாட்டின் பெண்களுக்கு எதிராக தவெக குண்டர்கள் என்கிற தலைப்பு செய்தியை போடலாமா? எதையும் தரவுகள் அடிப்படையில் பேச வேண்டும். அல்லது மக்களிடம் உள்ள உண்மையான சிக்கல்களை பேச வேண்டும். இவை எல்லாம் எதை நோக்கி நகர்கிறது என்றால், மக்களின் உண்மையான பிரச்சினைகளை பேசாமல் மடைமாற்றம் செய்கிற வேலைதான், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்கிற பெயரில் இவர்கள் எடுத்துள்ள அஜெண்டாவாகும்.

பெண்கள் அதிகமாக வேலைக்கு செல்லும் மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மையான மாநிலமாகும். நாட்டில் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை 33 சதவீதமாகும். இதில் தமிழ்நாட்டு பெண்களின் எண்ணிக்கை 40 சதவீதமாகும். நாட்டில் உள்ள மற்ற மாநிலங்கள் எல்லாம் சேர்த்து வெறும் 60 சதவீதமாகும். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல்தான் பெண்கள் இவ்வளவு தூரம் வேலைக்கு வருவார்களா? பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடங்கள் நிரப்படாமல் இருக்கிறதா? பெண்கள் அந்த வேலைக்கு தகுதி உள்ளவராக மாறியுள்ளனர். அதற்கு இந்த அரசு திட்டங்களை செய்திருக்கிறது. அவர்கள் வேலைவாய்ப்பை பெறுகிறார்கள். நாட்டிற்கே வழிகாட்டியாக அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது கண் முன்னாடி உள்ள தரவுகளாகும். ஆனால் விஜய் இவற்றை பற்றி எல்லாம் மக்கள் பேசக்கூடாது என்று மடைமாற்றும் அரசியலை செய்து கொண்டிருக்கிறார். இவர் ஜோசப் விஜய் அல்ல. ஜோசப் கோயபல்ஸ். இவர்களது வேலைத்திட்டமே பொய்யை திரும்ப திரும்ப சொல்வது தானே தவிர, எந்த உண்மையை பற்றியும் இவர்கள் பேச மாட்டார்கள்.

புதிய கட்சியோ, பழைய கட்சியோ எல்லோரும் திமுகவை எதிர்த்து தான் வருகிறார்கள் - முதலமைச்சர் ஸ்டாலின்

பெண்களை பொருளாதார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பலம் உள்ளவர்களாக மாற்றுவது, விழிப்புணர்கவு உள்ளவர்களாக மாற்றுவது. அவர்களுக்கு தேவையான வாய்ப்புகளை யாரும் தடுக்காத அளவுக்கு சமூகத்தை கட்டமைப்பது. இவைதான் பெண்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் வழிகளாகும். கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கொடுக்கிறார்கள். கட்டணமில்லா பேருந்து பயண திட்டம்.  பெண்கள் உயர் கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் புதுமைப்பெண் திட்டம். இப்படி பெண்களின் முன்னேற்றத்திற்காக துறை வாரியாக பார்த்து பார்த்து தமிழ்நாடு அரசு வேலை செய்திருக்கிறது. தற்போது விஜய் குற்றம்சாட்டுகிறார் என்றால், அதில் என்ன சிக்கல் இருக்கிறது என்று சொல்லுங்கள். இந்த பிரச்சினையால் இவ்வளவு பேர் பாதிக்கப்படுகிறார்கள் என்று சொல்லுங்கள். அப்போது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதை கேள்வி கேட்போம். திமுக அரசு இலவச பேருந்து பயணத் திட்டத்தை அறிவித்தபோது, திருநங்கைகளை ஏன் புறக்கணித்தனர் என கேள்வி வந்தது. மறுநாளே அவர்களையும் திட்டத்தில் இணைத்து அறிவித்தார்.

நீதிபதி சந்துரு ஆணைய பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி போராடுகிறார்கள். அந்த கமிட்டியை அமைத்தது யார்? தமிழ்நாடு அரசுதான். அப்போது அந்த அறிக்கையை அரசு பெறுகிறது என்றால், அதை எப்படி செயல்படுத்துவது என்று அரசு திட்டமிட வேண்டும் அல்லவா? நீங்கள் கட்சி தொடங்கி ஒரு வருடம் காத்திருந்துவிட்டு பரந்தூருக்கு வந்தீர்கள். பரந்தூர் பிரச்சினை என்பது நீங்கள் கட்சி தொடங்குவதற்கு முன்பிருந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. நீங்கள் அங்கே செல்வதற்கு ஒரு காலக்கெடு எடுத்துள்ளீர்கள் அல்லவா? அதேபோல் இவ்வளவு காலமாக சமூகத்தில் இறுக படிந்திருக்கும் சாதியை துடைத்தெடுப்பதற்கு  ஒரு கமிட்டி அறிக்கை கொடுத்திருக்கிறது. அதை அரசு ஆய்வுக்கு உட்படுத்தவும், அதை செயல்படுத்துவதற்காக திட்டமிடவும் கால அவகாசம் தேவைப்படும் அல்லவா?

அது குறித்து எல்லாம் எந்த புரிதலும் இல்லாத ஒருவர் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அப்படி ஆனால் என்ன செய்வார் என்பதை நேற்று புஸ்ஸி ஆனந்தே சொல்லிவிட்டார். ஆட்டோ ஓட்டுநர்கள் எல்லோரையும் விஜய் மாவட்ட செயலாளர் ஆக்கிவிட்டார். உங்கள் அனைவருக்கும் லோன் வாங்கித் தருகிறேன் என்று சொல்லுகிறார். லோன் வாங்க ஆட்டோ ஓட்டுநர் நலவாரியத்தில் உறுப்பினர் ஆக இருந்தால்போதும் அதற்கு எதற்கு தவெக மாவட்ட செயலாளர் ஆக வேண்டும். அவர்களுக்கு அரசியல் இலக்கு இல்லையா? அவருக்கு என்று எந்த சித்தாந்தமும் இல்லையா? அப்படிபட்டவர்களைதான் மாவட்ட செயலாளர்கள் ஆக்கி உள்ளார்கள் என்றால், இந்த கட்சியின் நிலைமை என்ன என்பதை நாமே புரிந்துகொள்ளலாம். இவற்றை எல்லாம் மறைப்பதற்காக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை,  போதை பொருள் அதிகம் உள்ள மாநிலம் என்று எல்லாம் குற்றம்சாட்டுகிறார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ