தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பாஜகவின் தந்திரமான அரசியலை பின்பற்றுவதாக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் பாஜக, திமுகவின் பெயரை சொல்லவே அவர் அச்சப்படுவதாகவும் சாடியுள்ளார்.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள புதிய கட்சி குறித்து திமுக அவதூறு பரப்புவதாகவும், அவரது கட்சியை கண்டு திமுவினர் பதறுவதாகவும் வலதுசாரிகள் பரவலாக குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்த குற்றச்சாட்டுகளை முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது தொடர்பாக பிரபல யூடியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள சிறப்பு நேர்காணலில் கூறியிருப்பதாவது:- புதிதாக கட்சி தொடங்கினால் அவர்களை பாஜகவின் பி டீம் என திமுக குற்றம் சாட்டுவதாக வலதுசாரிகள், பாஜக ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். ஜனநாயக நாட்டில் நடிகர் ஒருவர் கட்சி தொடங்கினால் திமுக பதறுவது ஏன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் திமுக பதறவில்லை, எதற்காக அவர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என்பது திமுகவுக்கு தான் நன்றாக தெரிகிறது. எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியபோது, அது காங்கிரசின் பி டீம் என குற்றச்சாட்டு எழுந்தது. எம்.ஜி.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை என்பது உண்மைதான். ஆனால் வருமான வரித்துறையின் அச்சுறுத்தலுக்கு பயந்து, அவர் கட்சி தொடங்கியது பின்னர் தான் தெரிய வந்தது. தான் கேரளாவை சேர்ந்தவர் என்பதால் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும் என்பதால் தனது குடும்பம் கோவையை சேர்ந்த மன்றாடியார் குடும்பம் என எம்.ஜி.ஆர். தெரிவித்தார். ஆனால் அதனை மறுத்த கலைஞர் காங்கிரசின் அச்சுறுத்தலுக்கு பயந்தே எம்.ஜி.ஆர். கட்சியை தொடங்கியதாக தெரிவித்தார்.
அன்றைய காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் பலம் வாய்ந்த அரசியல் கட்சியாக உருவெடுக்க விரும்பியது. ஆனால் அவர்கள் கட்சியில் அதற்கு வழி இல்லை. எனவே எம்.ஜி.ஆரை பயன்படுத்தி தமிழ்நாட்டிற்குள் காங்கிரஸ் நுழைய முயன்றது. ஆனால் எம்.ஜி.ஆரின் ஆலோசகர்கள் அவருக்கு சரியான முறையில் வழி காட்டியதால் அவர் காங்கிரசில் சேராமல் தனிக் கட்சியை தொடங்கினார். தேசிய வாதத்தில் தமிழர்கள் முன்னிலையில் இருந்த போதும், தமிழர்களுக்கு என்று தனித் தன்மையை அவர்கள் விட்டுத்தர மாட்டார்கள் என்பதும் எம்.ஜி-ஆருக்கு நன்றாகவே தெரியும். இதனால் அவர் காங்கிரசில் இணையவில்லை. எனினும் திமுகவை பலவீனப்படுத்த காங்கிரஸ் செய்யும் உதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என எம்.ஜி.ஆர். எண்ணினார். இது திமுகவுக்கு நன்றாக தெரியும்.
திமுக, திராவிடர் கழகத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் அக்கட்சிகள் ஒரு விஷயம் தொடங்கும்போதே அதன் நன்மைகள், தீமைகளை கண்டறிந்து சொல்லி விடுவார்கள். நீட் தேர்வு என்பது பணக்கார்களுக்கானது மட்டுமே என்று மற்றவர்கள் கூறியிருந்த நிலையில், கிராமத்துக்கு மருத்துவர்கள் செல்வது குறையும் என திமுக தெரிவித்தது. சமுதாயத்தின் பரிமாணங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு திமுக முடிவெடுக்கும். முற்போக்கு மாநிலங்களான மேற்குவங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு நீட் தேர்வு குறித்த புரிதல் பின்னர்தான் ஏற்பட்டது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தபோது ஆன்மீக அரசியல் என புதிதாக ஒரு கருத்தியலை கொண்டு வந்தார். அதேபோல் எம்ஜிஆரும் அண்ணாயிசம் என்ற புதிய கருத்தியலை கொண்டு வந்தார். இவர்களை போன்ற சினிமா பிரபலங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அவர்களுக்கு என்று ஒரு சினிமா கவர்ச்சி இருந்தது. அதனை பயன்படுத்தி திமுகவை பலவீனப்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த் போன்றவர்களை தொடக்கத்தில் இருந்தே திமுக எதிர்க்க காரணமும் இதுதான். பாஜகவுக்கு முன்னால் வர தைரியம் இல்லாததால் ஒவ்வொருவதாக தனித்தனியாக அனுப்புகின்றனர். பாஜகவின் முகமூடிதான் அவர்கள் என திமுக அடையாளம் கண்டுகொள்கிறது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
நடிகர் விஜய் போன்றோர் அரசியலுக்கு வருவதால் திமுக பதற்றம் அடையவில்லை. மாறாக அவர்கள் எதற்காக வருகின்றனர் என்பது திமுகவுக்கு நன்றாக தெரிகிறது. விஜய் கொள்கை குறித்தும் பேச மாட்டார், எதையும் பேச மாட்டார். சினிமா வசனம் பேசுவார். அதன் மூலம் மக்களை கூட்டிச் செல்லலாம் என நினைக்கிறார். எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்த அந்த சினிமா கவர்ச்சி தற்போது இல்லை. விஜய் ரசிகர்கள் அவரது பேச்சை கேட்டு ஆர்ப்பரிப்பார்கள் என்பது உண்மைதான். ஆனால் எதிர் தரப்பினர் வைக்கும் நியாயமான விமர்சனங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மதிப்பு கொடுக்கின்றனர்.
உதயநிதி, விஜய் ஆகிய இருவரும் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் என்கிற வாதம் தவறானது. முதலில் இருந்தே அரசியலில் ஈடுபட்டு வந்த உதயநிதி, சினிமாவிலும் நடித்துள்ளார். ஆனால் சினிமாவில் மட்டுமே நடித்து வந்த விஜய், தற்போது அரசியலில் ஆர்வம் காட்டுகிறார். சமத்துவத்திற்கு எதிரான வர்ணாசிரமத்தை எதிர்ப்பதாக உதயநிதி தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு வந்தபோதும் தனது கருத்தில் இருந்து அவர் பின்வாங்கவில்லை. ஆனால் தலைவா படம் ஒடவில்லை என்பதற்காக கொடநாட்டிற்கு ஓடிப் போன விஜய் எப்படி தைரியசாலியாக இருப்பார். எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது. ஆனால் எம்.ஜி-ஆர். தன்னந்தனியாக இருந்து படத்தை வெளியிட்டு சாதித்தார். அவரது தைரியம் விஜய்க்கு கிடையாது. அவ்வாறு தைரியம் இருந்தால் அதனை விஜய் வெளிப்படுத்த வேண்டும். ஆனால் அவர் ஒன்றிய பாஜக அரசின் பெயரை சொல்லவே, திமுகவின் பெயரை சொல்லவே அச்சப்படுகிறார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தபோது, ஆன்மீக அரசியல், பாஜக நிர்வாகி குருமூர்த்தி என வெளிப்படையாகவே வலதுசாரி அரசியலை முன்னெடுப்பதாக கூறினார். ஆனால் விஜய் பெரியார், அம்பேத்கரை வழிகாட்டியாக கொண்டுள்ளதாக முற்போக்கு வேடம் அணிந்து வந்துள்ளார். ஆனால் அவரது உண்மை முகம் விரைவில் வெளிப்படும். கேள்வி கேட்கப்படும்போது, விஜயிடம் இருந்து பதில் இருக்காது. ஏதாவது ஒரு கருத்தை தெரிவித்துவிட்டு ஓடிப்போவது என்பது பாஜகவின் அரசியல் தந்திரமாகும். அதைத்தான் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பின்பற்றுகிறார். தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஒன்றும் முதல் 100 இடங்களுக்குள் இல்லை என்று ஆளுநர் குற்றம்சாட்டுவார். ஆனால் அதனை மறுத்து உயர் கல்வித்துறை அமைச்சர் புள்ளி விபரங்களுடன் பதில் அளிக்கும்போது ஒன்றும் சொல்லாமல் இருந்து விடுவார். இந்த கீழ்த்தரமான அரசியலைத்தான் தற்போது விஜய் பின்பற்றுகிறார். இவரது அரசியல் மக்களுக்கு நன்றாக புரியும்.
திராவிடத்தை எதிர்ப்போம் என கருத்தியலாக மோதிய மா.பொ.சி, சி.பா. ஆதித்தனார் ஆகியோர் பின்னர் திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைத்து, அவர்களது அரசில் இடம் பெற்றனர். 1990-களுக்கு பின்னர் திராவிட இயக்கங்கள் அழிய வேண்டும் என நினைத்த பாமக, மூப்பனார் போன்றோர் பின்னர் அந்த கட்சிகளுடனே மாறி, மாறி கூட்டணி வைத்தனர். திமுக எதிர்ப்பில் நாம் தமிழர் கட்சி மட்டும் அப்படியே உள்ள நிலையில், அதிமுகவுடன் மென்மையான போக்கை கடை பிடித்து வருகிறது. தற்போது திமுகவை எதிர்ப்பதாக களமிறங்கியுள்ள விஜயின் உண்மை முகம் விரைவில் வெளிப்படும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.