Homeசெய்திகள்கட்டுரைஅரசியலுக்கு லாயக்கு அற்றவர் விஜய் ... மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் கடும் விமர்சனம்!

அரசியலுக்கு லாயக்கு அற்றவர் விஜய் … மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் கடும் விமர்சனம்!

-

- Advertisement -

களத்திற்கு செல்லாமல் வீட்டில் இருந்து அரசியல் செய்து வரும் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் அரசியலுக்கு லாயக்கு அற்றவர் என மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் மழையால் பாதிப்புக்குள்ளான டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு, தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தனது பனையூர் இல்லத்தில் நேரில் அழைத்து நிவாரணப் பொருட்களை வழங்கினார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று நிவாரண பொருட்களை வழங்காமல், வீட்டிற்கு அழைத்து வழங்கியதாக இணையத்தில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து பதிவிட்டனர். ஆனால் நடிகர் விஜய் நேரில் சென்றால் கூட்டநெரிசில் ஏற்படும் என்றும், அதனை தவிர்க்கவே இவ்வாறு நடைபெற்றதாக தமிழக வெற்றிக்கழகம் சார்பில் விளக்கம் அளித்துள்ளது.

இந்த நிலையில், களத்திற்கு செல்லாமல் அரசியல் செய்யும் நடிகர் விஜய், அரசியலுக்கு லாயக்கு அற்றவர் என மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் அரசியல் தலைவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் செல்வதே அரசியல் ஆகும். அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க வேண்டும். ஆனால் கூட்ட நெரிசல் ஏற்படும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதற்காக தனது வீட்டிற்கு வரவழைத்து தான் நிவாரண பொருட்களை தருவேன் என்பது மிகவும் தவறு. தமிழ்நாட்டில் இப்படி ஒரு அரசியலை எந்த அரசியல் தலைவரும் மேற்கொண்டது இல்லை. இது அரசியலும் இல்லை.

நடிகர் விஜய், தான் உச்ச நட்சத்திரம், 200 கோடி ரூபாய் சம்பளத்தை விட்டு விட்டு அரசியலுக்கு வந்துள்ளதாக கூறுகிறார். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்-ஐ விட, நடிகர் விஜய் பெரிய நட்சத்திராமா?. மக்களுக்கு துன்பம் என்றால் எம்.ஜி.ஆர். முதலில் களத்தில் இருப்பார். துன்பப்பட்ட இடத்திற்கு ஓடோடி போவார். அன்றைய காலகட்டத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு இருந்த பிரபலம் தெரியுமா?. அவர்கள் பாதிப்பிற்கு உள்ளாகும் இடத்திற்கு நேரில் சென்றால் வரும் கூட்டத்தை பார்த்துள்ளீர்களா?. அவர்கள் இருவருக்கும் வராத மக்கள் கூட்டமா விஜய்க்கு வந்துவிட போகிறது?.

முதலில் தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு கட்டமைப்பு உள்ளதா? என்றால் இல்லை. நிர்வாகிகளை நியமிக்காமல் அவர் கட்சியையே அறிவித்திருக்கக் கூடாது. அரசை கண்டித்து அறிக்கை விடுவது அல்ல அரசியல். ஒரு கட்சிக்கு பிரதானமாக கட்டமைப்பு இருக்க வேண்டும். மாவட்ட செயலாளர்களை நியமித்தால், அவர்களுக்கு கீழ் நகர செயலாளர், ஒன்றிய செயலாளர், பகுதி செயலாளர்கள் என பலர் இருப்பார்கள். அவர்களே விஜய்க்கு பாதுகாப்பும் அளிப்பார்கள். விஜய் ஒன்றும் திடீரென கட்சி தொடங்கியவர் இல்லை. இத்தனை வருடங்களாக ரசிகர் மன்றம் வைத்துள்ள விஜய், அரசியல் கட்சி தொடங்குபோது, அதற்கான பேக் ஒர்க் செய்ய எத்தனை நேரம் ஆகி இருக்கும். ஆனால் அவர் அதனை மேற்கொள்ளவில்லை.

தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு கட்டமைப்பு நிறுவ முதலில் தமிழ்நாடு முழுவதும் நூறோ, ஐம்பதோ உங்கள் சவுகரியத்திற்கு ஏற்ப மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், அல்லது மாவட்ட பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும். ஆனால் விஜய் வரும் ஜனவரி மாதம் கட்சி நிர்வாகிகளை அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். கட்சியில் பதவிக்காக எத்தனை பேர் காத்துள்ளனர் என அவருக்கு தெரியுமா?. நடிகர் விஜயால் மக்களை தொடர்புகொள்ள முடியவில்லை. ஏன் கட்சி நிர்வாகிகளுக்கும், விஜய்க்கும் இடையே கூட தொடர்பு இல்லை.

நாகையில் சீமானின் கூடாரம் காலி...தவெக கட்சிக்கு தாவிய 200 பேர்

மழை வெள்ளம் போன்ற பிரச்சினைகள் சில நாட்கள் தான் இருக்கும், அப்போதே மக்களை நேரில் சென்று சந்திக்க வேண்டும். தவெக தலைவர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆன பிறகு தான் மக்களை நேரில் சந்திப்பேன், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வேன் என்று கூறிக்கொண்டு பனையூரில் உட்கார்ந்து இருக்கக்கூடாது. அரசியல் என்பது அப்படி இல்லை. அப்படி நினைத்தால் நீங்கள் அரசியலுக்க வர முடியாது. இதற்கு சமீபத்திய சிறந்த உதாரணம் விஜயகாந்த். அவரை எப்படி தொண்டர்கள் பாதுகாத்தனர். அவர் எப்படி களத்திற்கு சென்றார்.

நடிகர் விஜய், கூட்டத்தை வைத்துதான் அரசியல் செய்ய வந்துள்ளார். நடிகர் என்பதால் தான் அவருக்கு கூட்டமும் கூடுகிறது.  மக்களுடன் மக்களாக கலந்துபோகும்போது தான் அவர் அரசியலை கற்றுக்கொள்ள முடியும். வீட்டிலேயே இருந்தால், அரசியலை நீங்கள் எங்கே, எப்படி கற்றுக் கொள்வீர்கள். உங்கள் அணுகுமுறையே வித்தியாசமாக உள்ளது. மற்றத் தலைவர்களில் இருந்து நான் வித்தியாசமானவன் என்பதை மக்களுக்கு செய்யும் பணிகளில் தான் காட்ட வேண்டும். துன்பம் வரும்போது ஓடிவரும் தலைவன், பிரச்சினை என்றால் அதனை கையில் எடுத்து போராடும் தலைவன் அப்படித்தான் இருக்க வேண்டும். டி.பி. சத்திரம் பகுதிக்கு சென்றால் தான் அங்குள்ள மக்களின் பிரச்சினைகள் தெரிய வரும். அதனை அறிந்தால்தான் அரசாங்கத்தை கேள்வி கேட்க முடியும். அப்போது, கட்சியினரும், காவல் துறையினரும், பொறுப்பாளர்களும் உங்களை பாதுகாப்பார்கள்.

டி.பி.சத்திரம் பகுதிக்கு நீங்கள் போனால் தானே கூட்டம் வரும். ஏன் தவெக பொதுச் செயலாளர் ஆனந்தோ, அல்லது வேறு நிர்வாகிகளோ நேரில் சென்று கொடுத்தால் மக்கள் வாங்கி கொள்வார்கள் தானே. நடிகர் விஜய் தான் பெரிய பிரபலம், நேரில் சென்றால் மக்கள் கூட்டம் வரும் என அதீத கற்னையில் உள்ளார். கற்பனையில் வாழுகிற ஒரு மனிதர் அரசியலுக்கு லாயக்கு அற்றவர் ஆவார். இதனால் தான் அவர் மீது நெட்டிசன்கள் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தனர். இதனை உணர்ந்து விஜய் கண்டிப்பாக களத்திற்கு வந்துவிடுவார் என்பது என் நம்பிக்கை உள்ளது. இந்த அளவு ட்ரோல் செய்யும் அளவிற்கு கட்சி சென்றால், நிச்சயம் இது அவரது கவனத்திற்கு செல்லும். இதனால் ஒரு கட்டத்தில் அவரே களத்திற்கு வந்து விடுவார். மேலும் தான் மேற்கொள்வது சரியான அரசியல் அல்ல என்றும், தமது அணுகுமுறை தவறானது என்றும் விஜய் புரிந்துகொள்வார்.

விஜய் மீது காவி சாயம் பூசுவது தேவையற்றது. அவர் குறித்து, அண்ணாமலை  மோசமான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் ரமேஷ் அளித்துள்ள பதில் அண்ணாமலைக்கும், பாஜகவுக்கும் சிறப்பான பதிலடியாகும். அவரது அறிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் எந்த உணவை எப்படி உட்கொள்ள வேண்டும் என தெரியும் என்றும், ஆனால் மதவாதம என்ற நஞ்சு கலந்த உணவை உண்ண மாட்டார்கள் என்றும் தெரிவித்திருந்தார். மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே வரி, ஒரே மொழி என்பதை எதிர்ப்பதாக விஜய் கூறியுள்ளார். அதனால் உண்மையில் இந்த அறிக்கை விஜய் அனுமதியின் பேரில் வெளியிடப் பட்டிருந்தால், அவர் மீது காவி சாயம் பூச வேண்டியது இல்லை. அண்ணாமலைக்கு இதைவிட நச்சு பதில் இல்லை.

'ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு' ..... விஜயின் அரசியல் பேச்சை வரவேற்கும் பா ரஞ்சித்!

விஜய் களத்திற்கு சென்று பணியாற்றிவது என்பது தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு 100 சதவீதம் நன்மையே. கட்சி எப்படி இருக்கிறது, என்ன பலம், பலவீனங்கள் உள்ளன என்பது களத்திற்கு சென்றால் தான் தெரியும். விஜய் கட்சி நிர்வாகிகளுடன் பயணிக்கும்போது தான் அவருக்கு கட்சியின் பலம், பலவீனங்கள் தெரிய வரும். ஒரு மாவட்ட செயலாளரை தனது வாகனத்தில் ஏற்றிச்சென்று, அவருக்குள்ள பிரச்சினைகள், அவர்களை மற்ற கட்சியினர் நடத்தும் விதம், அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்கின்றனரா என்றெல்லாம் விசாரிக்க வேண்டும். அவர்களிடம் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் குறித்து விசாரிக்கும்போது தான், நிர்வாகிகளுக்கும், விஜய்க்கும் இடையேயான நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் விஜய் இந்த கணக்கீடே தெரியாமல் நிர்வாகியிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டோம், அவர்கள் கட்சியை பார்த்துக் கொள்வார்கள் என்று இருக்கக்கூடாது. மேலும், களத்திற்கு செல்லாமல் அரசியல் செய்வது என்பது, அது கட்சியே இல்லை என்பதையே காட்டுகிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

 

MUST READ