சீமான் தகுதியாக இருக்கிற வரை கட்சி உங்களுடன் இருந்ததாகவும், இப்போது அவர் கொள்கையிலிருந்து தடம் புரண்டுவிட்டதால் தான் கட்சியில் இருந்து இவ்வளவு பேர் விலகி சென்று கொண்டிருக்கிறார்கள் என்று அக்கட்சியின் முன்னாள் மாநல ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் தெரித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய பின்னர் பிரபல யூடியூப் சேனலுக்கு ஜெகதீச பாண்டியன் அளித்துள்ள நேர்காணலில் அவர் கூறியிருப்பதாவது :- நடிகர் விஜய்-ஐ பார்த்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பெரிய அளவில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இது எனக்கு நன்றாகவே தெரியும். கடந்த 2006-ல் சன் டிவியில் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் பேசிய சீமான், எம்.ஜி.ஆர், ரஜினிக்கு பின்னர், விஜய் தான் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் என்று சொன்னார். இதை கேட்டு விஜயின் தாயார் ஷோபா கண்கலங்கி சீமானிடம் செல்போனில் பேசினார். இந்த 15 மாத காலத்தில் சீமானின் செயல்பாட்டை பார்த்தீர்கள் என்றால் முதலில் விஜயை தம்பி தம்பி என்று சொன்னார். நான் அண்ணாவாக இருப்பேன், விஜய் எம்.ஜி.ஆர் ஆக இருப்பார் என்றும் சொன்னார். அப்போது விஜய் சொன்னாரா உங்களுடன் கூட்டணிக்கு வருவேன் என்று?.
இன்றைக்கு கூட்டணிக்கு செல்ல மாட்டேன் என்று சீமான் சொல்கிறார். அதிமுக – திமுக ஊழல் கட்சிகள் வேண்டாம். தமிழ் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம் தானே. திருமாவளவனுடன், வேல்முருகனுடன் கூட்டணி வைக்கலாம் அல்லவா?. நட்சத்திர விடுதி ஒன்றில் வேல்முருகன், மணியரசன் மற்றும் சிறிய தமிழ் தேசிய அமைப்புகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் சீமானின் தலைமையை ஏற்றுக்கொண்டு கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்டு 6 ஆண்டுகள் அரசியல் செய்திருந்தோம் என்றால் இன்றைக்கு நாம் தமிழர் கட்சிக்கு 10 அல்லது 15 எம்எல்ஏ-க்களாவது வந்திருப்பார்கள் அல்லவா?
விஜய் கட்சி அறிவித்தார். சீமான் வாழ்த்து சென்னார். பின்னர் கொடி அறிவித்தபோது, தவெக கட்சியை பதிவு செய்தபோது. கட்சி மாநாட்டிற்கு பந்தல்கால் நடுகிறபோது என எல்லாவற்றுக்கும் வாழ்த்து சென்னார். திராவிடமும் தமிழ் தேசியமும் இந்த மண்ணின் இரு கண்கள் என்று விஜய் சொன்னார். உடனே சீமான் தம்பி இந்தப்பக்கம் நில்லு, அந்தப்பக்கம் நில்லு இல்லைனா லாரி அடித்து செத்து விடுவாய் என்று சொல்கிறார். இதன் காரணமாக பொதுமக்கள் அத்தனை பேரின் வெறுப்பையும் சம்பாதித்தார். நீங்கள் விஜய்-ஐ எதிரி ஆக்கிவிட்டீர்கள். அவர் பின்னால் நம்மை போன்று பல லட்சம் இளைஞர்கள் உள்ளனர். அவர்கள் ஏன் நம்மை எதிரியாக நினைக்க வேண்டும்?.
தமிழ் தேசியத்திற்கு அங்கீகாரம் வழங்கும் உரிமை சீமானிடம் தான் உள்ளதா? மணியரசனை விட உங்களிடம் கட்டமைப்பு உள்ளதா? தொடர்ந்து தமிழர் கண்ணோட்டம் புத்தகம் வந்து கொண்டிருக்கிறது. இங்கே ஒரு புத்தகத்தை கொண்டு வர முடிந்ததா?. உங்கள் தலைமையில் இருக்க 17 பேரை பொறுப்பாளர்களாக தேர்வு செய்து அறிவிப்பதற்கு 15 ஆண்டுகளாக முடியவில்லையே. 2016ல் தேர்தலுக்கு நிதியே கிடையாது. 5 லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கி தேர்தல் வேலைகளை தொடங்கினோம். பின்னர் மக்கள் ரூ.36 லட்சம் நிதி வழங்கினார்கள். அதில் தான் தேர்லுக்கான செலவுகளை பார்த்தோம். 2014ல் அறிவித்த வேட்பாளர்களில் 90 சதவீதம் பேர் இன்று கட்சியில் இல்லை. அன்றைக்கு வேலை பார்க்கக்கூட ஆட்கள் இல்லை. வேட்பாளர், அவர் மனைவி என்று இருவர் மட்டுமே பிரச்சாரத்துக்கு சொல்வார்கள். இன்று நான் தேர்தலில் போட்டியிட்டபோது 200 பேர் பிரச்சாரத்திற்கு வருகிறார்கள் என்றால், அவர்களை நாம் அமைப்பாக்க வேண்டும்.
ஒழுக்கமும், உழைப்பும், நேர்மையும் உள்ள தலைவரான பிரபாகரனையே இந்த உலகம் கேள்வி எழுப்பும் என்றால் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சீமானிடம் எச்சரித்தேன். நாம் சராசரி மனிதர்கள் என்பதால் நம்மிடம் அனைத்து பலகீனங்களும் உள்ளது. ஆனால் அந்த இடத்திற்கு வரும்போது நாம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறினேன். நாம் தமிழர் கட்சி இல்லாமல் போக வேண்டும், சீமான் இல்லாமல் போக வேண்டும் என நான் என்றைக்கும் நினைக்கவில்லை. ஆனால் இந்த குறைகள் எல்லாம் சரிசெய்து கொண்டு, தமிழ் தேசியம் வெல்வதற்கு பாஜகவின் பிடியில் இருந்து வெளியே வர வேண்டும் என்பதுதான் எனது நோக்கம்.
சீமான், இன்றைக்கு சென்று ரஜினிகாந்தை சந்தித்து பேசிவிட்டார். முன்பு ரஜினியை அரசியலுக்கு வரக்கூடாது என சீமான் பேசிய பேச்சில், அவரது ரசிகர்கள் பலரும் சீமான் குடும்பத்தை அவதூறாக பேசினார்கள். இந்த விவகாரத்தில் சேலத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இன்று அவர்கள் யாரும் நாம் தமிழர் கட்சியில் இல்லை. வேல்முருகன் பின்னால் சென்றுவிட்டனர். சின்னம், அங்கீகாரம் என எவுதும் இல்லாத கட்சிக்கு அவர்கள் சென்றுவிட்டார்கள். அப்போது, நீங்கள் இங்கு வருபவர்களை எல்லாம் அதிமுக, திமுக, பாஜவுக்கு அனுப்பும் வேலையைதான் செய்கிறீர்களா?
சீமான் பேசும்போது சொல்கிறார், எனக்கு ஆயிரம் துரோகிகள் என்று. ஒரு அமைப்பா? தனி மனிதரா? என்றால் அமைப்புதான் பெரியது. கொள்கையா? தலைவரா? என்றால் கொள்கை தான் முக்கியம். அப்போது ஒட்டுமொத்த மக்களின் நலன்தான் பெரியது. ஒருவருடைய நலன் பெரியது கிடையாது. சீமானே சொல்வார், வரலாறு யாருடைய வருகைக்காகவும் காத்திருக்காது. இருக்கிற தகுதியான ஒருவரை கையை பிடித்து அழைத்துச்செல்லும் என்று. நீங்கள் தகுதியாக இருக்கிற வரை உங்களுடன் இருந்தது. இப்போது நீங்கள் அதிலிருந்து தடம் புரண்டுவிட்டதால்தான் தமிழ்நாட்டில் இருந்து இவ்வளவு பேர் விலகி சென்று கொண்டிருக்கிறார்கள்.
நேற்று கூட சொல்கிறார், பெரியாரை பின்பற்றுபவர்கள் கட்சியை விட்டு செல்லுங்கள் என்கிறார். இதனை கட்சி ஆரம்பிக்கும் போதே சொல்ல வேண்டியதுதானே. உடனே நான் திராவிட கைக்கூலி, திமுகவிடம் பணம் வாங்கிவிட்டேன் என்று சொல்வார்கள். அப்படி நான் திமுகவில் சேர வந்திருந்தால், என்னை காட்டுவதற்காக அவர்கள் அழைப்பார்கள் அல்லவா? ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லையே. இன்னும் பல்வேறு விமர்சனங்கள். ஆனால் அவர்களது மனசாட்சிக்கு தெரியும். எனவே சீமான் தொடர்ந்து படிக்க வேண்டும். பெரியாரையும், பிரபாகரனையும் எதிர் எதிராக நிறுத்துவதை கைவிட்டு, அவர்கள் இருவரையும் இணைத்து பாஜகவுக்கு எதிராக நிறுத்தி தமிழ் தேசியம் வெல்ல பாடுபட வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.