Homeசெய்திகள்கட்டுரைவிஜய் நினைப்பது நடக்காத காரியம்... நிதர்சனத்தை புரிந்துகொண்ட திருமா...  மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம்!

விஜய் நினைப்பது நடக்காத காரியம்… நிதர்சனத்தை புரிந்துகொண்ட திருமா…  மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம்!

-

- Advertisement -

திமுக கூட்டணியை உடைத்து ஆட்சியை பிடிக்கலாம் என விஜய் நினைத்தால் அது அது நடக்காத காரியம் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் இறுமாப்புடன் பேசுவதாகவும், நிகழ்ச்சியில் பங்கேற் கூடாது என திருமாவளவனுக்கு அழுத்தம் தரப்பட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், திமுக கூட்டணியை உடைத்து ஆட்சியை கைப்பற்றலாம் என நினைக்கும் விஜயின் எண்ணம் நிறைவேறாது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரபல யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-  தமிழகத்தில் அரசியல் உரையாடல் வழியாக ஒரு போர் நடைபெறுகிறது. விஜய் ஒரு திரை நட்சத்திரம், அவர் கட்சி தொடங்கி விட்டார் என்பதற்காக அனைவரும் அவருக்கு வாக்களித்து முதலமைச்சர் ஆக்கி விடுவார்கள் என்பது அறியாமை ஆகும். அரசியலில் சட்டப் பூர்வத்துக்கும், நம்பகத் தன்மைக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. மக்கள் நம்பகத் தன்மைக்கு தான் வாக்களிப்பார்கள். விஜய் கட்சி மாநாடு நடத்துவதும், நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதும் வரவேற்க தக்க விஷயம் தான். ஆனால் அவர் இதற்கு முன்னர் எத்தனை நூல் வெளியீட்டு விழாக்களில் பங்கேற்றுள்ளார் என்பதுதான் கேள்வி. அவருக்கு கட்டுரைகளை படித்து புரிந்து கொள்ளும் ஆற்றல் உள்ளதா? என்பதும் கேள்வியே.

எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூலின் பதிப்பாளர் ஆதவ் அர்ஜுனா தான். சாதாரண ஒரு மனிதர் சினிமா நட்சத்திரத்தை புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைக்க முடியுமா? அதனால் விஜய் ஆதவ் இடையே நட்போ, புரிதலோ உள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்க முன்பே திருமா, விஜயிடம் ஒப்புக்கொண்டிருந்த நிலையில், விஜய் அரசியல் கட்சி மாநாட்டின்போது, அவரது நிலைப்பாடு தெரிய வந்ததால் திருமா நிகழ்ச்சியில் பங்கேற்பதில்லை என முடிவெடுத்தார். அவரது நிலைப்பாடு மிகவும் சரியானது தான். ஏனெனில் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்றால் அது தேவையற்ற விமர்சனங்களை வரவைக்கும்.

இதேபோல், எத்தனை சீட்டுகள் கொடுத்தாலும் திமுக கொடுப்பது வெற்றி பெறும் சீட்டுகள் ஆகும். அதிமுக, பாஜக கொடுக்கும் சீட்டுகள் கூட வெற்றி பெறும் சீட்டுகள் தான். ஆனால் விஜய் கொடுக்கும் சீட்டில் வெற்றி பெற முடியுமா?. ஆதவ் அர்ஜுனா, உதயநிதியை, மு.க.ஸ்டாலினின் மகன் என்பதால் மன்னராட்சி என கூறுவது தவறு. உதயநிதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றியோ தோல்வியோ பெறுவார். ஆனால் மன்னராட்சி என்பது தொடர்ந்து ஆட்சிபுரிவதாகும், இடையில் பிரேக் எடுக்க முடியாது.

வேங்கை வயல் விவகாரத்தில் அனைத்து கிராமங்களிலும் டிஎன்ஏ பரிசோதனைகள் நடைபெற்று முடிந்துள்ளது. உயர்நீதிமன்ற கண்காணிப்பில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆணையம் விசாரித்து வருகிறது. பல்வேறு கிராமங்களில் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொண்டுள்ளபோதும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஆளுநர் ஆர்.என். ரவி, விஜய், ஆதவ் அர்ஜுனா போன்றோர் தெரிவிக்கின்றனர். ஆனால் உண்மையில் தமிழ்நாட்டில் தான் தலித் இலக்கியம், தலித் விழிப்புணர்வு அதிகமாகும். ஆளுநர், விஜய் போன்றோர் சொல்வது  மிகைப்படுத்தப்பட்டதாகும்.

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் விவகாரத்தில் தனக்கு அழுத்தம் தரப்படவில்லை என திருமா விளக்கம் அளித்துள்ளார். அவரது கருத்தே கட்சியின் நிலைப்பாடு ஆகும். விஜயின் நோக்கம் என்ன ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதாகும். அவர் ஏன் ஆட்சிக்கு வர நினைக்கிறார் என்றால் மக்களுக்கு நல்ல செய்யவே என்கிறார். அப்படி என்றால் இதற்கு முன்பு தமிழகத்தை ஆண்ட அண்ணா, கலைஞர்,  ஜெயலலிதா போன்றோர் நன்மை செய்ய வில்லையா?. விஜய்க்கு தைரியம் இருந்தால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டிருக்க வேண்டும். எம்.ஜி.ஆர் இடைத் தேர்தலில் தைரியமுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயலலிதாவும் அவ்வாறு தான் இருந்தார். விஜய் முன்வைப்பது மாற்று அரசியல் அல்ல, ஏமாற்று அரசியல். நீங்கள் சொல்லும் அனைத்து கொள்கைகளும் பாஜக தவிர்த்து மற்ற அனைத்து தமிழக கட்சிகளிடமும் உள்ளது.

’’இது ஜேசிபி ஆட்சியா?’’- திமுக நிர்வாகிக்காக திமுக அரசை எதிர்த்து விசிக போராட்டம்
thirumavalavan mk stalin

விஜய் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக திருமாவளவன் திமுக கூட்டணியை விட்டு வர வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகள் கூட்டணியை உடைத்தால் ஆட்சிக்கு வந்து விடலாம் என்றும் நினைக்கிறார். ஆனால் அரசியலில் அப்படி நடக்காது. அரசியல் நேரேட்டிவில் ஒரு விஷயத்தை ஒரு குழுவும், மற்றொரு விஷயத்தை மற்றொரு குழுவும் ஆதரிக்கும். ஆனால் நீங்கள் இரண்டிலும் இல்லை. சீமான் சொல்வது சரிதான். நீங்கள் இரண்டில் ஏதாவது ஒருபக்கம் தான் இருக்க வேண்டும். விஜய்க்கும் ஒரு வட்டம் இருக்கும், ஆனால் அது சினிமா சார்ந்ததாக இருக்கும். திமுக கூட்டணியை உடைத்து அந்த கட்சிகளை கொண்டுவந்தால் வலிமை பெற்று, ஆட்சியை பிடிக்கலாம் என நினைத்தால் அது நடக்காத காரியம்.

விஜய் பின்னணியில் நிச்சயம் ஒரு டீம் இருக்கும். அந்த டீமின் சிந்தனைகளைத்தான் விஜய் செயல்படுத்துவார். 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய்க்கு நிச்சயம் சாத்தியம் இல்லை. 2031 தேர்தலில் சாத்தியம் உள்ளதா என்றால், அவர் 2026ஆம் ஆண்டு முதல் 2031ஆம் ஆண்டு வரை எடுக்கும் நிலைப்பாடுகளை பொறுத்தது. அப்போது ஒரு பக்கம் அவர் செல்லத்தான் வேண்டும். 2011 தேர்தலில் விஜயகாந்த் அவ்வாறுதான் கூட்டணி வைத்தார். விஜய்க்கு அனுபவம் இல்லை என்பது உண்மைதான். ஆனால் அனுபவத்தோடுதான் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. புதிதாக வந்தும் சாதிக்கலாம். சினிமாவில் அது சாத்தியம். ஆனால் அரசியலில் அது சாத்தியமில்லை. என்.டி.ராமாராவ் மட்டும் அதில் விதி விலக்கானவர். ஏனெனில் அவர் ஆந்திர மக்களால் கடவுளாக பார்க்கப்பட்டார். எம்.ஜி.ஆர்-ம் புதுச்சேரியில் ஆளுங்கட்சியாக இருந்தார். அப்படிப்பட்ட சூழல் வேறு யாருக்கும் அமையவில்லை.

திருமாவளவனின் இன்றைய அறிக்கையில் ஆதவ் அர்ஜுனாவின் கருத்து என்பது தனிப்பட்ட நபரின் கருத்தாக பார்க்க முடியாது என்றும், அதனை கட்சியின் கருத்தாகவே பார்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இப்போது தான் திருமாவளவன் நிதர்சனத்தை புரிந்துகொண்டுள்ளார். இது ஆதவ் அர்ஜுனா நீக்கத்தை நோக்கி செல்லும். அவர் விஜயுடன் சென்று சேர்ந்துவிடுவார். அத்துடன் அவரது கதை முடிந்துவிடும். திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெறும் இறுமாப்புடன் கூறுவதாக விஜய் தெரிவித்துள்ளார். ஆனால் கலைஞர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் தேர்தலில் இலக்கு நிர்ணயித்து தான் போட்டியிட்டுள்ளனர். ஆனால் 200 இடங்களில் வெல்வது சாத்தியம் தானா என பார்க்க வேண்டும். இதற்கு முன்னாள் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. அதேவேளையில் விஜய் பூஜியத்தில் இருந்து 200 என்பது சாத்தியம் இல்லாதது.

வெள்ள நிவாரணம் வழங்குவது குறித்து தமிழக அரசு மீது விஜய் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் அண்மையில் அவர் டிபி சத்திரம் பகுதி மக்களை தனது வீட்டுக்கு வரழைத்து வெள்ள நிவாரணம் கொடுத்துள்ளார். டி.பி.சத்திரம் பகுதிக்கு அவர் சென்றுள்ளாரா என தெரியவில்லை. அந்த பகுதி புயலால் பெரிய அளவில் பாதிக்கப்பட வில்லை. யாரோ சிலரை கூட்டிச்சென்று நிவாரணம் கொடுத்துள்ளார். அதற்கு பதிலாக உண்மையில் பாதிக்கப்பட்ட விக்கிரவாண்டியில் இருந்தோ, அல்லது புஸ்ஸி ஆனந்தின் சொந்த மாநிலமான புதுச்சேரியில் உள்ளவர்களுக்கோ நிவாரணம் கொடுத்திருக்கலாம். அதனால் தான் விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை, அரசியலில் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

MUST READ