திரைப்பட துறையில் இருந்து நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி, ஒரு மாநாடு நடத்தி முடித்தப் பின்னரும் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியும் என்ற நம்பிக்கை விஜய்க்கு வரவில்லை. ஒரு வேளை கூட்டணிக்கு திருமாவளவன் சம்மதிக்க வில்லை என்றால் விஜய் தன் கட்சியை என்ன செய்யப்போகிறார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அம்பேத்கர் நினைவு நாள் டிசம்பர் 6ம் தேதி “அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர் ” என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் தவெக தலைவர் விஜய் கலந்துக் கொண்டு நூலை வெளியிட்டார். அதை ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய தவெக தலைவர் விஜய், அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும், தேர்தல் சுதந்திரமாக நடக்க வேண்டும், முதலமைச்சர், அமைச்சர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து “போட்டோ ஷூட்” நடத்துகிறார்கள் என்று மூன்று நான்கு கருத்துகளை பேசினார்.
புதியதாக அரசியல் கட்சி தொடங்கியிருக்கும் ஒரு தலைவர் ஆளும் கட்சி செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவது ஜனநாயகத்தின் பண்பு. அதை எல்லோரும் வரவேற்க வேண்டும்.நாமும் வரவேற்கிறோம் . ஆனால் நூல் வெளியீட்டு மேடையில் விஜய் பேசிய பேச்சுகள் எதுவும் ஆரோக்கியமான அரசியல் பேச்சாக எடுத்துக்கொள்ள முடியாது.நாகரீகமாக பேசுகிறேன் என்ற பெயரில் திமுக மீது வன்மத்தை கக்கியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.
முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என்று அரசு கட்டமைப்பு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று களத்தில் இறங்கி மக்களுக்கு ஆறுதல் சொல்கிறார்கள். அப்போது என்ன முடியுமோ அதை நிவாரணமாக செய்து வருகிறது. அதை தவெக தலைவர் விஜய் “போட்டோ ஷூட்” என்று அநாகரிகமாக விமர்சனம் செய்கிறார்.
சென்னையில் தவெக கட்சியின் தலைமை அலுவலகத்தில் 300 பேருக்கு நிவாரணம் வழங்கி போட்டோ ஷூட் நடத்தியது விஜய். அவர் மன்னர் மாதிரி அவருடைய அரண்மனையில் அமர்ந்து கொண்டு, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் 300 பேரை தான் இருக்கும் இடத்திற்கு வரவழைத்து நிவாரணம் வழங்கி, அதை போட்டோ ஷூட் நடத்தி பத்திரிகைகளுக்கு அனுப்பியவர் விஜய். அவர் களத்தில் இறங்கி உழைப்பவர்களை “போட்டோ ஷூட்” என்று கொச்சைப்படுத்தி பேசுகிறார்.
ஜனநாயக முறைப்படி, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற அரசை “மன்னர் ஆட்சி” என்று கேவளப்படுத்துகிறார். உண்மையில் அவர் எந்த மாதிரி அரசியலை கட்டமைக்க திட்டமிடுகிறார் என்று தெரியவில்லை.
மேலும் இன்னும் ஒரு தேர்தலையும் சந்திக்காத ஒரு கட்சியின் தலைவர், முதலில் தேர்தலை சந்தித்து படிப்படியாக தனக்கான செல்வாக்கை நிருபித்தப் பின்னர் கூட்டணி குறித்து பேசவேண்டும். அதுதான் தன்னம்பிக்கை உள்ள ஒரு கட்சியின் தலைவருக்கு அழகு. அதைதான் சீமான் உள்ளிட்ட எல்லோரும் நிருபித்து இருக்கிறார்கள்.
அரசியலில் ஆரம்பப் பள்ளி பாடம் கூட படிக்காத விஜய், அரசியலில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரு தலைவர் திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுப்பது தான் நாகரீகமான அரசியலா? அவர் உங்களோடு கூட்டணிக்கு வருகிறேன் என்று நேரடியாகவோ, மறைமுகமாகவோ சொன்னாரா? தமிழக அரசியல் களத்தில் திருமாவளவன் தெளிவான அரசியல் தலைவர், “நான் திமுக கூட்டணியில் தான் இருப்பேன். இது நான் உருவாக்கிய கூட்டணி” என்று ஒன்றுக்கு 10 முறை தெளிவாக கூறிவிட்டார். அவரை மீண்டும் மீண்டும் நெருக்கடிக்கு உள்ளாக்குவது என்ன அரசியல் நாகரீகம்? இப்படி பட்ட மோசமான அரசியலை பேசும் விஜய்யை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. திருமாவளவனோடு கூட்டணி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் விஜய் கட்சி ஆரம்பித்தாரோ என்ற சந்தேகம் எழுகிறது. ஒரு வேளை திருமாவளவன் சம்மதிக்க வில்லை என்றால் விஜய் தன் கட்சியை என்ன செய்ய போகிறார்?.. களைத்து விடுவாரோ என்ற சந்தேகம் எழுகிறது.
அதேபோன்று மணிப்பூரில் நடந்து கொண்டிருக்கும் கலவரத்திற்கும் வேங்கைவயல் சம்பவத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் இரண்டையும் ஒரே கண்ணோட்டத்தோடு பார்க்கும் விஜய்யின் அரசியல் அறிவை எப்படி வர்ணிப்பது என்று தெரியவில்லை.
வேங்கைவயல் சம்பவம் கொடுரமானது, கண்டிக்க வேண்டியது. அதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் வேங்கைவயல் பிரச்சனையில் இதுவரை விஜய் என்ன செய்தார்? ஒரு அறிக்கை வெளியிட்டாரா? குறைந்தபட்சம் ஒரு ட்விட்டாகிலும் பதிவிட்டாரா என்றால் எதுவும் இல்லை. கட்சி ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிறது. இப்போது ஒரு மேடை கிடைத்ததும் அதைப் பற்றி பேசுகிறார். மேலும் மணிப்பூரோடு வேங்கை வயலை ஒப்பீடு செய்து கருத்து சொல்கிறார். மணிப்பூரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். லட்சக்கணக்கான மக்கள் வீடு வாசலை இழந்து தவிக்கிறார்கள். மசூதி, சர்ச் என்ற வழிப்பாட்டு தளங்கள் தீக்கரையாக்கப் பட்டுள்ளது. எந்த சம்பவத்தை எதனோடு ஒப்பீடு செய்வது என்ற புரிதல் கூட இல்லாமல் பேசுகிறார்.
தவெக தலைவர் விஜய் வேங்கைவயலைப் பற்றி பேசுவதில் தவறேதும் இல்லை. அதற்கு முன்பு அவர் களத்திற்கு வரவேண்டும். மக்களை சந்திக்க வேண்டும். வெறும் போட்டோ ஷூட் அரசியல் எடுபடாது என்கிற எதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்.