35 ஆண்டுகால அரசியல் அனுபவம் நிறைந்த திருமாவளவனை, நேற்று அரசியலுக்கு வந்த விஜய் இழிவுபடுத்தும் விதமாக பேசியதால் ஆத்திரத்தில் அவரை கூத்தாடி என கூறினேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
விகடன் நூல் வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா பேசியது குறித்து விசிக துணை பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான ஆளுர் ஷாநவாஸ் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவார்ந்த தலைவர், நிர்பந்தங்களுக்கு கட்டுப்படாதவர், கொள்கைக்காக எம்.எல்.ஏ பதவியையே துறந்தவர். பாஜக எவ்வளவோ வலைவீசியும் அதில் சிக்காமல், எதிர்ப்பு அரசியலை மேற்கொண்டு வருகிறார். அப்படிப்பட்ட தலைவரை விஜய் எப்படி பேசுகிறார். இந்த மேடைக்கு திருமா வராததற்கு காரணமாக கூட்டணி நிர்பந்தம் என்று சொன்னால் என்ன அர்த்தம். கூட்டணியை கொச்சைப் படுத்துகிறாரா?, கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுகவை கொச்சைப்படுத்துகிறார? அல்லது திருமாவளவனை கொச்சை படுத்துகிறாரா?
எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் முதலில் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் என்றும் திருமாவும பங்கேற்க வேண்டும் என கூறப்பட்டது. இதனை ஏற்று திருமாவும் பங்கேற்பதாக அறிவித்திருந்தார். பின்னர் விஜய் பங்கேற்பதாக கூறப்பட்டது. நிகழ்ச்சி ஏன் மாற்றப்பட்டது. விஜய் எப்படி இந்த நிகழ்ச்சிக்கு வந்தார் என்பது தெரியவில்லை. ஆனால் விழாவில் யார் பங்கேற்றது என்பது தான் விஷயம். ஆதவ் அர்ஜுனாவுக்கு ஒரு நோக்கம் இருந்தது நேற்று தெரிய வந்தது. நோக்கங்களுக்கு அப்பாற்பட்டு வலைப்பின்னல் எதுவும் பின்னப்படாமல் முழுமையாக புரட்சியாளர் அம்பேத்கருக்கு சிறப்பு செய்கிற விழா மட்டும்தான் என்ற அளவில் அந்த நிகழ்ச்சி நடைபெற்றதா?
தலைவரை பெருமைப்படுத்தும் தொண்டன் என்றால் தலைவன் வேண்டாம் என்றால் நாமும் பங்கேற்க கூடாது என முடிவெடுத்திருக்க வேண்டும். எந்த நிகழ்ச்சியையும் புறக்கணிக்காத தலைவர் போகவில்லை என்றால் அதற்கான காரணம் குறித்து யோசிக்க வேண்டும். அவர் விரும்பும் மற்றொரு நாளில் வைத்துக்கொள்ள வேண்டும். தலைவர் வராவிட்டாலும் பரவாயில்லை. இன்னொரு தலைவரை வைத்து நிகழ்ச்சியை நடத்த மாட்டார். இருந்தபோதும் புத்தக வெளியீட்டு விழாவை அம்பேத்கர் விழாவாக மட்டுமே நடத்த வேண்டும் என ஆதவுக்கு அறிவுரை கூறி இருந்தார். ஆனால், நூல் வெளியீட்டு விழாவை தங்களுக்கான அரசியல் மேடையாக மாற்றிக்கொண்டனர். உங்களுக்கான அரசியல் பேச வேண்டும் என்றால் நீங்கள் மேடை போட்டு பேச வேண்டும். நாங்கள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, தவெக கூட்டணியில் இணைய முடிவெடுத்தால் நீங்கள் அப்படி பேசலாம். ஆனால் நாங்கள் அப்படி ஓரு நிலைப்பாட்டை எடுக்கவில்லை.
திமுகவை எதிர்த்து விஜய் அரசியல் செய்தை நாங்கள் வரவேற்கிறோம். அதற்கு ஏன் விசிகவை இழுக்கிறீர்கள். விசிக அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்ததாக உங்களிடம் சொன்னதா, திமுகவை எதிர்த்து பேசிய ஆதவ் விசிகவை சேர்ந்தவர். அவர் மீது என்ன செய்ய வேண்டும் என கட்சித்தலைமை முடிவெடுக்கும். ஆனால் விஜய் ஏன் அவர்கள் விரித்த சதி வலையில் சிக்குகிறார். இது சதி என்பதை அறிந்து தான் திருமாவளவன் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் தவிர்த்தார். புத்தக வெளியீட்டு விழாவை அவர்கள் மலிவான அரசியல் மேடையாக மாற்றினார்கள். உங்களுடைய அரசியலுக்கு விசிகவை இழுக்காதீர்கள். உங்களிடம் வந்து நாங்கள் இந்த கூட்டணியை விரும்புகிறோம், அந்த கூட்டணியில் இருந்து விலக விரும்புகிறோம் என்று சொன்னோம் என்றால் நீங்கள் பாருங்கள். ஆனால் நாங்கள் அப்படி சொல்லவில்லை. பின்னர் ஏன் நீங்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாட்டை எடுக்கிறீர்கள். நாங்கள் தாவெக இப்படித்தான் செயல்பட வேண்டும் என புற அழுத்தம் கொடுத்தோமா. ஆனால் விஜய் புத்தக வெளியீட்டு விழாவிற்கு திருமாவளவன் வந்தே ஆக வேண்டும் என புற அழுத்தம் கொடுத்தார்.
இந்த நிகழ்ச்சியை முழுக்க முழுக்க அரசியல் மேடையாக மாற்றியது விகடன், ஆதவ் அர்ஜுனா மற்றும் விஜய் ஆகியோர் தான். இவர்கள் இப்படித்தான் செய்வார்கள். இதற்காக தான் வலையை விரிக்கின்றனர். திமுக கூட்டணியில் ஓரு உடைப்பை ஏற்படுத்துவதற்காகவே திட்டமிடுகிறார்கள். திருமாவளவனை கூட்டிவந்து மேடையில் உட்காரவைத்துவிட்டு மேடையில் அரசியல் செய்து, அந்த நிமிடமே கூட்டணியை காலிபண்ணலாம் என்பதற்காக செய்தார்கள். திருமாவளவன் மேடையில் இருந்திருந்தால் இதைவிட இன்னும் மோசமாக பேசியிருப்பார்கள். அவ்வாறு நடந்திருந்தால் அவர்களது நோக்கம் நிறைவேறி இருக்கும். ஆனால் அதனை நாங்கள் அதை தகர்த்து விட்டோம். அந்த வெறுப்பில், கோபத்தில் தான் விஜயே இறங்கிஅடிக்கிறார்.
கூட்டணி நிர்பந்தத்தால் திருமா வரவில்லை என்று, எவ்வளவு பெரிய அபத்தம் இதை எப்படி ஏற்க முடியும். நான் கூத்தாடி என்று சொன்னது உங்களை காயப்படுத்தி இருந்தால் அதனை திரும்ப பெற்றுக் கொள்கிறன். 35 ஆண்டுகால அரசியல் தலைவரை, நேற்று வந்த நடிகர் இப்படி சொல்லலாமா? அதனால் தான் உணர்ச்சி வசப்பட்டு அப்படி ஒரு வார்த்தையை சொன்னேன். தலைமை செயலகத்தில் திமுக நிர்வாகி பேசுவது போல திருமா பேசுவதாக கூறிய நிருபரிடம் திருமா தனது அறச்சீற்றத்தை வெளிப்படுத்தினார். அது போன்றது தான் இதுவும்.