உலகில் ஒவ்வொரு உயிரினமும் ஏதோ ஒரு பயன்பாட்டுக்காகத் தான் படைக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த ஒரு பயனும் இல்லாமல் படைக்கப்பட்ட ஒரே உயிரினம் மனித இனம். போட்டி, பகை, பொறாமை என தீய எண்ணங்களைக் குருதி ஊற்றி வளர்த்த இனம் நம் மனித இனம். இத்தகைய மனித இனத்திலும் சில நேரம் வால் நட்சத்திரங்களைப் போல அதிசயமாய்ச் சிலர் தோன்றி மறைவதும் உண்டு. அப்படி ஒரு அதிசயமாய் வாழ்ந்து விதையாக மண்ணில் விதைக்கப்பட்டுள்ளார் மாமனிதன் விஜயகாந்த்.
1952-ல் மதுரை மண்ணின் மைந்தனாக பிறந்த விஜயராஜ், தமிழ்த் தாயின் மடியில் தவழ்ந்து, கலைத்தாயின் ஆதரவில் வளர்ந்து அரசியலிலும் மாபெரும் விருட்சமாய் நின்றார் விஜயகாந்த். இவருடைய குடும்பம் மிகப்பெரியது. குடும்பப் பிரச்சினைகளை சமாளித்து இவர் பெற்ற அனுபவங்கள் சிறுவயதிலேயே அனுபவ ரீதியிலான முதிர்ச்சியைக் கொடுத்தது.
இவர் படித்ததோ 10ஆம் வகுப்பு வரை தான். இளம் வயதிலேயே சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சென்னைக்கு வந்தவருக்கு சினிமாவில் பிள்ளையார் சுழி போட்டவர் இயக்குனர் காஜா.1978-ல் இவர் இயக்கத்தில் வெளிவந்த “இனிக்கும் இளமை” படத்தில் விஜயகாந்தை அறிமுகப்படுத்தினார். வெள்ளித் திரையில் பலர் வந்த இடம் தெரியாமல் காணாமல் போனதுண்டு. அது போல தான் இவரும் என்று எண்ணிய பலரையும் வியப்பின் உச்சத்தில் ஆழ்த்தும் படியாக அமைந்தது இவருடைய திறமையும் வளர்ச்சியும்.
இவர் நடிப்பில் வெளிவந்த அடுத்தடுத்த படங்கள் சினிமாவில் மட்டுமின்றி தமிழ் மக்கள் நெஞ்சுக்குள்ளும் விஜயகாந்துக்கு சிவப்புக் கம்பள வரவேற்பை அளித்தது. 150 படங்கள் வரை இவர் நடித்திருந்தாலும் பல படங்கள் அறிமுக இயக்குனர்கள் இயக்கிய படம்தான். திரைப்படக் கல்லூரி மாணவர்களை ஏளனமாகப் பார்த்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் “ஊமை விழிகள்” படத்தில் பல திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்திருந்தார். அப்படத்தின் மாபெரும் வெற்றி திரைக்கல்லூரி மாணவர்கள் மீதான பார்வையை மாற்றி அமைத்தது.பசி என்ற வார்த்தை மிகக் கொடுமையானது என்பதை உணர்ந்து, படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் சமமான உணவு அளிக்கப்பட வேண்டும் என்று திட்டவட்டமாக கூறியவர்.
1991இல் இயக்குனர் ஆர். கே செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்தின் நூறாவது படமாக வெளிவந்த “கேப்டன் பிரபாகரன்” என்ற மாபெரும் வெற்றிப் படத்திற்கு பிறகு தான் இவர் கேப்டன் என்று அழைக்கப்பட்டார் என பலரும் நினைத்து வருகின்றனர். ஆனால் 1988 ஆம் ஆண்டு வெளியான செந்தூரப்பூவே படத்தில் “கேப்டன் சௌந்தர பாண்டியன்” எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விஜயகாந்த். அப்படத்தின் படப்பிடிப்புகளின் போதே இவரை கேப்டன் என்று தான் அனைவரும் அழைத்து வந்தனர். அதிலிருந்து அனைவராலும் கேப்டன் என்று தான் அடையாளப்படுத்தப்படுகிறார்.
முன்னணி நடிகராக மாறிய பின்னும் விஜயகாந்த் பல இளம் தலைமுறையினர் சினிமாவில் சாதிக்கத் துணையாக நின்றார். உதாரணமாக கேப்டன் பிரபாகரன் படத்தில் மன்சூர் அலிகானுக்கு வில்லனாக வாய்ப்பு கொடுத்து அழகு பார்த்தார். ஆரம்ப காலத்தில் நல்லதொரு படத்துக்காக காத்திருந்த நடிகர் விஜய்க்கு “செந்தூரப்பாண்டி” படத்தில் தனக்கு தம்பியாக நடிக்க வாய்ப்பு கொடுத்தார். இதற்காக விஜயகாந்த் சம்பளமே வாங்காமல் இந்த படத்தில் நடித்துக் கொடுத்திருந்தார். வடிவேலுவுக்குப் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாத சமயத்தில் அவரை அழைத்து “சின்னக் கவுண்டர்” படத்தில் வாய்ப்பு கொடுத்து வடிவேலுவின் வெற்றிப் பாதைக்கு அடித்தளமிட்டார். இதேபோல் நடிகர் கரண், நகைச்சுவை நடிகர் செந்தில் ஆகியோருக்கும் முக்கியமான நேரத்தில் இவருடைய படங்களில் வாய்ப்பு கொடுத்து அவர்களுடைய வாழ்க்கையில் விளக்கேற்றினார்.
திரைத்துறையின் உச்சத்தை அடைந்த கேப்டன் விஜயகாந்த் அடுத்ததாக நடிகர் சங்கத்தின் தலைமை பொறுப்பில் அமர வைக்கப்பட்டார். மிகப்பெரும் பொருளாதார சிக்கலில், நஷ்டத்தில் கலங்கி நின்ற நடிகர் சங்கத்தை தோள் கொடுத்து தூக்கி நிறுத்தியவர் விஜயகாந்த். மலேசியாவுக்கு அனைத்து நடிகர்களையும் அழைத்துச் சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி அதில் வந்த பணத்தைக் கொண்டு நடிகர் சங்க கடனை அடைத்து திரைத்துறைக்கு மாபெரும் பங்காற்றினார். கடனை அடைத்தார் என எளிதாகச் சொல்லி விட முடியும் ஆனால் அதற்காக அவர் பட்ட இன்னல்கள் விவரிக்க இயலாதவை. ஒரு நடிகரை வைத்து படத்தை எடுத்து முடிக்கவே படாத பாடுபடும் படக்குழுவினர்களுக்கு மத்தியில் இத்தனை பெரிய நட்சத்திர பட்டாளத்தையே மலேசியாவில் ஒருங்கிணைத்துக் கலை நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார் கேப்டன்.
ஈடு இணை இல்லாத ஆளுமையால் சினிமாத் துறையை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற விஜயகாந்த் வெறுமனே நடிப்போடு நின்று விடாமல் தன் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலில் களம் இறங்கினார். மிகப்பெரிய அரசியல் ஆளுமைகளுக்கு மத்தியில் அவர்களை எதிர்த்து அரசியல் செய்யத் தயாரானார் கேப்டன். கிட்டத்தட்ட சினிமாவில் தான் சம்பாதித்த அனைத்தையும் இழக்கும் நிலை ஏற்பட்ட போதும், எதிர்த்துப் போராடி அரசியலில் முத்திரை பதித்தார். 2011-2016 காலகட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்னும் அந்தஸ்தைப் பெற்று தமிழக அரசியல் வரலாற்றின் போக்கை மாற்றினார் விஜயகாந்த்.
விமான நிலையத்தில் படிவம் நிரப்ப வேண்டும் என்றால் கூட பக்கத்தில் இருக்கும் நடிகர்களை உதவி கேட்கும் அளவுக்கு படிப்பறிவில் பின்தங்கி இருந்தார் கேப்டன், ஆனால் அதுவே பின்னாளில் கல்வியின் முக்கியத்துவத்தை அவர் பலருக்கும் எடுத்துக் கூற காரணமாகவும் இருந்தது. அரசியலின் முக்கிய நோக்கமாக “அனைவருக்கும் கல்வி” என்பதில் ஆணித்தனமாக இருந்தார். சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும், இத்தனை கட்சிகள் நம்மை ஆண்டும், இத்தனை ஜாதி சங்கங்கள் இருந்தும் ஏன் அனைத்து மக்களும் கல்வி கற்க வேண்டும் என்பதை யாரும் முன் மொழியவில்லை? என்ற கேள்விதான் விஜயகாந்தை விடாமல் துரத்திக் கொண்டே இருந்தது. தன்னுடைய சொந்த பணத்தில் 600 கணினிகளை வாங்கி கிராமப்புற மாணவர்களும் கணினி அறிவு பெற்று வேலைவாய்ப்பு பெருகிட வழிவகை செய்தார்.
விஜயகாந்த் எதார்த்தமான அரசியல்வாதியாக வாழ்ந்து காட்டினார். பலமுறை மீடியாக்களிடமும், சட்டமன்றத்தில் அரசியல்வாதிகளின் முகத்துக்கு நேராகவும் தன் கோபத்தை சமரசம் இன்றி வெளிப்படுத்தியவர்.கம்பீர உருவமாக இருந்தாலும் மனதளவில் குழந்தைத்தனமானவர் என அவருடன் நெருங்கி பழகியவர்கள் அடிக்கடி கூறுவது உண்டு. அதேசமயம் பிரச்சனை என்று வந்தால் வேட்டியை மடித்து கட்டி களத்தில் இறங்கவும் யோசிக்காத மனிதர். மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றால் அதற்கு முதலமைச்சராக வேண்டும் என்பது அவசியம் இல்லை அதற்கு நல்ல மனிதராக இருந்தாலே போதும் என்பதை நிரூபித்தவர். நடிகர் விஜயகாந்த் தன்னுடன் சினிமாவில் நடித்தவர்களுக்கு மட்டுமல்லாமல் முகம் தெரியாதவர்களுக்கு கூட முன்வந்து உதவி செய்வார். தன் குடும்பம், தன் நண்பர்கள், தன் உறவினர்கள் என வாழும் சமூகத்தில், தன் வாழ்நாள் முழுவதும் தன்னலம் கருதாத பொது நலவாதியாக மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்தவர். அதனால்தான் அவருக்கு சினிமா, அரசியலை தாண்டி ஏராளமான மக்களின் அன்பு கிடைத்தது. அந்த வகையில் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்த சகாப்தமாய் வாழ்ந்தவர் தான் கேப்டன் விஜயகாந்த்.
உடல் நிலையில் ஏற்பட்ட பின்னடைவால் ஒரு நல்ல தலைவனை பார்க்க முடியவில்லை என்ற ஏக்கத்தை அனைவருக்கும் உருவாக்கி விட்டவர். மீடியாக்களின் வேட்டைக்காடாக மாறி கேலி,கிண்டல்களுக்கு உள்ளானவர். இருப்பினும் உண்மை தெரிந்த பலருக்கும் தெரியும் கேப்டன் யார் என்று. தன்னோடு நெருங்கி பழகியவர்களும், தன்னால் வளர்ந்தவர்களும் கூட தன்னை அவதூறாகப் பொது இடங்களில் பேசிப் பிரச்சாரம் செய்து வந்ததை பொருட்படுத்தாமல் அவர்களுக்கு வெற்றி கிடைக்கட்டும் என பாராட்டிய உன்னத உள்ளம் கொண்டவர். கேமராவிற்கு முன்னாலும் பின்னாலும் தன் இயல்பு குணத்திலிருந்து மாறாமல் நின்றவர். சில சமயம் மீடியாக்களிடம் இவர் பேசிய பேச்சு சர்ச்சையாக மாறிய போதிலும் இவருடைய கோபத்தில் நியாயம் இருந்ததை மீடியாக்கள் மறுக்கவில்லை.
ஒரு மனிதன் எப்படி தன் வரலாற்றை படைக்க வேண்டும் என இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்து காட்டியுள்ளார் விஜயகாந்த். வைரங்கள் மண்ணிலிருந்து வெட்டி எடுக்கப்படுவதுண்டு. ஆனால் ஒரு கருப்பு வைரத்தை கனத்த இதயத்துடன் மண்ணில் புதைத்துள்ளோம். ஒரு மாபெரும் விருட்சத்தை விதையாக விதைத்துள்ளோம். நினைவலைகளால் நம்மை விட்டு நீங்காத கேப்டன் விஜயகாந்தை முன்மாதிரியாக எடுத்து வாழ்வில் சாதிக்க அவர் என்றும் ஒரு வழிகாட்டியாக நம்மில் இருப்பார்.