Homeசெய்திகள்கட்டுரைவக்பு மசோதா : பாஜக நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று!

வக்பு மசோதா : பாஜக நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று!

-

- Advertisement -

வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருது தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த மக்களின் உணர்வாகும் என்று விசிக துணை  பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசு மக்களவையில் நிறைவேற்றியிருக்கும் வக்பு வாரிய திருத்த சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆளூர் ஷாநவாஸ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள நேர் காணலில் கூறி இருப்பதாவது:- வக்பு வாரிய சட்டத்திருத்தம் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. விவாதத்தின்போது வக்பு சட்டம் ஏற்கனவே 2 முறை மாற்றப்பட்டு உள்ளதாகவும், பாஜக ஒரு விஷயத்தை வாக்கு வங்கிக்காக செய்யாது, நீதிக்காக தான் செய்யும் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்லியுள்ளார். தற்போதுள்ள சட்டம் முஸ்லிம் மக்கள் பயன்படுவதில் போதாமை இருந்தால், இன்னும் அதை செலுமைப்படுத்தி  அந்த மக்களுக்கு எப்படி நன்மை செய்யலாம் என்று பார்த்து செய்வது அந்த மக்களுக்கான நலனுக்கானது ஆகும். ஆனால் முஸ்லிம்களின் நன்மைக்காக பாஜக ஒரு சட்டத்தை கொண்டுவருமா? அல்லது அவர்களுக்கு எதிராக கொண்டுவருமா?

நாங்கள் வழிபாட்டில் தலையிடவில்லை என்று, அந்த சொத்துக்கள் முஸ்லிம்களுக்கு பயன்படாமல் இருக்கிறது. எனவே அதனை பயன்படுத்துவதற்காக தான் இதை செய்கிறோம் என்று வார்த்தைகளில் பேசுகிறார் அமித்ஷா. பாபர் மசூதியை இடித்துவிட்டு அந்த இடத்தில் ராமர் கோவிலை கட்டினார்களே அது வழிபாட்டில் தலையிடுவது இல்லையா? ஹலால் உணவு முறை, ஹிஜாப் முறையில் தலையிடுவது வழிபாட்டில் தலையிடுவது இல்லையா? முத்தலாக் சட்டத்தில், திருத்தம் மேற்கொண்டு அதனை இல்லாமல் செய்துள்ளது வழிபாட்டில் தலையிடுவது இல்லையா? முழுக்க முழுக்க  முஸ்லிம்களின் வழிபாட்டு முறையில் தலையிடுவது, அவர்களது உரிமைகளை பறிப்பது என்பதுதான் பாஜகவின் செயல் திட்டமாகும். அதனுடைய தொடர்ச்சிதான் இன்று வக்புவில் வந்து நிற்கிறது.

மோடி - அமித்ஷா

கேட்டால் என்ன சொல்கிறார்கள் ரயில்வேக்கு அடுத்து, ராணுவத்திற்கு அடுத்து இவ்வளவு பெரிய சொத்து வக்பு வாரியத்திடம் இருக்கலாமா? என்று கேள்வி எழுப்புகின்றனர். நாடு தழுவிய அளவில் வக்பு வாரியங்களுக்கான சட்டம் உள்ளதால், அதன் சொத்து விவரங்கள் மத்திய அரசுக்கு தெரிகிறது. ஆனால்  நாடு தழுவிய அளவில் கோவில்களுக்கான சட்டம் உள்ளதா? கோவில்களுக்கு எவ்வளவு சொத்துக்கள் உள்ளன என்று நாடு தழுவிய அளவில் கணக்கெடுக்கப்பட்டு உள்ளதா? ஒரே பட்டியலின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதா? கேளராவில் உள்ள பத்மநாத சுவாமி கோவில் பாதாள அறையில்  கணக்கெடுத்தபோது ஒரு லட்சம் கோடிக்கு சொத்து இருக்கும் என்கிறார்கள். ஒரு கோவிலுக்கே இவ்வளவு சொத்து என்றால், நாடு முழுவதும் உள்ள கோல்விகளுக்கு எவ்வளவு சொத்து இருக்கும். அதே இப்படி ஒரே அட்டவணையில் கணக்கிட்டு பார்த்தால் அது ரயில்வே, ராணுவத்தையும் மிஞ்சும் அல்லவா? இந்த நிலங்களை எல்லாம் கைப்பற்றி அரசு நிலமாக மாற்றி விடுவீர்களா? அப்படி செய்ய முடியுமா?

முஸ்லிம்களின் வாழ்வியலை மேம்படுத்த மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் சச்சார் ஆணையம் நாடு முழுவதும் பயணித்து, அவர்களுடைய வாழ்வியல் நிலை குறித்து அறிக்கை அளித்துள்ளது. ரங்கநாதன் மிஸ்ரா ஆணையம் முஸ்லிம் மக்களின் வாழ்நிலையை மேம்படுத்த வேண்டும் என்றால் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. மன்மோகன் ஆட்சிக்காலத்தில் சிறுபான்மையினருக்கான 15 அம்ச திட்டங்கள் என்ற திட்டம் போடப்பட்டது. அந்த மக்கள் மீது கரிசனம் கொண்ட மோடி அந்த சட்டங்களை எல்லாம் செயல்படுத்தினாரா? தேர்தலில் முஸ்லிம்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்குவது கிடையாது. தமிழ்நாட்டில் ஒரு கோவிலுக்கு அறங்காவலராக நர்கீஸ்கான் என்பவர் நியமிக்கப்படுகிறார். இந்துவான அவருக்கு, மருத்துவரின் நினைவாக அந்த பெயர் சூட்டப்பட்டிருந்தது.உடனே அதனை எதிர்த்து ஹெச்.ராஜா அறிக்கை விடுகிறார். அவர்கள் முஸ்லிம்கள் நிர்வாகத்தில் இந்துக்களை கொண்டு நியமிக்கிறார்கள். அதற்கு சட்டத்தை திருத்துகிறார்கள். திருப்பதி கோவிலில் மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் பணியாளர்களாக இருக்கக்கூடாது என்கிறார்.

இந்தியா முழுவதும் உள்ள வக்பு சொத்துக்கள், அந்தந்த வக்புக்கள், பள்ளிவாசல்களுக்கு பெரியோர்களால் எழுதி வைக்கப்பட்டது. அந்த சொத்துக்களுக்கு கண்காணிப்பாளர்தான் வக்பு வாரியம். அந்த வாரியத்தின் முழுமையான கட்டுப்பாடு அரசிடம் இருக்கும். அப்போது அரசு வக்பு வாரியத்தின் வாயிலாக சொத்துக்கள் பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் மட்டும் மேற்கொள்ளப்படும். சொத்துக்கள் அந்த அந்த வக்புகளுக்கு தான் சொந்தமாகும். மக்களுடையது. வக்பு வாரியம் நினைத்தால் சொத்துக்களை வாங்கவோ, விற்பனை செய்யவோ முடியாது. அதனை வக்புதான் செய்ய முடியும். மேலும் வக்பு சொத்துக்களை விற்க முடியாது. அப்போது சொத்துக்களை மீட்க வேண்டும் என்றால் வக்பு வாரியத்தின் கட்டமைப்புகளை அரசு மேம்படுத்த வேண்டும். வக்பு வாரியத்திற்கு உரிய பணியாளர்களை நியமிக்க வேண்டும். அரசுக்கும், நீதிமன்றத்திற்கும் கட்டுப்பட்ட ஒரு அமைப்பை எதற்கு சீர்குலைக்கிறீர்கள்.

ஆங்காங்கே வக்புகளில் பிரச்சினை உள்ளது என்று கூறி ஒட்டுமொத்தமாக வக்பு சொத்துக்களே அரசாங்க சொத்து என்று மாற்ற சட்டம் இயற்றுகிறார்கள். ஒரு பள்ளிவாசலில், வக்பு சொத்தில் பிரச்சினை என்றால் அதை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனே அந்த சொத்தை எடுத்து அரசின் பெயரில் எழுதி வைப்பதா? அதை விடுத்து வக்புவிடம் இவ்வளவு சொத்துக்கள் உள்ளது என்பதா? அது முறையாக உள்ளதா? சட்டத்திற்கு உட்பட்டு உள்ளதா? என்று பாருங்கள். சட்டத்திற்கு புறம்பாக ஒரு செண்ட் நிலம் இருந்தாலும் அரசு கைப்பற்றி விடலாம். பாஜகவின் நோக்கம் இதன் மூலம் முஸ்லிம்களை அதிகாரமற்றவர்களாக மாற்றி, அவர்களின் உரிமைகளை பறிப்பதாகும். இதனை காண்பித்து வடமாநில இந்துக்களின் வாக்குகளை பெற்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள். வெறுமனே முஸ்லிம்கள் மட்டும் போய் பாஜகவை வீழ்த்த முடியாது. நியாய உணர்வு உள்ள இந்து மக்கள் இதனுடைய உண்மை தன்மையை புரிந்துகொள்ள முடியும்.

“கம்யூனிஸ்டுகளின் கடவுள்“ காரல் மார்க்ஸ்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

இன்றைக்கு தமிழ்நாடு சட்டமன்றமே வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிராக கொந்தளித்தது. 234 பேர் கொண்ட சட்டமன்றத்தில், 4 பேரை தவிர எஞ்சிய அனைவரும் வக்பு சட்டத்திருத்தத்தை எதிர்த்து தங்களுடைய கருத்தை பதிவு செய்கிறார்கள். தமிழ்நாடு அரசு கொண்டு வருகிற தீர்மானத்தை ஆதரிக்கிறார்கள். இதுதான் ஒட்டுமொத்த மக்களின் உணர்வாகும். இதுபோன்று நாடு தழுவிய அளவில் ஒரு உணர்வு வெளிப்படுகிற போது, கட்டாயமாக அவர் அவர் உரிமைகள் பாதுகாக்கப்படும். ஒருவர் வழிபாட்டு முறைகளில் மற்றொருவர் தலையிடாத நிலை ஏற்படும். அதுதான் நல்லிணக்கமாக நாடாக இருக்க முடியும். ஒரு சமுதாயத்திற்கு நல்லதாகும். நீங்கள் ஒரு சமுதாயத்தை தொடர்ந்து சீண்டிக்கொண்டே, அந்த சமூகத்தின் உரிமைகளை பறித்துக்கொண்டிருந்தால்  அந்த சமுதாயம் காயப்பட்டுக் கொண்டே இருந்தால் எப்படி அமைதியான சூழலுக்கு வழி வகுக்கும். ஒருவரை துன்புறுத்தினாலே, அது திரும்பி எதிர்வினையாக தான் முடியும். அப்படிதான் இந்த நாட்டில் பல அசம்பாவிதங்கள் நடைபெற்றுள்ளன.  அதை நோக்கிதான் இந்த நாட்டை பாஜக நகர்த்துகிறது. இதற்கு ஒரு முடிவு கட்டாயம் வரும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ