சுப வீரபாண்டியன்
இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பே, இந்தியாவின் மொழிச்சிக்கல் தொடங்கி விட்டது! 1920களிலேயே காந்தியார் இந்துஸ்தானி மொழியை, காங்கிரஸ் கட்சி மாநாடுகளில் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்! இந்துக்களின் இந்தி மொழியையும், இஸ்லாமியர்களின் உருது மொழியையும் இணைத்து உருவாக்கப்பட்ட இந்துஸ்தானி மொழியைப் பயன்படுத்துவதன் மூலம் எல்லோரையும் ஒற்றுமைப்படுத்தி விடலாம் என்பது காந்தியாரின் கருத்தாக இருந்தது!
அதாவது, இந்தியா பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட நாடு என்பதை மறந்து, மதங்களின் ஒற்றுமையே இந்தியாவின் ஒற்றுமைக்கு வழிவகுக்கும் என்ற எண்ணமே அதற்குக் காரணம்! இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக் கப்பட்ட காலத்திலும் மொழிச் சிக்கல் பற்றிய தெளிவான பார்வை வந்துவிடவில்லை. 1946 டிசம்பரில் இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுக்குழு உருவாக்கப்பட்டது. ஏறத்தாழ 3 ஆண்டுகளுக்குப் பிறகு 1949 நவம்பரில் அந்தச் சட்டத்திற்கான இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது!
பல்வேறு சட்டதிட்டங்களைப் பற்றி பேசி முடித்த பிறகும், இந்தியாவின் ஆட்சிமொழி குறித்த சிக்கல் தீரவில்லை! இறுதியாக, 1949 செப்டம்பர் 12, 13, 14 ஆகிய மூன்று நாள்களில் இந்தப் பிரச்சனை பற்றி மட்டுமே வரைவுக்குழு விவாதித்தது ! ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் இந்தி ஆட்சி மொழி என்றும், முதல் பதினைந்து ஆண்டுகளுக்கு ஆங்கிலம் இணை ஆட்சி மொழியாக நீடிக்கும் என்றும் இறுதியில் தீர்மானிக்கப்பட்டது!அதன்படி 15 ஆண்டுகள் கழிந்தவுடன் 1965 ஜனவரி 26 முதல் இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக நீடிக்கும் என்ற சூழலில்தான், தமிழ்நாட்டில் மிகப் பெரிய மொழிப்போர் எழுந்தது. இந்தித் திணிப்பை எதிர்த்த முதல் மாநிலமாகத் தமிழ்நாடு அமைந்தது! அதன்பிறகு வேறு சில மாநிலங்களில் இருந்தும் இன்று அந்தக்குரல் கேட்கிறது! ஒருமுறை. இருமுறை அன்று, 1937 தொடங்கி இன்றுவரையில் பலமுறை தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்று இருக்கின்றன.
இன்றுவரை அது ஓயவில்லை! இப்போது ஒன்றிய அரசு புது வழியில் மீண்டும் இந்தித் திணிப்பைத் தொடங்கி இருக்கிறது! மும்மொழித் திட்டத்தை ஏற்றால்தான், நிதி உதவி அளிக்கப்படும் என்று ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் பேசியிருக்கிறார். இதனைத் தமிழ்நாடு அரசு அரசியலாக்க வேண்டாம் என்றும் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்! தான் விரும்பும் எந்த ஒரு மொழியையும் ஒரு மாணவன் கற்றுக் கொள்ளலாம். இது ஒன்றும் இந்தித் திணிப்பு இல்லை என்று புது விளக்கத்தையும் தந்திருக்கிறார்.தமிழ்நாடு முதலமைச்சர் இதற்குச் சரியான இரண்டு விளக்கங்களைத் தந்திருக்கிறார். ஒன்று, மீண்டும் மீண்டும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இந்தியைத் திணித்து அரசியல் ஆக்குவது ஒன்றிய அரசுதான் என்பதை எடுத்துக் காட்டி இருக்கிறார். அடுத்து, இதனால் ஆயிரம் இல்லை, பத்தாயிரம் கோடி ரூபாய் நட்டம் வந்தாலும் தமிழ்நாடு இத்திட்டத்தை ஏற்காது என்று உறுதிபடக் கூறியிருக்கிறார்!
யார் ஒருவரும், தம் விருப்பத்திற்கு ஏற்ப, எந்த ஒரு மொழியையும் படிப்பதற்கு எந்தத் தடையும் இங்கு இல்லை! ஆனால் இந்தி மொழியைக் கட்டாயமாகப் படித்தே தீர வேண்டும் என்பதை மட்டுமே தமிழ்நாடு உறுதியாக எதிர்க்கிறது! இந்தி சமஸ்கிருதம் என்பவை வெறும் மொழிகள் மட்டுமில்லை, அவை பண்பாட்டு வல்லாண்மையின் அடையாளங்களாகவும் இருக்கின்றன. எனவேதான் அவற்றை நாம் எதிர்க்கிறோம். ஆங்கிலத்தை மட்டும் ஏன் ஏற்க வேண்டும் என்று சிலர் கேட்கின்றனர். உலகத் தொடர்புக்கு கூடுதலாகப் பயன்படும் மொழியாக இன்று ஆங்கிலம்தான் இருக்கிறது. எனவே அந்தப் பயன்பாடு கருதியே ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்கிறோம்.
ஆங்கிலம் நமக்குப் பயன்படுகிறது. இந்தியும், சமஸ்கிருதமும் நம்மைப் பயன்படுத்துகின்றன. இந்த அடிப்படை வேறுபாட்டைத் தமிழ்நாட்டு மக்களும், அரசும் நன்றாக உணர்ந்திருக்கின்றனர்! எனவே இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்பது வெறும் முழக்கம் மட்டுமன்று, தமிழ்நாடு உறுதியாகப் பின்பற்ற வேண்டிய கோட்பாடு என்பதை நமக்கு இந்திய ஒன்றிய அரசு மீண்டும் மீண்டும் உணர்த்திக் கொண்டே இருக்கிறது!