Homeசெய்திகள்கட்டுரைஉங்களுக்கு உங்களைப்பற்றி என்ன தெரியும்? - என்.கே.மூர்த்தி

உங்களுக்கு உங்களைப்பற்றி என்ன தெரியும்? – என்.கே.மூர்த்தி

-

உங்களுக்கு உங்களைப்பற்றி என்ன தெரியும்? - என்.கே.மூர்த்தி

உங்களுடைய வாழ்க்கையில் வெற்றிப்பெற வேண்டும். ஏதாவது ஒரு துறையில் சாதனை படைக்க வேண்டும் என்று விருப்பம், ஆர்வமும் கொண்டவராக இருக்கிறீர்கள். ஆனால் அது வெறும் விருப்பமாகவும், ஆர்வமாகவும் மட்டுமே இருக்கிறது. நினைத்த மாதிரி ஒரு வெற்றியும், சாதனையும் சாதிக்க முடியவில்லை. நடைமுறை வாழ்க்கையில் வெறும் வெறுப்பும், வேதனையும் தான் மீதம் இருக்கிறது.

அதற்கு என்ன காரணம்? அடிப்படையில் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை தெரிந்துக் கொள்ளாத வரை உங்களுடைய பிரச்சனைகள், வேதனைகள் உங்களை விட்டு போகாது. உங்களை நீங்கள் அறிந்துக் கொள்வதில் இருந்துதான் உங்கள் வாழ்க்கை பாதையை மாற்ற முடியும்.

உங்களைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்ற கேள்வி சாதாரணமானதாக தோன்றலாம் ஆனால் உங்கள் வாழ்க்கையின் அடித்தளமே அந்த கேள்வியில் இருந்து தான் தொடங்குகிறது.

பொதுவாக, ஒரு இன்டர்வியூக்கு போனால் அங்கே உங்களைப்பற்றி சொல்லுங்களேன் என்பார்கள். அப்பொழுது பெயர், ஊர், கல்வி தகுதி போன்ற சுய தகவல்களை மட்டும் கொடுப்பீர்கள். அதுமட்டுமா நீங்கள்?

நீங்கள் நிறைய புத்தகங்களை படித்திருப்பீர்கள். அதில் சில நூல்களை வாழ்க்கைக்கு வழி காட்டக்கூடியதாகவும் தேர்வு செய்து வைத்திருப்பீர்கள்.

உங்களுக்கு உங்களைப்பற்றி என்ன தெரியும்? - என்.கே.மூர்த்தி

 

இந்து, கிறிஸ்துவம், இஸ்லாமிய மார்க்கம் என்று நிறைய மத நூல்களை கற்று தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருக்கிறோம். கிருஷ்ணர், ரமணர் மகரிஷி, ஏசு, நபி என்று ஏராளமான ஞானிகளின் போதனைகளை மேற்கோள்களை காட்டி பேசுகிறோம்.

ஆயிரம் ஆயிரம் நூல்கள், குருமார்கள் சமூக வழிகாட்டுதலுக்கு வந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். போதனை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும் மனித சமுதாயத்திற்கு திருப்தி அளிக்கவில்லை. குழப்பங்கள் தான் அதிகரித்துக் கொண்டு வருகிறது. அந்த குழப்பங்களுக்கு, பிரச்சனைகளுக்கு தீர்வு காண மேலும் ஒரு குருவை, சாமியாரை, கடவுளை தேடுகிறோம். கோயில், தேவாலையங்கள் என்று அலைந்து திரிகிறோம். அப்பொழுதும் மனம் அமைதி அடையவில்லை. குழப்பங்களும், பிரச்சனைகளும் அப்படியேதான் இருக்கிறது.

ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் குழப்பங்களோடும், பிரச்சனைகளோடும் வாழ்வதற்கு பழகிக் கொள்கிறோம்.

உங்களுக்கு உங்களைப்பற்றி என்ன தெரியும்? - என்.கே.மூர்த்தி

நமக்கு நம்மைப் பற்றிய புரிதல் இல்லாமல் போனதால், நம்மைப்பற்றி தெளிவு இல்லாமல் போனதால் இன்னொருவரின் உதவியை தேடி செல்கிறோம்.

நாம் நம்மைப் பற்றி, நம் சிந்தனையின் போக்குகளைப் பற்றி, அதன் செயல்களைப் பற்றி அறிந்துக் கொண்டோம் என்றால் இன்னொரு சாமியாரை, குருவை தேடி போகவேண்டிய அவசியம் இருக்காது.

உங்களுக்கு எதற்காக குரு தேவைப்படுகிறார்? கடவுளை தேடுவது ஏன்? வாழ்க்கையில் பிரச்சனைகளும், குழப்பங்களும் வரும்போது கூடவே பயம் வருகிறது. வாழ்க்கை அவ்வளவு தான், முடிந்துவிட்டது என்கிற ஒருவிதமான பீதி வருகிறது. அந்த பயத்தில் இருந்து விடுபட, அந்த பயத்தில் இருந்து விடுதலைப் பெற ஆன்மீக குருக்களையும், சாமியார்களையும் தேடி செல்கிறீர்கள்.

உங்களுக்கு உங்களைப்பற்றி என்ன தெரியும்? - என்.கே.மூர்த்தி

நம்முடைய வாழ்க்கை முடிந்து போகும் அளவிற்கு நாம் ஏதோ செய்யக்கூடாத ஒரு தவறை செய்துவிட்டோம். அதனால் வாழ்க்கை மீது இருந்த நம்பிக்கை போய்விட்டது, உறுதி தன்மையை இழந்துவிட்டோம். அந்த சூழ்நிலையில் இடைக்கால நிவாரணியாக கடவுள் தேவைப்படுகிறார். குருவின் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது.
கடவுளே இந்த பிரச்சனையில் இருந்து என்னை எப்படியாவது காப்பாற்று என்று சரணடைகிறோம்.

உங்களுடைய ஒவ்வொரு பிரச்சனைக்கும், குழப்பத்திற்கும் அடிப்படை காரணம் நீங்கள் தான், பிரச்சனைகளையும், குழப்பங்களையும் உருவாக்கியவர் நீங்கள் தான் என்பதை மறந்துவிட்டு,அந்த பிரச்சனையை நேருக்கு நேர் அணுக முடியாமல் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள கடவுள் தேவைப்படுகிறார்.

குருமார்கள் நமக்கு நம்பிக்கையை தருவார்கள் என்றும், பயத்தில் இருந்து விடுபடுவதற்கு மன உறுதிய தருவார்கள் என்றும் அவர்களை தேடி செல்கிறீர்கள்.

நான் யார் ? – என்.கே.மூர்த்தி

உங்கள் பிரச்சனையை உங்களாலயே தீர்க்க முடியவில்லை என்றால் குருவால் மட்டும் எப்படி தீர்க்க முடியும்? அது எப்படி சாத்தியம் என்று நினைக்கிறீர்கள்?

உங்களுக்கு உங்களைப்பற்றி புரிதல் இல்லை . உங்களைப் பற்றி தெளிவு இல்லாதபோது பயம் வருகிறது.

உங்கள் பிரச்சனையை உங்களால் மட்டுமே முடிவிற்கு கொண்டுவர முடியும். உலகில் எவராலும் உங்கள் பிரச்சனையை தீர்க்க முடியாது.

உள்ளுக்குள் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்? ஒரு தவறை மறைப்பதற்கு பொய் சொல்லக் கூடியவராக இருக்கிறீர்களா? உங்களைப் பற்றி உண்மைகள் வெளியே தெரியக்கூடாது என்பதில் பதற்றம் படுகிறீர்களா? அல்லது பேராசை பிடித்தவராக இருக்கிறீர்களா? அடுத்தவர் வளர்ச்சியை கண்டு பொறாமை கொண்டவராக இருக்கிறீர்களா? உள்ளுக்குள் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை முழுமையாக நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டும்.

உங்களுக்கு உங்களைப்பற்றி  என்ன தெரியும்?

நீங்கள் ஒன்றை தேடிச் செல்கிறீர்கள், முக்கியமான ஒன்றை அடைந்தே தீரவேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக இருக்கிறீர்கள். ஒன்றை தேடுவதற்கு முன்பு “தேடுகின்றவர்” எப்படி பட்டவர்?அவர் என்னவாக இருக்கிறார் என்பதை அறிந்து கொள்வது முக்கியமானது.

ஒரு அழகான ராஜகுமாரியை ஏழை ஒருவன் காதலித்து வந்தான். அவளையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பினான். இதை அறிந்து கொண்ட ராஜ்குமாரின் தந்தை அரசர் கோபப்பட்டார். நேர்மை தவறாத அரசன் என்று பெயரெடுத்தவனுக்கு இந்த சம்பவம் சங்கடத்தை ஏற்படுத்தியது. தன் மகளை சாதாரண குதிரை ஓட்டிக்கு திருமணம் செய்து வைக்க விருப்பமில்லை. அரசவையை கூட்டிய அரசன் இரு துண்டு சீட்டுகளை ஒரு பெட்டியில் போடுவதாகவும், ஒரு சீட்டில் வேண்டாம் என்றும் மற்றொரு சீட்டில் திருமணம் முடிக்கலாம் என்றும் எழுதப்பட்டிருக்கும் என்று கூறினார்.

அந்த இரு சீட்டில் எதை ஏழை இளைஞன் எடுக்கிறானோ அதன்படியே முடிவு செய்துக் கொள்ளலாம் என்று அரசவையில் அரசன் தெரிவித்தார். மக்கள் சபையின் முன் இரு சீட்டுகளையும் ஒரு பெட்டியில் போட்டார். ஆனால் அந்த இரண்டு சீட்டுகளிலும் வேண்டாம் என்றே எழுதப்பட்டிருந்தது. இது யாருக்கும் தெரியாது. அரசர் ஏழையை கூப்பிட்டார். அந்த ஏழை தன்னைப்பற்றி முழுமையாக அறிந்தவன். நிதானமாக யோசித்தான். ஒரு சீட்டை மட்டும் எடுத்தான், ராஜகுமாரியை மணந்து கொண்டான்.

எப்படி?

இவ்வளவு பெரிய அரண்மனைக்கு மருமகனாக போகிறோம். தனது மாமனாராகிய அரசருக்கு ஒரு சங்கடமும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தான். இரண்டு சீட்டுகளையும் எடுத்து மக்கள் சபையில் காண்பித்தால் மாமனாருக்கு மரியாதை குறைந்து போகும். அதனால் அந்த ஏழை இளைஞன் தெளிவாக யோசித்தான். பெட்டியில் ஒரு சீட்டை மட்டும் எடுத்து படித்தான். உடனே அதை சுக்கு நூறாக கிழித்து விட்டான்.

அரசரே! நான் எடுத்த சீட்டில் மணம் புரிய சம்மதம் என்று எழுதப்பட்டிருந்தது. அதை அடுத்த சீட்டை எடுத்து பார்த்து நீங்களே உறுதி செய்துக் கொள்ளுங்கள், மக்களிடமும் காட்டுங்கள் என்றான்.

உங்களுக்கு உங்களைப்பற்றி என்ன தெரியும்? - என்.கே.மூர்த்தி

அடுத்த சீட்டில் வேண்டாம் என்று இருந்தது. இப்போது அரசனுக்கு வேறு வழியில்லாமல் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார். அறிவாளி மருமகனை பாராட்டவும் செய்தார்.

நீங்கள் எந்த மதத்தை சார்ந்தவராகவும் இருக்கலாம், எந்த வழிபாட்டு முறையை பின்பற்றக் கூடியவராகவும் இருக்கலாம். அவை அனைத்தையும் கடந்து உங்களைப்பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியம். நீங்கள் ஒன்றைப்பற்றி மட்டும் திரும்பத் திரும்ப ஏன் சிந்திக்கிறீர்கள், உங்கள் கலை ஆர்வத்தைப்பற்றி, உங்கள் நம்பிக்கையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் சிந்தனையை, சிந்தனையின் போக்கை, அதன் செயல்பாட்டை தெரிந்துக் கொள்வது அவசியம். உங்கள் சிந்தனையின் முழுமையான சாரத்தை தெரிந்துக் கொள்ளாமல் நீங்கள் எதைத் தேடினாலும் அது குழப்பத்தில் தான் முடியும்.

ஒருவர் தன்னைத் தானே பின் தொடர்ந்து பார்ப்பது, தன் சிந்தனையின் போக்கை கவனிப்பது என்பது மிகவும் கடினமானது தான். ஆனால் அது மிகவும் அவசியமானது. நாம் தந்தையாக, பிள்ளைகளின் எதிர்காலத்தின் மீது அக்கறை உள்ளவராக என்று பல பொறுப்புகளை சுமந்து கொண்டு கஷ்டப்படக் கூடியவர்களாக இருக்கிறோம். அதில் தன்னைத்தானே கவனிப்பதிலும், தன்னைப்பற்றி அறிந்துக் கொள்வதிலும் சிரமம் இருக்கின்றது. அதையும் கடந்து உங்களைப்பற்றி நீங்கள் எவ்வளவு தெரிந்துக் கொள்கிறீகளோ அந்த அளவிற்கு தெளிவு கிடைக்கும். அதற்கு முடிவே இல்லை. தன்னைப்பற்றி அறிய அறிய மனம் அமைதி பெறும். அந்த அமைதியில் அன்பு பெருகும். அன்பு மட்டுமே எல்லோரையும் முறையாக வழிநடத்தும்.

உங்களை நீங்கள் அறிந்துக் கொள்ளுங்கள் , வெற்றி பெறுங்கள்!

MUST READ