Homeசெய்திகள்கட்டுரைதேர்தல் ஆணையம் என்ன செய்யப்போகிறது? திக்... திக்... அரசியல் கட்சிகள்

தேர்தல் ஆணையம் என்ன செய்யப்போகிறது? திக்… திக்… அரசியல் கட்சிகள்

-

என்.கே.மூர்த்தி

வாக்கு எண்ணிக்கை தேதி நெருங்க நெருங்க தேர்தல் ஆணையம் என்ன செய்யப்போகிறது என்பதை நினைத்து அரசியல் கட்சிகள் திக்…திக்..கென்று திகிலடைந்து போயுள்ளனர்.

தேர்தல் ஆணையம் என்ன செய்யப்போகிறது? திக்... திக்... அரசியல் கட்சிகள்

 

மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஐந்து கட்டங்களில் 428 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்து விட்டது. இன்னும் இரண்டு கட்டங்கள் தேர்தல் முடிந்து ஜூன் 4 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் அரசியல் அறிஞர்கள், தேர்தல் திறனாய்வாளர்கள், பத்திரிகையாளர்கள் என்று பெரும்பாலோனோர்கள் நடந்து முடிந்த 5 கட்ட தேர்தல்களில் இந்திய கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று கணித்துள்ளனர். ஆனால் மோடியும், அமித்ஷாவும் 400 தொகுதிகள் இலக்கு 370 தொகுதிகளில் உறுதியாக வெற்றி பெறுவோம் என்று கூறிவருகின்றனர். இதுவரை நடந்து முடிந்துள்ள 428 தொகுதிகளில் 310 பாஜக வெற்றிபெறும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். எந்த நம்பிக்கையில் பாஜக வெற்றி பெறும் என்று அவர் கூறுகிறார் என்று தெரியவில்லை.

கடந்த 10 ஆண்டுகளில் நாட்டு மக்களுக்கு மோடி அரசு சொல்லிக் கொள்ளும்படியாக எதுவும் செய்யவில்லை. அவர்கள் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அவர்கள் செய்த சாதனைகளை சொல்லி எங்கேயும் வாக்கு சேகரிக்கவில்லை. மாறாக இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசித்தான் ஓட்டு கேட்டு வருகிறார்கள். மேலும் தென்னிந்தியர்கள், வட இந்தியர்கள் என்று நாட்டை பிளவு படுத்தி மோதலை உருவாக்கும் அரசியலை மோடி, அமித்ஷா பேசி வருகின்றனர்.

தேர்தல் ஆணையம் என்ன செய்யப்போகிறது? திக்... திக்... அரசியல் கட்சிகள்

கடந்த 10 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு இன்மை அதிகரித்துள்ளது. விலைவாசி பல மடங்கு உயர்ந்துள்ளது. அதேபோன்று தினம், வாரம், மாதம் வருவாய் உயரவில்லை. வருவாய்க்கும் விலைவாசி உயர்வுக்கும் வித்தியாசம் கூடுதலாக உள்ளது. பாஜக அரசு மீது மக்களுக்கு அதிர்ப்த்தி ஏற்பட்டுள்ளதை களத்தில் பார்க்க முடிகிறது. மோடி என்கிற தனிமனித பிம்பம் உடைந்து விட்டது. இந்த நிலையில் மூன்றாவது முறையாக பாஜக வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இல்லை என்று பல அரசியல் பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.

இந்திய கூட்டணி என்பது நாடு முழுவதும் செல்வாக்குள்ள மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தமிழ்நாட்டில் திமுக, பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி, மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி வலுவாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்திய கூட்டணிக்கு தலைமை தாங்கி வரும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆட்சிக்கு வந்ததும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தப்படும் என்று ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி பேசி வருவதை மக்கள் நம்பிக்கையுடன் வரவேற்கிறார்கள்.

இந்திய கூட்டணியில் உள்ள மாநில தலைவர்கள் மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றவர்கள். இப்படி  அனைத்து சாதகமான சூழல்களும் எதிர்க்கட்சிகளுக்கு இருக்கிறது. இதையும் கடந்து பாஜக மீண்டும் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை எப்படி வருகிறது? அதற்கு காரணம் என்ன? இது மிகவும் முக்கியமான கேள்வி.

தேர்தல் ஆணையம் என்ன செய்யப்போகிறது? திக்... திக்... அரசியல் கட்சிகள்

எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று அரசியல் கட்சியினர், நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தபோது, எவரும் எதிர்பாராத வகையில் கடந்த மார்ச் மாதம் 9 ம் தேதி தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென்று ராஜினாமா செய்தார். இரண்டு ஆணையர்களில் ஒருவர் ராஜினாமா செய்ததால் எல்லோருடைய கவனமும் தேர்தல் ஆணையம் பக்கம் திரும்பியது.

அருண் கோயல் ஏன் ராஜினாமா செய்தார்? என்ன காரணம் என்று எவருக்கும் தெரியவில்லை. அதனை தொடர்ந்து மார்ச் 14ம் தேதி ஞானேஷ்குமார், சுக்வீர் சிங் சந்து ஆகிய இரண்டு புதிய தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டார்கள் . புதிய தேர்தல் ஆணையர்களை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரும் இணைந்து நியமனம் செய்துள்ளனர்.

தேர்தல் ஆணையம் என்ன செய்யப்போகிறது? திக்... திக்... அரசியல் கட்சிகள்

கடந்த 2023 ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் தேர்தல் ஆணையரை நியமனம் செய்ய வேண்டும் என்றால் பிரதமர், எதிர்கட்சி தலைவர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆகியோரின் பரிந்துரையின் அடிப்படையில் தான் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று உத்தரவு வழங்கினார்கள். அந்த தீர்ப்பை கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு பாஜக அரசு சுப்ரீம் கோர்ட் நீதிபதியை நீக்கிவிட்டு அந்த இடத்தில் உள்துறை அமைச்சரை சேர்த்துக் கொண்டது. அந்த அடிப்படையில் மோடி, அமித்ஷா இருவரும் புதிய தேர்தல் ஆணையரை நியமனம் செய்தனர்.

அதன் பின்னர் தலைமை தேர்தல் ஆணையர் ரவிகுமார், ஞானேஷ்குமார், சுக்வீர் சிங் சந்து ஆகிய மூன்று தேர்தல் ஆணையர்களும் இணைந்து மார்ச் 16ம் தேதி தேர்தல் தேதியை அறிவித்தனர். ஏப்ரல் 19  முதல் கட்ட தேர்தல் என்று தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும் ஜூன் 4 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவித்தனர்.

தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து பிரதமர் மோடி, அமித்ஷா இருவரும் இந்து முஸ்லீம் என்று மதரீதியான பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். அதை எதிர்கட்சியினர் கடுமையாக எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.   ஒரு நடவடிக்கையும் இல்லை.

தேர்தல் ஆணையம் என்ன செய்யப்போகிறது? திக்... திக்... அரசியல் கட்சிகள்

 

அதனை தொடர்ந்து தேர்தல் முடிந்து ஒரு வாரம் கழித்து  பதிவான வாக்கு சதவீதங்களை தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. அதுவும் 5 , 6 சதவீதம் வாக்குகள் அதிகமாக வெளியிட்டு வருவதை எதிர்கட்சிகள் கண்டித்தனர்.  வாக்கு சதவீதத்தை உடனுக்குடன் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அப்பொழுதும் தேர்தல் ஆணையத்தின் மீது உள்ள சந்தேகத்தை போக்குவதற்கு ஆணையர்கள் எவ்வித முயற்சியும் மேற்கொண்டதாக தெரியவில்லை. இதனிடையே தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்னும் இரண்டு கட்ட தேர்தல் மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதன் பின்னர் ஜூன் 4 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. தேர்தல் ஆணையம் என்ன செய்ய போகிறது? என்று தெரியாமல் அரசியல் கட்சிகள் திக்…திக்… என்ற மனநிலையில் உள்ளனர்.

MUST READ