அதிமுகவை பலவீனப்படுத்தி வந்த பாஜக, முதன் முறையாக அந்த கட்சியை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
அதிமுக உள்கட்சி விவகாரம் மற்றும் பிரிந்து சென்றவர்களை கட்சியில் மீண்டும் இணைக்கும் விவகாரம் குறித்து பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சார்பில் நடைபெற்ற ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைய ரகசியங்கள் இருக்கு அதை எல்லாம் வெளியில் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார். அந்த ரகசியம் என்று சொன்னது எந்த விஷயம் என்றால், அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி நீக்கப்படும். சாதாரண தொண்டர் ஒருவர் தலைமை பொறுப்புக்கு வருவார் அப்படினு சொல்லிவிட்டுதான் அதற்கான ரகசியங்கள் என்று சொல்லி இருக்கிறார். யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் இரட்டை இலை தொடர்பான வழக்கு வேகம் எடுத்து, இவ்வளவு விவாத பொருளாக மாறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதில் தேர்தல் ஆணையம் நடந்துகொண்ட விதம்தான் கவனிக்கத்தக்கது.
அதிமுகவில் நிலவும் பிரச்சினையை தீர்க்க எங்களுக்கு அதிகாரம் உள்ளது என்பதை நிலைநாட்ட அவ்வளவு முயற்சி மேற்கொண்டார்கள். முடிவில் எடப்பாடியின் வாதம் நிராகரிக்கப்பட்டு இன்று விவகாரம் தேர்தல் ஆணையத்திற்கு சென்றுள்ளது. அதிமுக நிர்வாக ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் எடப்பாடி பழனிசாமியிடம் உள்ளது. அதிமுகவில் பிளவு உள்ளதா? இல்லையா? என்று பாருங்கள் முதலில், அதில் திருப்தி அடைந்தால் விசாரியுங்கள் என்று உயர்நீதிமன்ற தீர்ப்பிலேயே சொல்லப்படுகிறது என்றால், எடப்பாடி உண்மையாக வேதனை அடைந்திருப்பார். அதை நான் புரிந்துகொள்கிறேன்.
ஆனால் இந்த வேதனை தானே அன்றைக்கு சசிகலாவுக்கு இருந்திருக்கும். ஒரு காலத்தில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் போன்றவர்களுக்கு இருந்திருக்கும். துரோகம் செய்கிறவர்கள், தவறு செய்கிறவர்கள், தவறுக்கு துணை போனவர்கள் என எவர் ஒருவரும் அந்த வலியை, வேதனையை அனுபவித்தே தீருவார்கள். இது நியாயமா? சரியா? தவறா? என்பதற்குள் போக வேண்டாம். இன்றைக்கு எடப்பாடி அணியினர் அனுபவிக்கும் அந்த வேதனை இருக்கிறதே, அதனை தானே மற்றவர்களுக்கு வெவ்வேறு காலகட்டத்தில் இருந்திருக்கும். 5 வருடங்களுக்கு முன்பு தினகரனுக்கு நடைபெற்றபோது நான் எச்சரித்தேன். அரசியல் விவகாரங்களுக்காக மத்தியில் ஆளும் கட்சியின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் மாறி சிலரை நசுக்க நினைப்பதை ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் அனுமதித்தால், ரசித்தால் இன்றைக்கு உங்களுக்கு நன்றாக இருக்கும், இதற்காக நாளை எல்லோரும் அனுபவிப்பீர்கள் என்று சொன்னேன். முதல் ஆளாக இன்று எடப்பாடி அனுபவிக்க தொடங்கியுள்ளார்.
அதிமுகவில் பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலாளர் ஆகிவிட்டார். அதனை நீதிமன்றம் ஒப்புக்கொண்டுவிட்டது என்று நீதிமன்றம் சொல்லி இந்த வழக்கை முடித்திருக்கலாமே. பிளவு இருக்கிறதா என்று பாருங்கள் என்று சொல்கிறார்கள். இதன் மூலம் ஒரு உயிர் அற்ற, அர்த்தம் அற்ற, இவ்வளவு பெரிதாக ஆகுமா என சந்தேகப்பட்ட ஒரு விவகாரம் இன்று உயிரோட்டமாக தேர்தல் ஆணையத்தின் கைகளில் உள்ளது. ஜெயலலிதா, எம்ஜிஆர் படங்கள் இல்லாத மேடையில் ஏற மாட்டேன் என்று செங்கோட்டையன் எடுத்த நிலைப்பாடு சரியானது. அவரை விமர்சிக்கலாமா என்று எல்லாரும் குழப்பத்தில் உள்ளனர். செங்கோட்டையன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியது என்பது இயல்பை மீறிய செயலாகும். அப்போது இந்த விவகாரத்திற்கு பின்னால் ஏதோ என்று நடப்பதாக சந்தேகம் ஏற்படுகிறதா? எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் வீட்டில் நடைபெற்ற மிகப்பெரிய சோதனை.இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் சோதனையில் ரூ.700 கோடி வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளது. இவ்வளவு பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணை தொடர்கிறது என்று தெரிவித்துள்ளனர். இந்த புள்ளிகளை இணைத்துப்பார்த்தால் ஏதோ சம்பந்தப்பட்ட ஒன்றுதான் இன்று ஒபிஎஸ் கையில் இருக்கும் ரகசியம் என்று நான் பார்க்கிறேன்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுகவை பல நேரங்களில் பலவீனப்படுத்தி தங்களுக்கு சாதகமாக ஆக்க முடியுமா? தொண்டர்களை தங்கள் பக்கம் இழுக்க முடியுமா? என்று பாஜகவினர் எவ்வளவோ முயற்சித்து பார்த்தனர். வெளியில் ஆட்சியை தொடர செய்வது போல செய்துகொண்டு அதிமுகவை பிளவுபடுத்தினார்கள். தர்மயுத்தத்தை தொடங்கி வைத்தார்கள். மோடியே போன்செய்து நிறுத்திக்கொண்டு ஆட்சியில் சேருங்கள் என்றார். சேர்ந்த பின்னர் சசிகலா – தினகரன் அப்படியே இருக்கட்டும் என்றார்கள். தேர்தல் நெருங்கும்போது அவர்களை சேர்த்துக்கொள்ளுங்கள் என்றனர். இப்படி ஒவ்வொரு வேலையையும் பாஜக செய்தது. அதிமுகவை பலவீனப்படுத்தி ஆதாயம் அடைய முயற்சித்தார்கள் முடியவில்லை. அவர்களாகவே வளரலாம் என்று பார்த்தார்கள். தமிழ்நாட்டில் அவர்கள் செய்யும் துரோகங்களுக்கு இந்த ஜென்மத்தில் வளர முடியாது என்று தெரிவிந்துவிட்டது.
2021 தேர்தலில் பாஜக சொல்வதை எல்லாம் கேட்ட அதிமுகவின் ஆட்சியை இழந்தோம். நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலையின் துடுக்குத்தனம், எடப்பாடியின் பிடிவாதம் காரணமாக கூட்டணி அமையவில்லை. இன்னொரு முறை இதுபோன்ற தவறை செய்யக்கூடாது. அதனால் அதிமுகவை பலவீனப்படுத்தி பழக்கப்பட்ட பாஜக முதன் முறையாக அதிமுகவை ஒற்றுமைப்படுத்த சில காரியங்களை செய்கிறார்கள் என்று எனக்கு கிடைத்த சில தகவல்கள் சொல்கின்றன. அது தேர்தல் ஆணையத்தை வைத்தோ, சோதனைகளை தொடர்ச்சியை வைத்தோ, செங்கோட்டையன் போன்றவர்களை வைத்தோ எடப்பாடிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கலாம். சொல்வதை கேட்டு எல்லாரும் ஒன்றாக சேர்ந்து கட்சி நடத்துகிறீர்களா? இல்லை என்று மூன்று புள்ளிகளை வைத்தாலே அர்த்தம் என்று எடப்பாடிக்கும் புரியும், எல்லோருக்கும் புரியும். இது திரைமறைவில் நடக்கிறதோ என்று எனக்கு சந்தேகம் உள்ளது. ஓபிஎஸ் வார்த்தைகள் அதை மறைமுகமாக வெளிப்படுத்தி உள்ளன.
திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் பலமான அதிமுக அவசியம் என்கிற புள்ளிக்கு பாஜக வந்திருக்கிறது. அடுத்த சுயநலம் சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்தால் 10 இடங்களில் வெற்றிபெறலாம் என்று ஆசை இருக்கலாம். இல்லாவிட்டால் 2029 நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை அதிமுகவிடம் பெறலாம் என நினைக்கலாம். இந்த பிரச்சினையை நீண்ட நாட்களுக்கு மூடி மறைக்க முடியாது. வெளியில் வரட்டும் விவாதிப்போம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.