முகுந்தனுக்கு கட்சியில் பொறுப்பு வழங்கும் விவகாரத்தில் அன்புமணி ராமதாசின் நிலைப்பாடு சரியானது என முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இளம் தலைவரான அன்புமணியின் வார்த்தைகளுக்கு, ராமதாஸ் மதிப்பளித்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ராமதாஸ் – அன்புமணி மோதல் தொடர்பாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் பிரபல யூடியூப் சேனலக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- பாமக நிறுவனர் ராமதாஸ்க்கும், அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு என்பது இருக்கலாம். அது உட்கட்சி ஜனநாயகம். ஆனால் வெளியில் இதுபோன்ற வாதங்களோ விவாதங்களோ வந்திருக்க தேவையில்லை என நினைக்கிறேன். 2009ஆம் ஆண்டு சுகாதாரத் துறையில் கூடுதல் செயலாளராக நான் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அப்போது அன்புமணிதான் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். அப்போதே எந்த கூட்டணியில் இருப்பது என்பது தொடர்பாக ராமதாஸ், அன்புமணி இடையே கருத்துவேறுபாடு இருந்ததாக தகவல் வெளியானது. அன்புமணி சொன்ன கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப் படவில்லை. ஆனால் அன்புமணி சொன்னதுதான் சரியானது என தேர்தலுக்கு பின்பு பார்த்தோம். அதனால் கருத்து வேறுபாடு இருப்பதில் தவறு ஏதும் இல்லை.
இப்போது ராமதாஸ், பாமக இளைஞர் அணி தலைவராக முகுந்தனை மேடையில் அறிவித்துள்ளார் என்றால் அதற்கு முன்பு அன்புமணியிடம் சொன்னாரா? என்று தெரிய வில்லை. அல்லது சொல்லியும் அன்புமணி உடன்படவில்லை என்பதற்காக மேடையில் உறுதி செய்வதற்காக சொன்னாரா? என்றும் தெரியவில்லை. இது குறித்து அவர்கள் இருவரும் பேசினால்தான் தெரியும். ஆனால் ராமதாஸ் இப்படி மேடையில் பேசி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் கட்சியை நான் தான் நிறுவினேன். அதனால் நான் சொல்வதுதான் சட்டம் என சொல்வதும் சரியானது இல்லை. மாறுகின்ற சூழலுக்கு ஏற்ப முடிவுகளை அமைத்துக்கொள்ள வேண்டும். அந்த முடிவுகள் இளையவர்களுடைய கருத்துக்களுக்கு முக்கியத்தும் அளிக்க வேண்டும் என்பது சீனியர்களுக்கு மிகவும் அவசியமானது. ஆனால் அதனை ராமதாஸ் எந்த அளவிற்கு செய்தார் என்பது தெரியவில்லை. கூட்டத்தில் வைத்து ராமதாஸ் பேசியது சரியானது அல்ல. அது அவர் தவிர்த்திருக்க வேண்டும். இப்போது அன்புமணி கோஷ்டி, ராமதாஸ் கோஷ்டி என உருவாவதை தவிர்க்க முடியாது. அன்புமணி ராமதாசின் வாதம் என்பது சரியானது தான். கட்சிக்குள் முகுந்தன் வந்து 4 மாதங்கள் தான் ஆகிறது. இது தொண்டர்கள் மத்தியில் நன்றாகவே எடுபடும்.
கூட்டணி தொடர்பான கருத்து மோதலால் தான் ராமதாஸ், அன்புமணி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டிருக்க வாய்ப்பு என்பது குறைவு தான். பாமக, பாஜக கூட்டணி இல்லாவிட்டால், அதிமுக கூட்டணிக்குதான் வருவார்கள். அவர்கள் திமுக கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை. ராமதாஸ் கூட்டணி குறித்து மறு பரிசீலனை செய்வேன் என்று கூறுகிறார். ஆனால் கொள்கை கூட்டணி என்றால் திமுகவும், விசிகவும் தான். பாமக என்றும் கொள்கையை பற்றி கவலைப்பட்டது இல்லை. தேர்தல் கூட்டணி வேறு, கொள்கை கூட்டணி வேறு என்பது அவர்களது நிலைப்பாடு. அவ்வாறு பாமக செல்வதென்றால் அதிமுக கூட்டணிக்குத்தான் செல்வார்கள். ஆனால் அதை திமுக தடுக்க முயற்சிக்கும். அதிமுக – பாமக கூட்டணி அமைந்தால் வட மாவட்டங்களில் கணிசமாக வெற்றி வாய்ப்பு உள்ளது.
வன்னியர்களுக்கு 15 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கினால் திமுகவுக்கு நிபந்தனை அற்ற ஆதரவு தருவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டிருக்கிறதா? என்றால் தெரியவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் பேசி வைத்துக்கொண்டு கூட இதுபோல செய்திருக்கலாம். அதற்கு சாத்தியம் உள்ளது. எம்.ஜி.ஆர் தான் சொல்ல விரும்பதெல்லாம் காளிமுத்து மூலம் சொல்ல வைத்துவிடுவார். வன்னியர் உள் இடஒதுக்கீடு என்பது சாத்தியம் இல்லாதது. உள்இடஒதுக்கீடு என்பது எம்.பி.சியில் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்குத் தான் வழங்க வேண்டும். ஏற்கனவே இடஒதுக்கீட்டில் அதிக பலன்களை அனுபவிப்பவர்களுக்கு, உள்இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கேட்பது சரியானது இல்லை. அதேபோல், வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்கினால் தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு ஏற்பட்டது போல திமுகவுக்கும் வாக்கு வங்கி பாதிக்கப்படும். அதனால் திமுக இந்த இடஒதுக்கீடு வழங்கும் என்பது சாத்தியம் அற்றது.
ராமதாஸ், அன்புமணி இடையே கருத்து வேறுபாடு இருந்தது உண்மை தான். ஆனால் அவர்கள் சண்டைக்காரர்கள் இல்லை. தந்தை, மகன். இருவரும் ஒரு கட்சியை வளர்க்க வேண்டும் என விரும்புபவர்கள். ஆனால் அன்புமணி எடுத்த நிலைப்பாடு எனபது சரியானது தான். கட்சியில் சேர்ந்து 4 மாதங்களே ஆன ஒருவருக்கு கட்சியில் பொறுப்பு வழங்குவது என்பது ஏற்புடையது இல்லை. இது கட்சியில் காலங்காலமாக இருப்பவர்களுக்கு வேதனை அளிக்கும். திமுகவிலும், மற்ற கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு முக்கியத்தும் அளிப்பது கட்சியில் பல ஆண்டுகளாக இருப்பவர்களுக்கு வேதனை அளிக்கிறது. ஆனால் அங்கு பெரிய அளவில் பிரச்சினை ஏற்படாமல் இருக்க காரணம் திமுக கொள்கை பிடிப்பு உள்ள கட்சி. அதிமுக என்பது தொடக்கம் முதலே ரசிகர் மன்றம் போன்றது. அது தனிமனித எதிர்ப்பின் காரணமாக உருவாக்கப்பட்ட கட்சி. அதனால் அவர்களுக்கு எந்த கொள்கையும் கிடையாது.
பிரதமர் மோடிக்கு என்ன நம்பிக்கை, அதிமுகவில் முதலில் தலைவர் தலைவர் என்று சொன்னார்கள், பின்னர் அம்மா அம்மா என்று சொன்னார்கள் அடுத்து அய்யா அய்யா என்று கூறுவார்கள் என எதிர்பார்க்கிறார். ஆனால் திமுகவினரை அவ்வளவு எளிதில் இழுத்து விட முடியாது. அதேபோல் தான் பாமகவில் இருந்து வன்னியர்களையும் அவ்வளவு எளிதாக இழுத்துவிட முடியாது. பாமக உடையாமல் இருப்பது என்பது மகிழ்ச்சியானது. கட்சிகள் சிதறுண்டு போவது மாநிலங்களுக்கு நல்லது அல்ல. வலுவான கட்சிகள் இருக்கும் வரைதான் உயிர்ப்பான ஜனநாயகம் இருக்கும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.