தமிழ்நாட்டிற்கு சமக்ர சிக்ஷா திட்டத்திற்கான நிதியை தர மாட்டேன் என்று சொல்ல மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு யார் உரிமை கொடுத்தது என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய கல்வி கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டிற்கான எஸ்எஸ்ஏ திட்ட நிதியை வழங்கவில்லை என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளதற்கு பதில் அளிக்கும் விதமாக கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு பிரபல தொலைக்காட்சிக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அவர் புரிந்துகொள்ளாமல் ஆணவத்தோடு, அகங்காரத்தோடு பேசியுள்ளார் என்பது அவர் பயன்படுத்திய ஒவ்வொரு சொற்களில் இருந்தும் தெரிகிறது. 3 மொழிகளை அனைத்துக் குழந்தைகளும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அரசமைப்பு சட்டத்தில் எங்கே சொல்லியுள்ளனர். 3 மொழிகளை கற்க வேண்டும் என்ற கோட்பாட்டை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சொன்னால், அது அரசமைப்பு சட்டத்திற்கு எந்த வகையில் எதிரானது. உண்மையிலேயே தேசிய கல்வி கொள்கை 2020தான் அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும். அவர் கூறும் பி.எம். ஸ்ரீ திட்டம் என்ற கோட்பாடு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கூறு 14, 21, 41 ஆகியவற்றுக்கு எதிரானது. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஒரு மாநில அரசு செயல்பட வேண்டும் என மத்திய அரசு சொன்னால், அதை மாநில அரசு ஏற்றால்தான் நிதி கொடுப்பேன் என்று சொல்வது எந்த வகையில் நியாயமானது.
தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி என்ற கோட்பாடு உள்ளது. எல்லோருக்கும் சமமான கற்றல் வாய்ப்பை கொடுப்போம் என்பதுதான் சமச்சீர் கல்வியின் உறுதிமொழி. இந்த உறுதிமொழியின் கீழ் இயங்கக்கூடிய தமிழ்நாடு அரசு, சில பள்ளிகளை மட்டும் தேர்ந்தெடுத்து அதற்கு பி.எம். ஸ்ரீ முத்திரை குத்தி, பி.எம். ஸ்ரீ வலைதளத்தில் போய் பாருங்கள். அந்த பள்ளிகள் ஆகச்சிறந்த பள்ளிகளாக இருக்கும். அங்கு படிக்கும் குழந்தைகள் எல்லா போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பு இருக்கும். அப்படி என்றால் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நிலை என்ன என்பதுதான் கேள்வியாகும். ஒரு பள்ளியில் எந்த வசதியும் இருக்காது. இதுபோன்ற 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பள்ளிகளை எல்லாம் சேர்த்து பள்ளி வளாகம் என்று பெயர் வைத்துவிடுவீர்கள். மற்றொரு பக்கம் ஆகச்சிறந்த பள்ளிகளுக்கு சிறிய அளவிலானவர்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை செலவு அழித்தீர்கள் என்றால் அரசமைப்பு சட்டத்தின் சமத்துவ கோட்பாட்டிற்கு எதிரானது அல்லவா? அரசமைப்பு சட்டத்தின் சமத்துவ கோட்பாட்டிற்கு எதிராக ஒரு கொள்கையை அறிவித்துவிட்டு அதற்கு தேசிய கல்விக்கொள்கை என்று 2020 என்று பெயர் வைத்துவிட்டு அதை ஏற்க மாட்டேன் என்றால் நிதி வழங்க மாட்டேன் என்பது ஆணவம் என்பதை விட என்ன சொல்வது?
தேசிய கல்வி கொள்கை 2020ல் கல்வியை பற்றி எங்கேயும் பேசவில்லை. அவர்கள் சொல்வது எல்லாம் எழுத்தறிவு, எண்ணறிவு, வேலைத்திறன். 3 வயது குழந்தைக்கு ஏதாவது வேலையை அறிமுகம் செய்திருக்க வேண்டுமாம். 8ஆம் வகுப்பு முடிப்பதற்குள் ஒரு குழந்தை ஏதாவது வேலையில் திறன் பெற்றிருக்க வேண்டுமாம். குழந்தையை வேலைத்திறன் பெறுவதற்கு பள்ளிக்கு அனுப்புவேனா? அல்லது படிப்பதற்கு பள்ளிக்கு அனுப்புவேனா? ஒட்டு மொத்தமாகவே தேசிய கல்வி கொள்கை என்பது ஒரு மிகப்பெரிய சூழ்ச்சி. சமஸ்கிருதமயமாக்கப்பட்ட ஒற்றை பண்பாட்டு தேசமாக, இந்திய தேசத்தை மாற்றக்கூடிய சூழ்ச்சிக்கான செயல் திட்டம்தான் புதிய கல்விக்கொள்கை. அதனை எவ்வாறு ஏற்க இயலும். கல்வி என்பதே ஒரு அரசியலாகும். கல்வியை கொடுப்பதும் ஒரு அரசியல். கல்வியை மறுப்பதும் ஒரு அரசியல் ஆகும். மத்திய பாஜக அரசு கல்வி மறுப்பு அரசியலை செய்கிறது. மத்திய பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் திக்விஜய் சிங் சமீபத்தில் சொல்கிறபோது, தேசிய உயர் கல்வி ஆணைய மசோதாவை இன்றைக்கு இருக்கிற வரைவின் அடிப்படையில் அப்படியே நிறைவேற்றினால், கிராமப் புறங்களில் உள்ள அனைத்து அரசுக் கல்லூரிகளையும் அழித்துவிடும் என்று சொல்லியுள்ளார். இந்த திட்டத்தை தமிழ்நாடு மட்டும் எதிர்க்கவில்லை. நாடு முழுவவதும் கல்வி சார்ந்து யோசிக்கக் கூடிய அனைத்து தரப்பினரும்தான் புதிய கல்வி கொள்கை எதிர்க்கின்றனர். நாம் சமமான கற்றல் வாய்ப்புக்கு எதிராக இருப்பதால் புதிய கல்வி கொள்கையை எதிர்க்கிறோம்.
எனவே தேசிய கல்விக் கொள்கையை காரணம் காட்டி சமக்ர சிக்ஷா திட்டத்திற்கான நிதியை தர முடியாது என்று சொல்ல முடியாது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் என்பது 21ஏ அரசமைப்பு சட்டம் எழுதிய பிறகு, 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணமில்லா கல்வியை அரசு கொடுக்கும் என்று சொன்ன பிறகு, ஊக்கத் தொகைக்கும், கல்வி கட்டணத்திற்கும் தொடர்பு கிடையாது. சிறுபான்மையினருக்கான கல்வி ஊக்கத் தொகையை நிறுத்தி விட்டனர். ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை கட்டணம் இல்லா கல்வி கொடுக்கிறோம், பிறகு எதற்கு ஊக்கத்தொகை என்று சொன்னார்கள். இப்போது ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான கல்விக்கான சமக்ர சிக்ஷா திட்டத்திற்கு நிதி கொடுக்க மாட்டேன் என்று சொன்னால், அரசமைப்பு சட்டத்தில் அடிப்படை உரிமையாக உள்ள ஒரு விஷயத்திற்கு நிதி கொடுக்க மாட்டேன் என்று சொல்வதற்கான அதிகரத்தை யார் உங்களுக்கு கொடுத்து. எஸ்எஸ்ஏ திட்டத்திற்கு நிதி அளிப்பதற்கான ஒப்புதலை நாடாளுமன்றத்தில் தானே பெற்றீர்கள். அப்போது, தேசிய கல்வி கொள்கையை ஏற்கும் மாநிலங்களுக்கு மட்டும்தான் நிதி கொடுப்போம் என்று சொல்லவில்லையே. எனவே பட்ஜெட்டில் சொல்லாத ஓரு விஷத்தை, அதற்கு ஒப்புதல் பெற்ற பிறகு அதில் சொல்லப்பட்டதற்கு மாறாக செயல்பட்டால் அது நாடாளுமன்ற உரிமை மீறல் ஆகாதா?
1 முதல் 8ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும் என்றால் அதற்கான பங்கை மத்திய அரசு தர வேண்டும். நாங்கள் கட்டிய வரியில் இருந்து தான் அந்த நிதியை கேட்கிறோம். நாங்கள் கட்டிய வரியை வாங்கி வைத்துக்கொண்டு கொடுக்க மாட்டேன் என்று சொன்னால், நாங்கள் ஏன் வரி கட்ட வேண்டும் என்ற கேள்வி எழும் அல்லவா? என் பிள்ளைகளின் கல்வி, சுகாதாரத்திற்காகத் தான் நான் வரி கட்டுகிறேன். என் வரி என் பிள்ளைக்கு பயன்படாவிட்டால் நான் ஏன் வரி கட்ட வேண்டும் என்ற கேள்வி எழுவது இயல்பு தானே. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்தியாவின் சூழலை, பண்முகத் தன்மையை, அரசியலை, அரசமைப்பு சட்டம் என எதையும் புரிந்து கொள்ளாமல் ஆர்எஸ்எஸ் என்ன விரும்புகிறதோ அதைதான் இந்தியா ஏற்க வேண்டும் என திணக்கத் துடிக்கிறார். அதன் வெளிப்பாடாகத்தான் அவரது கருத்துக்களை பார்க்கிறோம்.
புதிய கல்விக்கொள்கை என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்பதால் தமிழ்நாடு ஒரு போதும் ஏற்காது. நிதி வழங்கவில்லை என்ன பாதிப்பு என்றால் நெருக்கடிதான். அதை சமாளிக்க தமிழக மக்களுக்கு தெரியும். தமிழக அரசு தமிழக மக்களிடம் எவ்வளவு நிதி வேண்டும் என வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். மக்களிடம் அந்த நிதியை கோரி பெறுவது வேண்டும். கொரோனா காலத்தில் நிவாரண நிதி வசூலித்தது போல, கல்விக்கென மக்களிடம் நிதியை நன்கொடையாகவே பெறலாம். அதற்குண்டான வழிமுறைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு என்ன சொல்கிறது எல்லோரும் எல்லாம் படித்துவிட முடியாது என்று தான் இந்திய மக்களுக்கு சொல்கிறது. தமிழ்நாடு விழிப்புணர்வு பெற்ற மாநிலம் என்பதால், அரசமைப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு உள்ளதால் தமிழர்கள் தெளிவாக உள்ளனர். தமிழ் என்ற மொழி உணர்வோடு ஒற்றுமையாக உள்ளனர். இந்த ஒற்றுமையை சீர்குலைக்க என்ன எல்லாம் சொல்ல முடியுமோ அதை மத்திய கல்வித்துறை அமைச்சர் பிரதான் சொல்கிறார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.