கூட்டணி ஆட்சி குறித்த அதிமுக எம்.பி. தம்பிதுரையின் கருத்து தவறானது. அதனால் பாமக, பாஜக தொண்டர்கள் ஆத்திரமடைவார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
கூட்டணி ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளது மற்றும் இது குறித்து தம்பிதுரையின் கருத்தால் வெடித்துள்ள மோதல் குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூற இருப்பதாவது:- அதிமுக – பாஜக கூட்டணி இயல்பான கூட்டணி என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஏனெனில் திமுக கூட்டணி உடையாத வரை அதிமுகவுக்கு வேறு வாய்ப்புகள் கிடையாது. அதிமுக – பாஜக கூட்டணி குறித்து முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாட்டின் நலன்களை அடகு வைத்துவிட்டார்கள் என்று சொல்லியிருந்தார். அவ்வளவு ஏன் நீங்கள் பதற்றப்படுகிறீர்கள்?. அவர்கள் கூட்டணி வைக்காமல் தனியாக திரிவார்களா? அவர்களுக்கு யாருடன் விருப்பமோ அவர்களுடன் கூட்டணி வைக்கத்தான் செய்வார்கள். இது மக்கள் விரோத கூட்டணி என்று சொல்லுங்கள். அதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள். அரசியலில் ஒவ்வொரு நாளையும் நகர்த்திக்கொண்டு போவது சாதாரண விஷயம் அல்ல. ஒரு வாரத்திற்குள்ள 4 சர்ச்சைகள் வந்துவிட்டது. எல்லோரும் பதுங்குகிறார்கள். கூட்டணி இயல்பானது தான். ஆனால் கூட்டணி ஆட்சி என்பது மிகப்பெரிய விஷயமாகும்.
அதிமுக தொடங்கியது முதல் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சொல்லத் துணியாத ஆட்சியில் பங்கு என்பதை எடப்பாடி அதிகாரப்பூர்வமாக சொல்கிறார் என்றால், அதை தேர்தலுக்கு முன்னாடி சொல்லக்கூடாது என்று நான் சொன்னேன். அமித்ஷா இந்தியில் பேசினார். எடப்பாடி பழனிசாமிக்கு புரியவில்லை. அதன் பிறகு தமிழில் மொழி பெயர்த்தார்களே. அப்போது எடப்பாடி ஒரு தலைவர் கையை நீட்டி மைக்கை வாங்க வேண்டாம். கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி போன்றவர்கள் என்ன செய்தார்கள்?. அமித்ஷாவை வைத்துக்கொண்டு அவர்கள் மறுப்பு தெரிவிப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. பிரஸ்மீட் கொடுக்கிற போதே கூட்டணி ஆட்சி என்று பிரேக்கிங் செய்திகள் வருகிறது. பின்னர் வீட்டில் அமித்ஷாவுக்கு விருந்து கொடுத்தீர்கள். அவர்கள் புறப்பட்டு போன பிறகு எடப்பாடி பழனிசாமி அமித்ஷா, மோடிக்கு நனறி தெரிவித்து 2 ட்விட்டுகள் போட்டிருந்தார். 3வதாக ஒரு ட்விட், ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை என்று சொல்லி இருக்கலாம். அதற்கு பின்னர் 5 நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தபோது, அமித்ஷா அப்படி சொல்லவில்லை என்கிறார். கூட்டணிக்கு தலைமை வகிக்கும் நீங்கள், கூட்டணி அரசில் யாருக்கும் பங்கு தர மாட்டோம் என்று சொன்னாரா? ஆனால் அமித்ஷா அப்படி சொல்லவில்லை என்கிறார். எதற்கு அவர் முதுகில் நீங்கள் சவாரி செய்கிறீர்கள்.
அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி அறிவிப்பால், அதிமுகவில் துக்க வீடு போன்று இருந்தது என்று நான் சொன்னேன். அதை எல்லோரும் எடப்பாடி பழனிசாமியிடம் சென்று சொல்லியுள்ளனர். இதை பாஜகவினர்தான் ரசித்திருப்பார்கள். அதிமுகவினர் ஒரு துளி கூட ரசித்திருக்க மாட்டார்கள். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று யாரை கேட்டு அறிவித்தீர்கள். ஜெயலலிதாவே செய்யாத காரியத்தை இவர் செய்ய எப்படி துணிச்சல் வந்தது என்றுதான் அவன் பேசினான். எடப்பாடி தான் முதலமைச்சர் என்று அந்த முக்கால் மணி நேர பிரஸ்மீட்டில் எடுத்து காட்டுங்கள். அந்த பிரஸ்மீட்டில் அவ்வளவு பேசிய அமித்ஷா எடப்பாடி தான் எங்கள் முதலமைச்சர் வேட்பாளர் என்று சொன்னாரா? ஆனாலும் முதலமைச்சர் வேட்பாளர் அவர்தான் என்று நாமாக புரிந்துகொள்கிறோம். ஏன் வாயை திறந்து சொன்னால் என்ன? கூட்டணி ஆட்சி உண்டு என்று தமிழில் தெளிவாக சொல்லிவிட்டார்கள். அதற்கு 4 நாட்களாக எடப்பாடி பழனிசாமி அமைதியாக இருந்துவிட்டார். அவர் மறுத்தால்தான் பாஜகவினர் மீண்டும் கூட்டணி ஆட்சி என்று சொல்வார்கள். தற்போது எதற்கு நயினார், சுதாகர் ரெட்டி அறிக்கை விடுகிறார்கள்?. எடப்பாடி அதை மறுக்கிறார். அதனால் அவர்கள் அறிக்கை வெளியிடுகிறார். அந்த கருத்தை வலியுறுத்தி இன்னும் கொஞ்சம் ஸ்டாரங் ஆக தம்பிதுரையும் பேசினார். அதன் பிறகு யாரும் தொலைக்காட்சிகளில் பேசக்கூடாது என்று சொல்லிவிட்டார்.
ஏனென்றால் தம்பிதுரை, கூட்டணி ஆட்சியில் பங்கு என்பதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்களும் அமைத்தது கிடையாது. இனிமேலும் சரிவராது என்று சொன்னார். 2026ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் ஆட்சி அமையும் என்று சொல்லிவிட்டு நிறுத்தி இருக்கலாம். அடுத்து என்ன சொல்கிறார் என்றால்? 2006ல் கலைஞருக்கு மைனாரிட்டி இடங்கள் கிடைத்தபோதும் அவர் கூட்டணி ஆட்சி அமைக்கவில்லை. அதுபோல 2026ல் அதிமுகவுக்கு மெஜாரிட்டி இடங்கள் கிடைக்காவிட்டாலும் நாங்கள் ஆட்சி அமைப்போம். அப்போதும் ஆட்சியில் பங்கு தர மாட்டோம் என்று சொல்வது கொஞ்சம் துடுக்கான வேலை. சும்மா இருக்கும் பாஜகவையும், வரவிருக்கும் பாமகவையும் சொரண்டுகிற வேலையாகும். அப்போது நீங்கள் மைனாரிட்டி இடம் வைத்திருப்பீர்கள். உங்களுக்கு பத்தாத இடத்தை நாங்கள் கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்துவிட்டு விரல் சூப்பிக்கொண்டிருக்க வேண்டுமா? என்று கிராமத்தில் பாஜக, பாமக தொண்டர்கள் கேட்பார்கள். இது முட்டாள்த்தனமாகும். இது குறித்து பேசி இருக்கவே கூடாது.
இதை ஒரு கோணத்தில் துணிச்சல் என்று சொல்லலாம். அதை நிறைவேற்றி காட்டிவிட்டால் கலைஞர் போன்று ராஜதந்திரம் என்று சொல்லலாம். உங்கள் கூட்டணிக்கு பாமக இன்னும் வராமல் உள்ளது. தேமுதிக இன்னும் வருகிறேன் என்று சொல்லவில்லை. ஆட்சியில் பங்கு கொடுத்தால்தான் வருவேன் என்று புதிய தமிழகம் கிருஷ்ணசாமி சொல்லிக்கொண்டிருக்கிறார். யாரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள். ஒரு சதவீத வாக்குகள் வைத்திருந்தாலும் அது முக்கியமாகும். இந்த சூழலில் மைனாரிட்டி இடங்கள் கிடைத்தால் கூட நாங்கள் ஆட்சியில் பங்குதர மாட்டோம் என்று சொல்வது புத்திசாலித்தனம் அல்ல. துணிச்சலாக இருக்கலாம். விவேகம் அற்ற வீரம் கோழைத்தனமாகும். இதனுடைய அர்த்தம் புரிந்ததால்தான் இனிமேல் யாரும் பேச வேண்டாம் என்று சொன்னார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.