தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்கவும், ஆட்சியை பிடிக்கவும் தனது கொள்கைகளை கூட பாஜக விட்டுக்கொடுக்க தயங்காது என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நயினார் நாகேந்திரனின் செயல்பாடு எப்படி இருக்கும் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- நயினார் நாகேந்திரன் போட்டியிடும் தொகுதியில் முஸ்லிம் முதற்கொண்டு அவருக்கு தான் வாக்களிப்பார்கள். அவருக்கு உள்ளுரில் அந்த அளவுக்கு செல்வாக்கு உள்ளது. கட்சி பாகுபாடு இன்றி அனைவரிடமும் நன்றாக பழகக்கூடியவர். அண்ணாமலையின் பேச்சு காரணமாக அவர் மீது கடும் வெறுப்பு ஏற்படும். ஆனால் நயினார் மீது அப்படி ஏற்படாது. நெல்லை மாவட்டத்தில் நயினாரால் சிறுபான்மை வாக்காளர்களை கவர முடியும். அதேபோல், தென் தமிழ்நாட்டில் தேவர் வாக்கு வங்கியில், நயினார் நாகேந்திரனால் திமுகவுக்கு சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் நயினார் நாகேந்திரன் தென் தமிழ்நாட்டில் முழுவதும் அறியப்பட்ட தேவர் தலைவர் கிடையாது. அதனால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது.
அண்ணாமலை, பாஜகவில் பிராமணத்துவத்தை உடைத்து அனைத்து சமுதாயத்தையும் கட்சிக்குள் கொண்டுவந்தார். கடவுள் எதிர்ப்பு என்பது தற்போது நீர்த்து போய் உள்ளது. வைகோ தனது பேத்தியின் கல்யாணத்தில் புரோகிதர்களை எல்லாம் வைத்து திருமணத்தை நடத்தினார். அவர் வெளியிட்ட விளக்க அறிக்கையில் அண்ணா ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொல்லியுள்ளார் என்று கூறினார். இதைதான் பெரியார் அன்றைக்கே சொன்னார், வாக்கு அரசியலுக்குள் சென்றுவிட்டீர்கள் என்றால் கொள்கை பிடிப்பு விட்டு போய்விடும் என்று. திமுகவில் உள்ள கொள்கை பிடிப்பு என்பது அதிமுகவில் இருக்காது. ஏனென்றால் அதிமுக தனிமனித எதிர்ப்பு காரணமாக உருவாகிய கட்சியாகும். கருணாநிதி எதிர்ப்பு என்பதுதான் எம்ஜிஆரின் பிரதான நோக்கமாகும். எம்ஜிஆரிடம் திராவிட கொள்கைகளில இருந்து நீர்த்து போகாமல் இருக்க காரணம், ராஜராம், நெடுஞ்செழியன், எஸ்.டி.எஸ் போன்ற திராவிட தலைவர்கள் அவருடன் இருந்தனர். எம்ஜிஆர் தனது கடைசி காலத்தில் கோயிலுக்கு போனார். அப்போதே அதிமுகவில் திராவிட கொள்கை நீர்த்துபோக தொடங்கிவிட்டது. அதன் பின்னர் ஜெயலலிதாவுக்காக கோவில்களில் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். நயினாரும் அதிமுகவில் இருந்து வந்ததால், அவருக்கு வலது சாரிகளிடம் இருந்து பெரிய அளவில் எதிர்ப்பு இருக்காது. திராவிட கொள்கை உள்ளவர்களிடம் இவர் நம்ம ஆள் என்று எண்ணம் உள்ளது. அதனால் நயினாரை அண்ணாமலையை காட்டிலும் எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள்.
அண்ணாமலை எப்படி அரசியல் செய்தார் என்பது முக்கியமில்லை. ஆனால் அவர்தான் கிராமத்திற்கு பாஜகவை கொண்டு சென்றவர். பாஜகவுக்கு இன்றைக்கு அதிமுக கூட்டணி தேவை. அவர்கள் வைக்கும் நிபந்தனை அண்ணாமலையை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதாகும். அதனால் பாஜக அண்ணாமலையை யூஸ் அன்ட் த்ரோ போல வீசி எறிந்தார்கள். பாஜகவுக்குள் அண்ணாமலைக்கு இருந்த எதிர்ப்பு, நயினார் நாகேந்திரனுக்கு இருக்காது. ஹெச்.ராஜா, ராகவன், எஸ்வி சேகர் போன்றவர்கள் பாஜகவை வளர்த்துள்ளனர். கட்சியில் சேர்ந்து 10 ஆண்டுகளுக்குள் மாநிலத் தலைவர் பதவிக்கு வரும்போது எதிர்ப்பு இருக்காதா? என்றால் ஹெச்.ராஜா, ராகவன் போன்றவர்கள் கட்சியில் இருந்தார்களே தவிர, கட்சியை வளர்க்கவில்லை. பாஜக வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக கொள்கையில் எந்த தியாகத்தை வேண்டுமென்றாலும் செய்வார்கள்.
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரசை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர்களில் 60 சதவீதத்திற்கு மேல் மாற்று கட்சிகளில் இருந்து வந்தவர்கள். அந்த கட்சிகளில் இருந்தவர்களுக்கா கொடுத்தார்கள். அவர்களுக்கு எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும். ஆட்சியை பிடித்த உடன் பழைய கோர் டீமில் உள்ளவர்களை மீண்டும் முன்னிலைக்கு கொண்டு வருவார்கள். நேற்று முன்தினம் குருமுர்த்தியின் வீட்டிற்குதான் முதலில் அமித்ஷா சென்றார். அவரிடம் நடத்திய ஆலோசனையின் அடிப்படையில் வந்த திட்டம்தான் இது. இன்றைக்கு எடப்பாடி, அதிமுக தொண்டர்கள் நமக்கு தேவை. அப்போது எடப்பாடி வைக்கும் நிபந்தனைகளை இன்றைக்கு ஏற்றுக்கொள்வோம். அண்ணாமலையை தூக்கி விடுவோம், ஓபிஎஸ், தினகரன், சசிகலாவை இன்றைக்கு அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று சொல்ல வேண்டாம். அவர்களை சேர்க்க வேண்டும் என்று சொன்னதற்கு காரணம் அதிமுகவில் கலகத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான். இன்றைக்கு கட்சியில் கலகத்தை ஏற்படுத்த வேண்டாம். என்றைக்கு இருந்தாலும் அவர்கள் நமக்கு விசுவாசமாக இருப்பார்கள். அதனால் ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை நாம் வைத்திருக்கலாம், அவர்களுக்கான முக்கியத்துவத்தை கொடுக்கலாம் என்று தான் யோசித்திருப்பார்கள்.
ஏற்கனவே பாஜகவில் இருந்து பலன் பெற்றவர்கள், அந்த பலனை இழந்துவிட்டனர். அண்ணாமலை போனதால் அவர்கள் மீண்டும் தங்களது பலத்தை பெற்று விட்டதாக உணர்கிறார்கள். இதில் எந்த சந்தேகமும் கிடையாது. தேசிய அளவில் கட்சியில் அண்ணாமலைக்கு பொறுப்பு வழங்கப்படும் என்று அமித்ஷா சொல்கிறார். கட்சி பொறுப்பு பற்றி பேச உள்துறை அமைச்சர் யார்? அது குறித்து பாஜக தேசிய தலைவர் நட்டா தான் முடிவு எடுக்க வேண்டும். இதுதான் பாஜக. தலைமை பொறுப்பில் யாரை வேண்டுமானாலும் உட்கார வைப்போம். ஆனால் ஆடுவது நாங்கள்தான், இவ்வாறு அவர் தெரிவித்தார்.