“மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா!” என கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பெண்களைப் போற்றிப் பாடியது பெண்மையின் மேன்மையை விளக்குகிறது. அனைத்து பெண்களையும் போற்றும் விதமாகவும் அவர்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாகவும் ஒவ்வொரு வருடமும் மார்ச் 8 அன்று உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது கடந்த 1920 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த பெண்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட அலெக்ஸாண்ட்ரா கேலன்ரா என்ற பெண்மணி உலக மகளிர் தினத்தை ஆண்டுதோறும் கொண்டாட வேண்டும் என பிரகடனம் செய்தார். அதன்படி 1975-ல் முதல் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அன்று முதல் பெண்களின் பெருமைகளையும், அவர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, சமத்துவ உரிமை ஆகியவற்றை வலியுறுத்துவதற்காக இந்நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
நாம் கொண்டாடும் ஒவ்வொரு நாளின் பின்னணியிலும் பல போராட்டங்கள் மறைந்திருக்கும். அது போல தான் இந்த மகளிர் தினத்திற்கு பின்பும் எண்ணற்ற போராட்ட வரலாறுகள் நிறைந்துள்ளன. ஆனால் அது நாளடைவில் ஒரு கொண்டாட்ட நாளாக மட்டும் மாறிவிடுவது வருத்தத்தை தருகிறது. ஏனென்றால் சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகிவிட்டது. குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதான பெண்மணிகள் என எங்கு திரும்பினாலும் பாலியல் சீண்டல் பற்றிய செய்திதான். இவ்வாறு பெண்களுக்கு எதிரான பல குற்றங்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் அரங்கேறி வருவது வேதனைக்குரிய விஷயமாகும். அதாவது பெண்கள் என்னதான் பல தளங்களில் முன்னேற்றம் கண்டு வந்தாலும் மகாத்மா காந்தியின் கூற்றுப்படி, இரவில் ஒரு பெண் தனியாக நடந்து செல்வதுதான் ஒரு பெண்ணுக்கு கிடைக்கும் உண்மையான சுதந்திரமாகும்.
ஒவ்வொருவரும் பெண்ணிலிருந்து தான் பிறந்திருக்கிறோம் என்பதை என்றுமே மறக்கக்கூடாது. ஒரு குழந்தையை பெற்றெடுக்க ஒரு பெண் மரணத்தையும் வெல்கிறாள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். எனவே பெண்ணின் மகத்துவத்தை உணர்ந்தவர்களாக மகளிர் தினம் என்பதை ஒரு கொண்டாட்ட நாளாக மட்டுமே எண்ணாமல் ஒவ்வொரு நாளும் பெண்களின் பாதுகாப்பு, உரிமைகள் ஆகியவற்றை பேண வேண்டும். ஒரு பெண் பயமின்றி மகிழ்ச்சியாக இருப்பதுதான் பெண்களின் முன்னேற்றமாக கருதப்படுகிறது. இன்று மட்டுமில்லாமல் என்றுமே பெண்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். சமத்துவமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்றிருந்த காலம் மாறி, தற்போது பெண்கள் பலரும் பல்வேறு துறைகளில் பல சாதனைகளைப் படைத்து வருகின்றனர். எனவே இந்நாளில் இந்திரா காந்தி, கல்பனா சாவ்லா, அன்னை தெரஸா போன்ற பெண்ணினத்திற்கு பெருமை சேர்த்த பெண்களை நினைவில் கொண்டு, பெண்கள் அவர்களின் வாழ்வில் இன்னும் பல சாதனைகளை புரிந்திட ஊக்குவிக்க வேண்டும். இது நம் அனைவரின் கடமையும் கூட. எனவே கனவுகளை நோக்கி ஓடும் பெண்களுக்கு எந்த வித இடையூறும் ஏற்படுத்தாமல் அவர்களின் பாதையை தைரியமாக கடந்து செல்ல அவர்களை மேலும் வலிமை உடையவர்களாக மாற்றவும், பெண்ணியம் காக்கவும் இந்த மகளிர் தினத்தில் உறுதி ஏற்போம்.
“பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா,
பெண்மை வெல்கவென்று கூத்திடுவோமடா” எனும் பாரதியின் பொன்னான வரிகள் நிச்சயம் உயிர் பெறும். அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.