ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயில் மேல்நிலைப் பள்ளியில் மேயர் உதயகுமார் 76 வது குடியரசு தின விழா தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயிலில் உள்ள ஆரம்பப்பள்ளி 1906ல் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் 1979 ம் ஆண்டு இடைநிலைப் பள்ளியாகவும், 2007ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளி, 2021 மேல்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. தற்போது திருமுல்லைவாயில் பகுதியில் ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் 685 பேர் பயின்று வருகின்றனர்.
நூற்றாண்டு கண்ட இப்பள்ளியில் மாநகராட்சி மேயர் உதயகுமார்,ஆணையர் கந்தசாமி ஆகியோர் இந்த 76 வது குடியரசு தினத்தை திருமுல்லைவாயில் பள்ளி மாணவ மாணவிகளுடன் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தனர்.
பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவரும் ஆவடி மாநகராட்சி 8வது வார்டு மாமன்ற உறுப்பினருமான சக்திவேல் தலைமையில் ஆவடி மேயர் உதயகுமார் தேசிய கொடியை ஏற்றினார். பின்னர் அவர் பேசும்போது நான் இந்த பள்ளியில் படித்த மாணவர் என்ற முறையில் இதே பள்ளியில் உங்கள் முன்பு மேயராக வந்து நிற்பதில் பெருமை கொள்வதாக தெரிவித்தார்.
ஆவடி மாநகராட்சி ஆணையர் கந்தசாமி மாணவர்களிடம் பேசும் போது,இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பெருமைகள் குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கமாக உரையாற்றினர். மேலும் நானும் உங்களைப் போன்று அரசுப்பள்ளியில் படித்து தான் இன்று ஐ.ஏ.எஸ் அதிகாரியாக உங்கள் முன்பு நிற்கிறேன் என்று மாணவர்களிடையே பேசி உற்சாகப்படுத்தினார்.
ஒரு ரௌத்திரம் ஒரு சரித்திரம் தலைப்பில் தேசப்பற்றுப் பாடல் ஒளிபரப்பு செய்தனர். அதற்கு 7 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் உணர்ச்சி பூர்வமான நடனம் ஆடி எல்லோரையும் கவர்ந்தனர். அதேபோன்று தோடுக்கடை ஓரத்திலே என்ற நாட்டுப்புற பாடலுக்கு 6 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் 5 பேர் அருமையாக நடனம் ஆடினார்கள். அதேபோன்று விவசாயம் காப்போம் பாடலுக்கு 6 முதல் 8 ம் வகுப்பு மாணவிகள் 24 பேர் ஆடிய குழு நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
9 ஆம் வகுப்பு மாணவி குஷி செந்தில் தேவேந்தர் ஆங்கிலத்தில் பேசியதும் 10 ஆம் வகுப்பு மாணவி ஜோதிலட்சுமி, 12 ஆம் வகுப்பு மாணவி பவதாரிணி தமிழில் பேசிய பேச்சு தனியார் பள்ளி மாணவர்களை விட கூடுதல் திறமை பெற்றவர்களாகவே இருந்தனர். இறுதியில் போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு மாநகராட்சி ஆணையர் கந்தசாமி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் ஆவடி மாநகராட்சி மண்டலக்குழு தலைவர் அமுதா பேபி சேகர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகிகள், ஆசிரியர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தில்குமார் எல்லோரையும் இன்முகத்துடன் வரவேற்றார். முதுகலை பட்டதாரி ஆசிரியர் சீனிவாசன் நன்றி கூறினார்.