ஆவடி அருகே தனியாக இருந்த பெண்ணை நோட்டமிட்டு, வீட்டுக்குள் சுவர் ஏறி குதித்து அத்துமீற முயன்ற வட மாநில சிறுவர்கள். தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்.
திருமுல்லைவாயல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜம்மாள் நகர் உள்ளது. இங்கு 2000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த சிலர், கொலுசு, அலுமினியம், பித்தளை பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை பளபளப்பாக்கும் ரசாயன பவுடர்களை விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வடமாநிலத்தவர்கள் அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர் சண்முகம் என்பவரது வீட்டிற்கு சென்று ரசாயன பவுடர் வேண்டுமா என கேட்டுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் வேண்டாம் எனக் கூறி,கண்டித்து அவர்களை அனுப்பி வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர் சவாரிக்கு வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் அவரது திருமணமான மகள் மட்டுமே தனியாக இருந்துள்ளார்.
இதை நோட்டமிட்ட வடமாநில சிறுவர்கள் வீட்டின் பின்பக்க சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்த வளர்ப்பு நாய் குரைத்துள்ளது இதனால் அப்பெண் வெளியில் வந்து பார்த்தபோது,வட மாநிலத்தவர்கள் மீண்டும் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடியதை கவனித்து,இது குறித்து உடனடியாக தந்தை மற்றும் கணவருக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கணவர் வீட்டின் அருகில் இருந்தவர்களுக்கு தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூறி, அந்தப் பகுதியில் எங்கேனும் அவர்கள் இருக்கிறார்களா என பார்க்கும்படி கேட்டுள்ளனர். உடனடியாக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அப்பகுதியில் தேடிப் பார்த்தபோது வடமாநில சிறுவர்கள் அதே பகுதியில் வேறு இடங்களில் சுற்றி திரிந்து கொண்டிருப்பதை கண்டு துரத்தி சென்றுள்ளனர். அதில் அவர்களுடன் வந்த மற்றொரு நபர் தப்பி ஓடிய நிலையில் 3 பேரை பிடித்து கைகளால் தர்ம அடி கொடுத்து பிடித்து வைத்திருந்தனர்.
சம்பவம் குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நிகழ்வு இடத்திற்கு விரைந்து வந்த திருமுல்லைவாயில் போலீசார், பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த வட மாநிலத்தவர்களை மீட்டு,போலீஸ் வாகனத்தில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வடமாநில நபர்கள் வீடு ஏறி குதித்து பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…