ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட கோவில்பதாகை மற்றும் பருத்திப்பட்டு எம்.ஜி.ஆர் நகர் உள்ளிட்ட இரண்டு இடங்களில் மழைநீர் வடிகால்வாய் மற்றும் உரை கிணற்றில் தவறி விழுந்த இரண்டு பசு மாடுகளை ஆவடி தீயணைப்பு மீட்பு படையினர் லாவகமாக மீட்டனர்.
ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட கோவில் பதாகை கலைஞர் நகர் 5வது தெருவில் சாலையோரம் உள்ள மழைநீர் வடிகால்வாயில் தரமற்ற முறையில் போடப்பட்டுள்ளது. இந்த சிமெண்ட் சிலாப்பின் மேல் பசு மாடு நடந்து சென்ற போது சிலாப் உடைந்துள்ளது. இதில் சுமார் 8 அடி ஆழம் கொண்ட மழைநீர் வடிகால்வாயில் பசு மாடு உள்ளே விழுந்து சிக்கிக்கொண்டது.
இது குறித்து பொதுமக்கள் உடனடியாக ஆவடி தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள் கால்வாயில் விழுந்த பசுமாட்டை லாபகமாக கயிறு மூலம் கட்டி பொதுமக்கள் உதவியுடன் காயங்கள் ஏதுமின்றி பத்திரமாக மீட்டனர்.
இதே போல் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பருத்திப்பட்டு எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காலியிடம் உள்ளது. இதன் ஒரு பகுதியில் கழிவு நீர் தேக்கி வைக்கும் உரை கிணறு உள்ளது. அங்கு மேய்ச்சலுக்காக சென்ற மாடு எதிர்பாராத விதமாக செங்குத்தாக கிணற்றுக்குள் விழுந்து சிக்கிக் கொண்டது. மாட்டின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த ஆவடி தீயணைப்பு மீட்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து கிணற்றின் முழுவதும் தண்ணீர் நிரப்பி மாட்டை வெளியே வரவழைத்து கயிறு கட்டி லாபகமாக மீட்டனர். ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் கால்வாய் மற்றும் உரை கிணற்றில் சிக்கிக்கொண்ட மாடுகளை லாவகமாக மீட்ட தீயணைப்பு மீட்பு படையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.