ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் நடைபெற்று வரும் வெள்ள தடுப்பு பணிகளை முன்னாள் அமைச்சர் நாசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் கடந்த கனமழைக்கு பெரும்பாலான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனையடுத்து ஆவடி மாநகராட்சி சார்பில் கடந்த சில மாதங்களாக வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக மழைநீர் வடிகால்வாய் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள தடுப்பு பணிகளை முன்னாள் அமைச்சர் நாசர், ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், ஆணையர் கந்தசாமி உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆவடி காமராஜர் நகர் கருமாரியம்மன் கோவில் முதல் பருத்திப்பட்டு ஏரி கால்வாய், அண்ணனூர் ஏரி கால்வாய், சி.டி.எச் சாலை கால்வாய், ஆவடி புதிய ராணுவ சாலை கால்வாய், அண்ணனூர் சங்கர் நகர், ஜோதி நகர் பகுதியில் உள்ள கால்வாய் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் நாசர் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது கால்வாய்களின் தற்போதைய நிலை மற்றும் நடைபெற்று வரும் வெள்ள தடுப்புபணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த நாசர், வடகிழக்கு பருவமழை நெருங்கி வரும் சூழலில் கால்வாய் பணிகளை துரிதப்படுத்தி முடித்திடவும், கால்வாய்களை தூர்வாரவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், கால்வாய் வழித்தடத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக கண்டறிந்து அகற்றிடவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்