ஆவடியில் 200 கிலோ கஞ்சா பறிமுதல்
ஆவடி அடுத்த வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், சென்னை போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் முத்தாபுதுப்பேட்டை போலீசார் இரவு கஞ்சா கடத்தல் தடுக்கும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திர மாநில பதிவேடு கொண்ட எம்.ஜி ஹெக்டர் மற்றும் ரீட்ஸ் கார்களை சோதனைக்காக நிறுத்த முயன்றனர். அப்போது சாலையோரம் ஒதுக்கி வாகனங்களை நிறுத்துவது போல் நடித்த கார் ஓட்டுநர்கள் திடீரென வேகத்துடன் காரை இயக்கி தப்பி செல்ல முயன்றனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை துரத்தி சென்றனர். 3 கிலோமீட்டர் தூரம் தாண்டி வெள்ளசேரி அணுகு சாலையில் அந்த கார்கள் மட்டும் நிறுத்தப்பட்டிருந்தன. போலீசார் சோதனை செய்தபோது 200 கிலோ கஞ்சா சிக்கியது.
அவற்றின் மதிப்பு 20 லட்சம் ரூபாய் என்றும் அவற்றை கைப்பற்றிய போலீசார் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் அங்கிருந்து தப்பி திருவள்ளூர் அருகே தனியார் விடுதியில் பதுங்கி இருந்த ஆந்திராவை சேர்ந்த நாகமல்லீஸ் வர ராவ்(32), தன்ராஜ்(28), நானி(25) ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆந்திராவில் இருந்து வாங்கிவரப்பட்ட முதல் தர கஞ்சாவை சென்னை, திருவள்ளூர் சுற்றுவட்டாரங்களில் உள்ள வியாபாரிகளுக்கு விநியோகம் செய்ய கடத்தி வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.