Homeசெய்திகள்ஆவடிஆவடி அருகே 60 சவரன் நகை கொள்ளை

ஆவடி அருகே 60 சவரன் நகை கொள்ளை

-

ஆவடி அருகே 60 சவரன் நகை கொள்ளை. வீட்டின் உரிமையாளர் சுற்றுலா சென்றிருந்த நிலையில் கொள்ளை என தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆவடி அருகே 60 சவரன் நகை கொள்ளை

சென்னை ஆவடி அடுத்த கோவில்பதாகை பிரான்சிஸ் நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பரசுராம். சென்னையில் உள்ள தனியார் வங்கியில் புரோடக்ட் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி பரிமளா மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.

இவர் கோடை விடுமுறையை கழிப்பதற்காக கடந்த 4 ஆம் தேதி குடும்பத்தினருடன் கேரளா மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை பரசுராம் மனைவி பரிமளா தனது செல்போனில் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளார்.

ஆவடி அருகே 60 சவரன் நகை கொள்ளை

அப்பொழுது வீட்டின் முன்பகுதியில் மர்ம நபர் ஒருவர் நின்று இருப்பதாகவும் சிசிடிவி திசை திரும்பி உள்ளதாகவும், இதனால் அதிர்ச்சியடைந்த பரிமளா அருகில் இருந்த உறவினர் சாலமன் என்பவருக்கு கேரளாவில் இருந்தபடியே தகவல் தெரிவித்துள்ளார்.

தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து பரசுராமின் வீட்டிற்கு சாலமன் வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையறையில் இருந்த பீரோ கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி இருந்துள்ளது. இதுகுறித்து உறவினர் பரிமலாவிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் தகவல் அறிந்த பரசுராம் ஆவடி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடியிருப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

ஆவடி அருகே 60 சவரன் நகை கொள்ளை

குடும்பத்தினருடன் சுற்றுலா சென்ற நிலையில் வீட்டை நோட்டமிட்டு நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் தொடர்ந்து கொலை, கொள்ளைகள் அரங்கேறி வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ