சென்னை அம்பத்தூரில் நள்ளிரவில் தனியாக இருந்த மருமகள், மாமியாரை வீடுபுகுந்து உன் கணவர் எங்கே என்று மிரட்டி, செல்போன்களை பறித்து சென்ற 10 க்கும் மேற்பட்ட ரவுடி கும்பல்… வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போலீஸ். என் கணவரின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அவரை எப்படியாவது காப்பாற்றி கொடுங்கள் என்று ஆவடி காவல் ஆணையரிடம் புகார்.சென்னை அம்பத்தூர், சூரப்பட்டை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி காஞ்சனா என்பவர் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் உள்ள முழு விபரங்கள். ஐயா. வணக்கம்,
நான் மேற்கண்ட முகவரியில் சுமார் 7 வருடங்களுக்கு மேலாக எனது குடும்பத்தாருடன் இல்லத்தரசியாக வசித்து வருகிறேன். எனது கணவர் பெயர் ராஜேந்திரன் எனக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் கெளசிக் என்ற 15 வயதில் மகன் உள்ளார். எனது கணவர் எருக்கஞ்சேரியில் மரக்கடை தொழில் செய்து வருகிறார். இவ்வாறு இருக்க எனது கணவர் அவர் வேலை உண்டு வீடு உண்டு என்று இருக்கக்கூடியவர். நாங்கள் குடியிருக்கும் குடியிருப்பில் கூட யாரிடமும் பேச மாட்டார்.
நாங்கள் குடியிருக்கும் குடியிருப்பில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் பல்வேறு உயர் சாதியை சார்ந்தவர்கள். அவர்கள் பதவிக்கு வந்த உடன் தாழ்த்தபட்ட சமூகத்தை சார்ந்தவர்களிடம் பிரச்சனை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு இருக்க எனது கணவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர் என்பதால் அவர் காரை நாங்கள் குடியிருக்கும் அப்பார்ட்மெண்டில் உள்ளே நிறுத்தக்கூடாது என்று குடியிருப்பில் உள்ள நாச்சியப்பன், முகமது யூசுப் நவாஸ், ராமசாமி மற்றும் இவர்களுடன் இருக்கும் சங்க உறுப்பினர்கள் எனது கணவரின் காரை நுழைவாயிலேயே தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல விடாமல் அசிங்கமான வார்த்தையால் திட்டி அவரது சாதி பெயரை இழிவு படுத்தி பேசினர்.
அதனால் அவர்கள் மீது எனது கணவர் புகார் அளித்திருந்தார். புகார் சம்பந்தமாக காவலர்கள் நடவடிக்கை எடுக்காமல் எதிரிகளுக்கு சாதகமாக ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு புகார் கொடுத்த என் கணவர் மீதே பொய் புகார்களை சித்தரித்து வேண்டுமென்று காவலர்கள் அவரை சிறையில் அடைத்தனர்.
இவ்வாறு காவலர்கள் செயல்பட்டதால் காவலர்கள் மீதும் எதிரிகள் மீதும் எனது கணவர் மனித உரிமை ஆணையம், ஆவடி காவல் ஆணையர், முதலமைச்சர் தனிப்பிரிவு என பல்வேறு துறைகளில் புகார் அளித்திருந்தார். தற்போது அந்த புகார்கள் சம்பந்தமாக ரெட்ஹில்ஸ் உதவி ஆணையர் உரிய விசாரணை நடத்தி எதிரிகள் மீது SC/ST பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கும் தற்போது நிலுவையில் உள்ளது. அதன் மீது ஒருவரையும் கைது செய்யவில்லை.
இவ்வாறு இருக்க எனது கணவரை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் சாட்சியங்களை கலைக்கும் விதமாக எதிரிகளும் காவலர்களும் சேர்ந்து செயல்பட்டு வந்தனர். இதனால் எனது கணவர் தொடர்ச்சியாக உயர் அதிகாரியிடம் புகார் அளித்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த அம்பத்தூர் காவல் உதவி ஆணையர் கிரி அவர்களின் தலைமையில் 29.01.2025 அம்பத்தூர் ஆய்வாளர் டில்லி பாபு மற்றும் அவருடன் சில காவலர்களை அழைத்து வந்து எந்த ஒரு அனுமதியும் இன்றியும் எந்த ஒரு நீதிமன்ற உத்தரவும் இன்றியும் எனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து எனது கணவர் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து வீட்டில் உள்ள எனது கணவரின் ஆதார் கார்டு. பான் கார்டு, சாதி சான்றிதழ். கல்விச் சான்றிதழ். என பல அசல் ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.
அவர்கள் எடுத்து சென்ற அசல் ஆவணங்களுக்கு எந்த அத்தாட்சியும் என்னிடம் எழுதி கொடுக்கவில்லை இவ்வாறு அத்துமீறி செயல்பட்டு ஆவணங்களை எடுத்துச் சென்றதால் நான் அன்றைய தினமே மனித உரிமை ஆணையம் ஆவடி காவல் ஆணையர், முதலமைச்சர் தனிப்பிரிவுகளில் புகார் அளித்தேன். இவ்வாறு இருக்க 30 01.2025 தேதி அன்று நானும் எனது மாமியாரும் வீட்டில் தனிமையாக இருப்பதை அறிந்துக்கொண்டு இரவு நேரத்தில் வீட்டின் கதவை காவலர்கள் அடிக்கடி வந்து தட்டிக் கொண்டும் அடியாட்களை வைத்து காலிங் பெல்லை அடித்துக் கொண்டும் இருந்தனர். நாங்கள் உயிருக்கு பயந்து விட்டிற்குள்ளே இருந்து விட்டோம்.
இவ்வாறு இருக்க நாங்கள் வீட்டில் இருந்து வெளியே வருவதற்காக மின்சாரத்தை துண்டிப்பது போன்ற செயல்களை எதிரிகள் செய்து வந்தனர். இரவு சுமார் 8.30 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர்கள் முகமூடி அணிந்து கொண்டு எங்கள் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை சுக்குநூறாக நொறுக்கினார்கள். அதனை நாங்கள் எங்களது கண்காணிப்பு கேமராவில் பார்த்து பயந்து எங்கள் வீட்டில் உள்ள அறையின் பாத்ரூமில் ஒளிந்து கொண்டோம். காவல் அவசர உதவி எண் 100 பலமுறை தொடர்புக் கொண்டும் அவர்கள் எங்களுக்கு உதவி செய்ய வரவில்லை. ஏனென்றால் அவர்கள் எதிரிகளுக்கு சாதகமாக இருப்பதால் எங்களுக்கு உதவும் மனப்பான்மை அவர்களுக்கு கிடையாது.
யாரும் வராமல் தனிமையிலே மின்சாரம் இல்லாமல் வெகு நேரமாக நானும் எனது மாமியாரும் இருந்து வந்த நிலையில் எங்கள் வீட்டின் கதவை சுமார் 10 பேர் கொண்ட கும்பல் சுக்குநூறாக அடித்து உடைத்து வீட்டில் உள்ளே நுழைந்து உனது கணவர் எங்கே அவனது சாவு எங்க கையில்தான், எங்க ஆட்களான நாச்சியப்பன், முகமது யூசுப் நவாஸ் மற்றும் காவலர்கள் மீது புகார் கொடுக்கும் அளவிற்கு உங்களுக்கு தைரியம் இருக்கிறதா இன்னிக்கி உங்க கதை முடிந்தது என்று மிரட்டினர். மேலும் எனது கணவர் பணத்தை எங்கு வைத்துள்ளார் என்று கேட்டனர். நான் எந்த பணமும் எங்களிடம் இல்லை என்று கூறியும் அவர்கள் வலுக்கட்டாயமாக வீட்டில் உள்ள கதவுகளை உடைத்து ஆராய்ந்தனர். வீட்டில் ஏதும் கிடைக்காததால் அவர்கள் திட்டம் தீட்டியபடியே எங்கள் கையில் இருந்த எனது கைபேசியும் எனது மாமியாரின் கைபேசியும் பிடுங்கிக் கொண்டு வெளியே சத்தம் போட்டால் உங்களை இங்கேயே கொலை செய்து விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்து விட்டு எங்கள் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவியின் ஹார்ட் டிஸ்க் அனைத்தையும் எடுத்துக் கொண்டு அங்குள்ள காவலர்களின் துணையோடு வெளியேறினர்.
ஆகையால் ஐயா அவர்கள் எங்கள் வீட்டில் அத்துமீறி நுழைந்து எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து எங்கள் கைபேசியை பிடுங்கி கொண்டு பணத்தை திருடும் முயற்சியில் ஈடுபட்டு அவர்கள் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக எங்கள் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவியின் ஹார்ட் டிஸ்கையும் எடுத்துக்கொண்டு காவலர்கள் துணையோடு சென்ற நாச்சியப்பன், முகமது யூசுப் நவாஸ் அடியாட்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
ஆவடி அருகே தந்தை, மகள் மர்மமான முறையில் மரணம்! போலீசார் தீவிர விசாரணை!