Homeசெய்திகள்ஆவடிஆவடிக்கு மறுவாழ்வு தந்த முதல்வர்; இனிமேல் நாசர் இப்படி இருந்தால் நல்லது

ஆவடிக்கு மறுவாழ்வு தந்த முதல்வர்; இனிமேல் நாசர் இப்படி இருந்தால் நல்லது

-

ஆவடி தொகுதியை சேர்ந்த சா.மு.நாசருக்கு அமைச்சர் பதவி வழங்கியதன் மூலம் முதலமைச்சர் மீண்டும் ஒரு வாய்பளித்துள்ளார் என்றும் இது நாசருக்கு கிடைத்த வாய்ப்பாக கருதாமல் ஆவடி தொகுதி மக்களுக்கு கிடைத்த மறுவாய்ப்பாக கருதி செயல்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சா.மு.நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கி முதலமைச்சர் மறுவாழ்வு தந்திருக்கிறார். அதை அமைச்சர் சா.மு.நாசர் எப்படி பயன்படுத்தப் போகிறார் என்பதை பொறுத்து அவருடைய அரசியல் எதிர்காலம் அமையப் போகிறது.

தமிழகத்தில் திமுக முதன்முதலில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த 1967 காலக்கட்டத்தில் இருந்து தற்போது வரை அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட ஒருவருக்கு இரண்டாண்டு கால இடைவேளையில் மீண்டும் அமைச்சர் பதவி வழங்கியிருப்பது ஆவடி சா.மு.நாசருக்கு மட்டுமே. அந்த வகையில் திமுக அரசியல் வரலாற்றில் நாசர் இடம் பிடித்துவிட்டார் என்றே சொல்லலாம்.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோகமாக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைத்தது. அப்பொழுது முதலமைச்சருடன் சேர்ந்து 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். அதில் ஆவடி சா.மு.நாசர் பால் வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் அமைச்சரவையில் அவருக்கு 27 வது இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

அமைச்சர் பதவியின் அனுபவம் இல்லாத காரணத்தினாலும், சரியான நபர்களின் ஆலோசானையை காது கொடுத்து கேட்கும் பழக்கம் இல்லாமல் போனதாலும் இரண்டாண்டு காலத்தில் அமைச்சர் பதவியில் இருந்து 2023-மே 9 ஆம் தேதி நாசர் நீக்கப்பட்டார்.

அமைச்சர் பதவி இழந்ததும் அவருக்கு ஒன்றுமே புரியாமல் தவித்தார். “எதற்கு பதவியை கொடுத்தார்கள், ஏன் பறித்தார்கள்? செய்யக்கூடாததை என்ன செய்துவிட்டோம்?” எதுவும் தெரியாமல் மனரீதியாக குழப்பம் அடைந்தார். அந்த பாதிப்பில் இருந்து மீண்டு, தன்னைத்தானே தேற்றிக்கொண்டு மக்களை சந்திப்பதற்கு ஆறு மாதக் காலம் அவருக்கு தேவைப்பட்டது.

ஆவடி சா.மு.நாசர் ஊழல் எதுவும் பெரிதாக செய்யவில்லை. ஆனால் அவருடைய அணுகுமுறையும், பேச்சும் மட்டுமே அவருடைய பின்னடைவுக்கு காரணம் என்று உளவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பால்வளத்துறையை சார்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள், மாநகராட்சி, நகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகளை மரியாதையாக நடத்தவில்லை என்று அவர் மீது வைக்கப்படுகின்ற முக்கிய குற்றச்சாட்டு. அது ஏதோ ஒரு வகையில், யாரோ ஒரு அதிகாரி மூலம் தினம் தினம் குற்றச்சாட்டு தொடர்ந்தது, காட்டுத்தீ போன்று நாளுக்கு நாள் வைரலாக பரவியது. அது புகாராக முதலமைச்சர் காது வரை சென்றது.

அதே காரணத்தை சொல்லி வெளியில் இருந்து வருவாய் துறை, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் ஆவடி தொகுதிக்குள் வேலைக்கு வருவதற்கு தயங்கினார்கள். தற்போதும் தயங்குகிறார்கள்.அதனால் ஆவடி மாநகராட்சி, திருநின்றவூர், திருவேற்காடு, பூவிருந்தவல்லி நகராட்சிகளில் பெரும்பாலான பணி இடங்கள் காலியாகவே உள்ளது. அதனால் மக்கள் பணிகள் முடங்கிப் போயுள்ளது.

இதுபோன்ற சின்னச் சின்ன விஷியங்களை ஊடகங்கள் ஊதி பெரிதாக்கியது. நாசரின் பேச்சும், செயலும் பத்திரிகையில் முதல் பக்கச் செய்தியாக வரத்தொடங்கியது. முதலமைச்சர் கவனத்தை ஈர்த்தது. அதனால் ஒரு கட்டத்தில் அமைச்சர் பதவியில் இருந்து நாசர் நீக்கப்பட்டார்.

தற்போது காலதாமதமாக உணர்ந்து, புரிந்துக் கொண்ட திமுக தலைமை ஆவடி சா.மு.நாசருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்த வாய்ப்பை மக்களுக்காக பயன்படுத்த வேண்டும். ஆவடி மக்களுக்கு தொண்டு செய்ய தலைமை அளித்துள்ள மறுவாழ்வாக கருத வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திமுக ஆட்சிக்கு வந்த கடந்த மூன்றரை ஆண்டுகளில் ஆவடி தொகுதிக்கு சொல்லிக் கொள்ளும் வகையில் எதுவும் நடக்கவில்லை. ஆவடி காமராஜர் நகர், வீட்டுவசதி வாரியம் குடியிருப்பு போன்ற இன்னும் பல நகர்களில் வீடுகளுக்கான பட்டா கிடைக்காமல் மக்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். குடியிருப்பு பட்டா என்பது மக்களின் அடிப்படை பிரச்சினை. பட்டா இல்லாமல் பத்திரப்பதிவு நடைபெறவில்லை. அதனால் அத்தியாவசிய தேவைக்கு நிலம் வாங்கவோ, விற்கவோ முடியாமல் தவிக்கிறார்கள்.

அதேபோன்று ஆவடி மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் தேக்க தொட்டிகள் பல இடங்களில் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தண்ணீர் மட்டும் கிடைக்கவில்லை. இப்படி நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. இந்த பிரச்சனைகள் ஒவ்வொன்றையும் நிதானமாக அணுகி, வேகமாக முடிக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.

பதவி இருந்தால் அதிகாரிகள், அரசியல் வாதிகள், பொதுமக்கள் என்று அனைவரும் வருவார்கள். அமைச்சரால் முடியாதது எதுவும் இல்லை என்று நினைத்து உதவி கேட்பார்கள். அவர்களிடம் முடிந்தவரை நிதானமாகவும், அன்பாகவும் பேசினால் போதும். அதைதான் எதிர்பார்க்கிறார்கள்.

MUST READ