பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்ட மின்சாரம் திடீரென வந்ததால் மின் கம்பத்தின் மீது வேலை பார்த்துக்கொண்டிருந்த கேபிள் டிவி பணியாள் மின்சாரம் தாக்கி பலி
ஆவடி அருகே திருநின்றவூர், கன்னியப்பன் நகரைச் சேர்ந்தவர் குமார்/50. இவர் தனியார் கேபிள் டிவி ஊழியராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்து வந்துள்ளார். வழக்கம் போல பணிக்கு வந்த குமார் திருநின்றவூர் பகுதியில் கேபிள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். திருநின்றவூர் மின்சார வாரியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 முதல் மாலை 6 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் குமார் செல்வராஜ் நகர், தனியார் பள்ளி அருகில் உள்ள மின் மாற்றி கம்பத்தில் ஏறி கேபிள் வயரை சரி பார்த்து கொண்டிருத்துள்ளர் அப்பொழுது திடீரென முன்கூட்டியே மின்சாரம் வந்துள்ளது. இதன் காரணமாக குமார் மீது மின்சாரம் பாய்ந்து குமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு முதலுதவி அளித்துள்ளனர். எனினும் அவர் சுயநினைவில்லாமல் இருந்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு திருநின்றவூர் போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு, உடற்கூறு சோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகார் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்ட மின்சாரம் திடீரென வந்ததால் மின் கம்பத்தின் மீது வேலை பார்த்துக்கொண்டிருந்த கேபிள் டிவி பணியாள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.