ஆவடி வணிகர் சங்க கோரிக்கை-அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
ஆவடி மாநகராட்சி மார்க்கெட் பகுதி மிகவும் கூட்ட நெரிசலாகவும், எப்போதும் பரபரப்பாகவும் இருக்கும் பகுதி. மேலும் சாலையின் இருபுறமும் பெரும் வணிக கடைகளும் மற்றும் சிறு வியாபார கடைகளும் உள்ளன.
சாலையின் இருபுறமும் உள்ள சிறு வியாபார ஆக்கிரமிப்பு கடைகளால் சாலை குறுகிய வண்ணம் மற்றும் கூட்ட நெரிசலாகவும் எப்பொழுதுமே காணப்படும். இதனால் அப்பகுதியில் பயணம் செய்வது என்பது பெரும் சவாலாகவே இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 16-ஆம் தேதி பருத்திப்பட்டு பகுதியில் ஆவடி காவல் ஆணையர் சங்கர் தலைமையில் பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆவடி வணிக சங்க நிர்வாகிகள், ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அதில் ஆவடி மார்க்கெட் பகுதி சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்து மக்கள் எளிதில் பொருட்களை வாங்கிக் கொண்டு செல்லவும், மக்கள் கூட்ட நெரிசலில் இருந்து விடுபட்டு எளிதில் சாலையை பயன்படுத்தவும், நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இந்த மனுவை ஏற்ற ஆணையர் வணிகர் சங்க நிர்வாகிகளிடம் நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தார்.
அதன் அடிப்படையில் இன்று ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்து காவல் துறை போக்குவரத்து அதிகாரிகள், ஆவடி மாநகராட்சி அதிகாரிகள், மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், என மூன்று துறை அதிகாரிகளும் இணைந்து அதிரடி நடவடிக்கை எடுத்து ஆவடி மார்க்கெட் பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலை விரிவாக்கம் செய்து மக்களுக்கும், வணிகர்களுக்கும், மகிழ்ச்சியான நிகழ்வை கொண்டு வந்துள்ளனர்.