ஆவடி அருகே அமித்ஷாவை கண்டித்து திமுகவினர் அமித்சாவின் உருவப்படத்தை சாலையில் போட்டு மிதித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டம் மீதான விவாதத்தின்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கரை குறித்துப் பேசினார். அப்போது, இன்றைய சூழலில் அம்பேத்கரின் பெயரைப் பயன்படுத்துவது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது என்றும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், என்று பயன்படுத்துபவர்கள் கடவுளின் பெயரைப் பயன்படுத்தினால், ஏழு பிறவிகளுக்கும் நாம் சொர்க்கத்தை அடையலாம் என்று அமித்ஷா தெரிவித்தார்.
இந்த கருத்துக்கு காங்கிரஸ், திமுக, உள்ளிட்ட எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆவடி அடுத்த திருமுல்லைவாயலில் அம்பேத்கரை சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து பகுதி செயலாளர் பேபி சேகர் தலைமையில் திமுகவினர் 200 மேற்பட்டோர் கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது திடீரென அமித்ஷாவின் உருவப்படத்தை சாலையில் போட்டு செருப்பால் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதேபோன்று ஆவடி மாநகராட்சி அருகில் பகுதி செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரும் அமித்ஷாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
ஆளுநர் மாளிகை முன் முற்றுகை போராட்டம் –காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கைது