நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வகையில் பொது இடங்களில் பேசி வருவதால் நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் தலைவர் D.S.R. சுபாஷ் அறிக்கையில் கூறியிருப்பதாவது, சீமான், தான் ஒரு கட்சி தலைவர் என்ற பொறுப்பை மறந்து, தரம் தாழ்ந்து, பெண்கள் சூழ்ந்து நிற்கும் ஒரு பொது இடத்தில் ஒரு பெண் பத்திரிக்கையாளரிடம் பேட்டி அளிக்கும் போது, தரம் தாழ்ந்து அநாகரிகமான வார்த்தைகளை பேசியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஆவடி பத்திரிகையாளர் சங்கம் தலைவர் என்.கே. மூர்த்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது.
கோவையில் பெண் பத்திரிகையாளரிடம் ஆபாசமாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்களுக்கு கடும் கண்டனம்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்கள் பத்திரிகையாளர்களை கண்ணியக் குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி தொடர்ந்து இழிவு படுத்தி வருகிறார். ஊடகவியலாளர்களிடம் உரையாடும் போது கேள்வி கேட்கும் நிருபர்களை, நீ யார் ? உனக்கு என்ன தெரியும்? என்று மிரட்டும் தோரணையில் பேசி வருகிறார். ஒரு கட்சித்தலைவரான திரு. சீமான் பொதுஇடங்களிலும் ஊடக சந்திப்புகளிலும், தொடர்ந்து ஆபாச மற்றும் இழிவு சொற்களை பயன்படுத்திவருவது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.
கோவையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், பிரபாகரனின் அண்ணன் மகன் திரு. சீமான் மீது எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுகளை கேள்வியாக முன்வைத்த புதிய தலைமுறை பெண் செய்தியாளரிடம், முகம்சுளிக்கும் வகையில், அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை திரு. சீமான் பதிலளித்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் செய்தியாரை குறிப்பிட்டு சொல்லவில்லை என்றாலும், ஒரு பெண் செய்தியாளருக்கு பதிலளிக்கிறோம் என்கிற குறைந்தபட்ச கவனமும் பொறுப்பும் கூட இல்லாமல் திரு. சீமான் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
அவருடைய பேச்சை, நடத்தையை ஆவடி பத்திரிகையாளர்கள் மன்றம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். திரு. சீமான், பொது இடங்களிலும் ஊடக சந்திப்புக்களிலும் முதிர்ச்சியான சொற்களைப் பயன்படுத்துவதும், கண்ணியம் அறிந்து நடந்துகொள்ள வேண்டும் என்றும் ஆவடி பத்திரிகையாளர் மன்றம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இனிமேலாவது சீமான், பத்திரிகையாளர் சந்திப்பில் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.