திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே சாலைகளில் அதிக விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட நடைபாதை கடைகளை நெடுஞ்சாலை துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள்
அகற்றினர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட சுற்று பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் சாலையை ஆக்கிரமிப்பு செய்து சிற்றுண்டி கடைகள் காய்கறி கடைகள் நடத்தி வந்த நபர்களால் அடிக்கடி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வந்ததை அடுத்து, இதனை அறிந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகளை அகற்ற முடிவு செய்தனர்.
நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சதீஷ்குமார் மற்றும் ஆவடி போக்குவரத்து ஆய்வாளர் ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் ஆவடி செக் போஸ்ட் முதல் பட்டாபிராம் வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையை ஆக்கிரமிப்பு செய்து பந்தல் அமைத்து, வியாபாரம் செய்து வந்த 200-க்கும் மேற்பட்ட கடைகளை ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றினர். ஒரு சில வியாபாரிகள் நான்கு சக்கர கார் மற்றும் வேன்களில் கொட்டகை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர் அவர்களையும் அப்புறப்படுத்தினர்.