ஆவடியில் குடிநீர் மற்றும் கழிவு நீர் திட்டத்துக்கான கலந்தாய்வு – மக்கள் கருத்து
ஆவடி மாநகராட்சி குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்கான கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
ஆவடி மாநகராட்சியில் கடந்த 2008 ல் பாதாள சாக்கடை திட்டத்துக்கு 158 கோடியும், குடிநீர் திட்டத்துக்கு 113 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடந்து முடிந்துள்ளது.
அடுத்தகட்ட குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்கு, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு திட்ட அறிக்கைகள் தயார் செய்யும் பணிகள், தனியார் நிறுவனத்தின் மூலம் மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், அந்த திட்டங்கள் செயல்படுத்துவதற்கான பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் திங்கள்கிழமை காலை, மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இதில், மாநகராட்சி செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து குடியிருப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் ஆவடி மாநகராட்சி கமிஷனர் தர்ப்பகராஜ் விவாதித்தார்.
கடந்த 2008 ல் குடிநீர் திட்டத்தில் விடுபட்ட இடங்களில் குடிநீர் வசதிகளை ஏற்படுத்த முதற்கட்டமாக ரூ. 269 30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாதாள சாக்கடை திட்டத்துக்கு ரூ. 93 13 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமுக ஆர்வலர் தரணிதரன் என்பவர் பேசும்போது,
மாநகராட்சி நிர்வாகம், குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலைத்துறை, சி.எம்.டி.ஏ., மத்திய தொலை தொடர்பு துறை, மின்சார வாரியத்துறை ஆகிய துறைகள் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு இல்லாததால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, உடனடியாக அனைத்து துறைகளும் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட வேண்டும்.
குடிநீர் திட்ட பணிகள், பாதாள சாக்கடை குறித்த பணிகள், வேலைகள் நிதி நிலைமை தற்போதைய உண்மை நிலை அனைத்தும் அடங்கிய வெள்ளை அறிக்கை ஆவடி மாநகராட்சி வெளியிட வேண்டும்.
ஆவடி மாநகராட்சியில் முதலில் வெளிப்படை தன்மை கடைப்பிடிக்க வேண்டும். மாநகராட்சிக்கு வரி தொகை செலுத்தும் மக்களுக்கு மாநகராட்சியில் செலவினங்களை அறிந்து கொள்ளும் உரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.