ஆவடி மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து மன்றக் கூட்டம் ரத்து
ஆவடி மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் மாமன்ற கூட்டத்தை ஐந்து நிமிடத்தில் நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளது. அதில் திமுக உறுப்பினர்கள் மட்டும் 38 பேர் உள்ளனர். கூட்டணி கட்சி உறுப்பினர்கள் 8 பேர், அதிமுக 2 பேர் என்று 48 உறுப்பினர்கள் உள்ளனர்.
ஆவடி மாநகராட்சியில் மாதமாதம் நடைபெறக் கூடிய மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் முறையாக நடைபெறாமல் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை, மூன்று மாதத்திற்கு ஒரு முறை என்று சம்பரதாயக் கூட்டமாக ஆளும் கட்சியினர் மாற்றி விட்டனர்.
இந்நிலையில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற உள்ளதாக 48 வார்டு உறுப்பினர்களுக்கும் மேயர் உதயக்குமார் தலைமையில் மன்றக் கூட்டம் நடைபெறும் என்று முறையாக அழைப்பு அனுப்பப்பட்டது.
மன்றக் கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் கூட்ட அரங்கிற்கு வந்து கலந்துக் கொண்டனர். கூட்டம் மேயர் உதயகுமார் தலைமையில் தொடங்கியது. இதில் துணை மேயர் சூரிய குமார், கூடுதல் ஆணையர் விஜயகுமாரி, மாநகராட்சி உறுப்பினர்கள்,துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 131 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு இருந்தது.
இந்த தீர்மானங்கள் அனைத்தும் எங்களுக்குத் தெரியாமல் கொண்டு வந்ததாக கூறி 42வது வார்டு கவுன்சிலரும் மண்டல குழு தலைவருமான ராஜேந்திரன் மற்றும் முன்னாள் அமைச்சர் மகன் ஆசிம் ராஜா கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறினர். மேலும் அமைச்சர் மகன் ஆசிம்ராஜா, கவுன்சிலர்கள் கோரிக்கை எதுவும் நிறைவேற வில்லை. அதிகாரிகளுடைய கோரிக்கை நிறைவேற்ற கூட்டமா, இது மக்கள் மன்றம் அதிகாரி மன்றம் கிடையாது தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் என கடுமையாக விவாதம் செய்தார். இதையடுத்து கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரித்த போது, மேயருக்கு தெரிந்து, மேயர் கையெழுத்திட்டு, அவருடைய அனுமதியோடுதான் இந்த கூட்டம் தொடங்கியது. மேயர் கையெழுத்து இல்லாமல் இந்த கூட்டத்தை நடத்த முடியாது. ஆனால் மண்டல குழு தலைவர், அமைச்சரின் மகன் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டத்தை ரத்து செய்யப்படுவதாக மேயர் அறிவித்தார். அனைவரும் உடனடியாக கலைந்து சென்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆவடி மாநகராட்சியில் கடந்த மாதமும் கூட்டம் நடைபெறவில்லை. இதனால் பல்வேறு மக்கள் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதேபோன்று அமைச்சர் நாசர் பதவி பறிக்கப்பட்ட சம்பவம் விவாதம் நடந்து கொண்டிருக்கும்போது, அவருடைய தொகுதியில் மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து ஆளும்கட்சி உறுப்பினர்கள் மன்றக் கூட்டத்தை ரத்து செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.