மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாளையொட்டி ஆவடியில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நடை பேரணி மேற்கொண்டனர்.
காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தலின் படி மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சென்னை புறநகர் பகுதியான ஆவடியில் மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாள் விழா, ஆவடி காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் யுவராஜ் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மேல்வட்ட மாவட்ட பொறுப்பாளர் கீழானூர் ராஜேந்திரன் கலந்துகொண்டு மகாத்மா காந்தி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அருகிலிருந்த காங்கிரஸ் கொடி கம்பத்தில் கொடியேற்றி வைத்தனர்.
தொடர்ந்து, 300-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஆவடி சின்னம்மன் கோவில் அருகே இருந்து பேரணியாக புறப்பட்டு மகாத்மா காந்தியின் புகழ் வாழ்க, காங்கிரஸ் வாழ்க என்று கோஷங்கள் எழுப்பியவாறு 3 கிலோ மீட்டர் பேரணியாகச் சென்று ஆவடி செக் போஸ்ட் பகுதியில் அமைந்துள்ள கர்மவீரர் காமராஜரின் 49-வது நினைவு நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்தி பிறந்தநாள் மற்றும் காமராஜரின் நினைவு நாள் நிகழ்ச்சிகளில் திரளாக காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.