சென்னை அம்பத்தூரில் சிபிஐ அதிகாரியை போல் உடை அணிந்து வாட்ஸ்அப் காலில் பேசி டிஜிட்டல் முறையில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அம்பத்தூர் பகுதியில் வசித்து வரும் ரமேஷ்பாபு என்ற நபரை செல்போனில் தொடர்பு கொண்ட நபர்கள், தாங்கள் CBI அதிகாரிகள் என்று கூறி ரமேஷ்பாபு என்பவர் Raj Kundra பண மோசடி வழக்கில் சம்மந்தப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று போலியான நீதிமன்ற உத்தரவை காண்பித்துள்ளனர்.
CBI அதிகாரிகள் போல் உடை அணிந்து வாட்ஸ் ஆப் வீடியோ காலில் புகார்தாரரிடம் பேசி உங்களை ரகசியமாக விசாரணை செய்ய வேண்டியுள்ளது. நாங்கள் விசாரணை செய்வதை உங்கள் குடும்ப உறுப்பினரிடமோ அல்லது வேறு யாரிடமோ தெரிவித்தால் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெற்றுக் கொடுப்போம் என்று மிரட்டி புகார்தாரர் ரமேஷ்பாபுவிடம் இருந்து நான்கு தவணைகளில் ஒரு கோடியே ஒன்பது லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளனர்.
விசாரணை செய்த பின்னர் மீண்டும் உங்கள் பணம் திருப்பி அனுப்பிவிடுவோம் என்று கூறி,ஏமாற்றி பணத்தை RTGS மற்றும் NEFT மூலமாக பணத்தை பெற்றுள்ளனர்.
ஒரு கட்டத்தில் தாம் ஏமாற்றப்பட்டோம் என்பதை அறிந்து அந்த மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
இணையவழி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பிரவீன் குமார் தலைமையில் போலீசார் விசாரணை செய்தனர்.
அதில் வேளச்சேரி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் அவரது பெயரில் THI INFOTECH PRIVATE LIMITED என்ற கம்பெனியை ஆரம்பித்து அந்த கம்பெனி பெயரில் நடப்புக் கணக்கை தொடங்கி அதை வடஇந்திய மோசடி நபர்களிடம் கொடுத்து அதன் மூலம் புகார்தாரர் ரமேஷ்பாபுவை ஏமாற்றியதை கண்டுப் பிடித்தனர்.
பின்னர் வேளச்சேரி பகுதியில் பதுங்கியிருந்த சதீஷ்குமார் த/பெ கோதண்டன் என்பவரை கைது செய்து பொதுமக்களை ஏமாற்ற பயன்படுத்திய 3 செல்போன்கள், 7 Credit Card, செக் புக் மற்றும் பணம் ரூ.8000/- ஆகிவற்றை மோசடி நபரிடம் இருந்து கைப்பற்றி கைது செய்த நபரை JM-1 பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.
JM-1 பூந்தமல்லி நீதிமன்ற நீதிபதி அவர்கள் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதின் பேரில் இணையவழி குற்றப்பிரிவு போலீசார் மேற்படி நபரை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.