ஆவடி அருகே இரண்டு கோவில்களில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் கைவரிசை
ஆவடி ஜே பி எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள செல்லியம்மன் ஆலயத்திலும் அதேபோல் கோவர்த்தனகிரி பகுதியில் அமைந்துள்ள கங்கை அம்மன் ஆலயத்திலும் ஒரே இரவில் இரண்டு கோவில்களில், உண்டியலை உடைத்து கொள்ளை சம்பவம் நடந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக ஆவடி சுற்று பகுதியில் சில நாட்களாக கொள்ளை சம்பவங்களை தடுக்கும் வகையில் காவலர்கள் இரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு செல்லியம்மன் ஆலயத்திலும், கங்கை அம்மன் ஆலயத்திலும் இரண்டு நபர்கள் முகமூடி அணிந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவில் நிர்வாகத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் கோவிலில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது கோவிலின் உள்ளே இரு நபர்கள் கௌபர் மூலம் உண்டியலை உடைத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து கோவில் நிர்வாகம் அளித்த புகார் அடிப்படையில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.
எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் ஜேபி எஸ்டேட், கோவர்த்தனகிரி பகுதியில் இரவு நேரத்தில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டாலும், கோவில்கள் மற்றும் வணிக வளாகங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டிருந்தாலும்,, கொள்ளையர்கள் முகமூடி அணிந்து பணம் மற்றும் நகைகளை எந்த ஒரு அச்சமும் இல்லாமல் கொள்ளையடித்து செல்வது வழக்கமாகவே உள்ளது.
இதுபோன்ற சம்பவங்களை தடுக்க கோவில்கள் மற்றும் வணிக வளாகங்களில் அலாரம் ஒலி வைக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக எழுந்துள்ளது,