திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நகராட்சியில் பெரியார் நகர், சுதேசி நகர், திருவேங்கட நகர், முத்தமிழ் நகர் உள்ளிட்ட நான்கு வார்டுகளில் குடியிருப்பு பகுதியில் மழை நீர் சூழ்ந்து தற்போது வரை நீர் வடியாமல் உள்ளது. இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
மழை பெய்து ஓய்ந்து 8 நாள் மேல் ஆகியும் இதுவரையும் அதிகாரிகள் குடியிருப்பு பகுதி நீரை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்,மேலும் அரசு தரப்பில் அதிகாரிகள் கண்துடைப்பதற்காகவே பணியாற்றுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து திருநின்றவூர் ரயில் சாலையில் 41 வருடமாக குடியிருக்கும் வெங்கடலட்சுமி கூறுகையில், “தற்போது பெய்த மழையில் தனது வீடு மூழ்கிய சூழ்நிலை ஏற்பட்டு தனது உறவினர் தங்கை வீட்டிற்கு சென்று தங்கி விட்டதாகவும் மேலும் காற்றில் வீடு கூரைகள் அடித்து செல்லப்பட்டு வீடு சேதமடைந்த நிலையில் உள்ளது எனவும் அரசு தரப்பில் விரைவில் நீரை வெளியேற்ற வேண்டும்” எனவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சாலையில் படுத்து கொண்டிருக்கும் சத்தியவாணி கூறுகையில், “எங்கள் வீடு மழையில் சேதம் அடைந்து விட்டது எனது தந்தை ஊனமுற்றோர் அவரால் எழுந்து நடக்க முடியாத சூழல் எங்களை நான்கு பேர் தூக்கிக்கொண்டு இந்த ரோட்டில் விட்டனர் இப்போது வரை வீட்டிற்கு செல்ல முடியாத சூழல், யாரேனும் உணவு கொடுத்தால் உண்பதும் உறங்குவதும் சாலையிலேயே நடந்து கொண்டிருக்கிறது. இதுவரை எந்த அதிகாரியும் எங்களைப் பார்க்கவில்லை, அரசுக்கு நாங்கள் கோரிக்கையாக வைப்பது நீரை வெளியேற்றி எங்கள் வாழ்வு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப உதவுங்கள் “ என கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சென்று விசாரித்த போது, செய்தியாளர்களுக்கு தகவல் அளிக்க நகராட்சி நிர்வாக ஆணையர் மற்றும் பொறியாளர் மறுத்து விட்டனர்.