ஆவடி அருகே மகன் கண் முன்னே அடையாளம் தெரியாத லாரி மோதி தாய் பலி
ஆவடி அடுத்த பருத்திப்பட்டு சுந்தர சோழபுரம் இணைப்பு சாலை அருகே அடையாளம் தெரியாத லாரி நசரத்பேட்டை பகுதியை சார்ந்த பாத்திமா என்பவர் மீது மோதியது.
கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் தன் மகன் சிகிச்சைக்காக அம்பத்தூரில் உள்ள சித்தா மருத்துவமனைக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் பொழுது பருத்திப்பட்டு அருகே பின்னால் வந்த கண்டெய்னர் லாரி பாத்திமா மீது மோதியதில் இரண்டு கால்களிளும் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் பாத்திமாவை ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்யும் பொழுது பாத்திமா வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்பு தகவல் அறிந்து விரைந்து வந்த பூந்தமல்லி புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை வலை வீசி தேடி வருகிறனர், இறந்த பாத்திமாவின் உடலை உடற்கூறு ஆய்விற்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் சாலையில் அடையாளம் தெரியாத லாரி மோதி மகன் கண்முன்னே தாய் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.