Homeசெய்திகள்ஆவடிஆவடியில் புதிய அரசு மருத்துவமனை விரைவில் தொடக்கம்

ஆவடியில் புதிய அரசு மருத்துவமனை விரைவில் தொடக்கம்

-

ஆவடியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் புதிய அரசு மருத்துவமனை!

சென்னை புறநகரில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஆவடி முதன்மையானது. ஆவடியில் புதிய ராணுவ சாலையில் ஆவடி அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது. அதில் புதிய கட்டிடங்கள் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.

ஆவடி அரசு பொது மருத்துவமனை, கடந்த 2010 ம் ஆண்டு தி.மு.க, ஆட்சியில் 3.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கட்டப்பட்டது. இதில், மகப்பேறு பிரிவுடன் 57 படுக்கைகள், புற நோயாளிகள் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை அரங்கம் என உள்ளிட்ட வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது.

ஆவடியில் புதிய அரசு மருத்துவமனை கட்டிடம்

இந்த மருத்துவமனைக்கு ஆவடி சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம பகுதிகள் மட்டும் இன்றி, வேப்பம்பட்டு, செவ்வாய்பேட்  மற்றும் சென்னை அம்பத்தூர் எஸ்டேட் வரை உள்ள சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, குழந்தைகள், கர்ப்பிணிகள் உட்பட நாள் ஒன்றுக்கு, சுமார் 700க்கும் அதிகமான புற நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையால், தவிர்க்க முடியாத சில மருத்துவ தேவைக்கு, திருவள்ளூர் மற்றும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆவடியில் இருந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனை 25 கி.மீ., தூரத்திலும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை 22.01 கி.மீ., தூரத்திலும் உள்ளதால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும், தற்கொலை, கொலை உள்ளிட்ட மரணங்கள் நிகழும் போது உடல்களை பிரேத பரிசோதனை செய்ய, சென்னை மற்றும் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு செல்ல வேண்டிய சூழல் இருந்து வருகிறது.

ஆவடியில் புதிய அரசு மருத்துவமனை விரைவில் தொடக்கம்

இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக, ஆவடி அரசு பொது மருத்துவமனையை தரம் உயர்த்த, அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இதை தொடர்ந்து, ஆவடி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில், திருவள்ளூர் மாவட்ட இரண்டாம் நிலை பராமரிப்பு மருத்துவமனை கட்ட அரசு முடிவெடுத்தது. அதன்படி, கடந்த 2020-ல், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் புதிய மருத்துவமனை கட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன், 26.90 கோடி ரூபாய் மதிப்பில் ஆரம்பித்த இந்த மருத்துவமனை, மீண்டும் மறு மதிப்பீடு செய்யப்பட்டு 33.53 கோடி ரூபாய் மதிப்பில், கடந்த 2021 ம் ஆண்டு மே மாதம் பணிகள் தொடங்கப்பட்டது.

இந்த புதிய மருத்துவமனை, 1.79 ஏக்கர் பரப்பளவில், தரைத்தளம் உட்பட 54, 235 சதுர அடியில் மூன்று தளங்களுடன் பொது பணித் துறையால் கட்டப்பட்டு வருகிறது.

ஆவடியில் புதிய அரசு மருத்துவமனை விரைவில் தொடக்கம்

2022 ல் ஆகஸ்ட் மாதம் பணிகள் முடிந்துவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், பல்வேறு காரணங்களால் பணிகள் முடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒரு வழியாக தற்போது, 95 சதவீத பணிகள் முடிந்து, மே மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பழைய மருத்துவமனை கட்டடத்தில், தரை தளத்தில்: ஆண்கள் புற நோயாளிகள் பிரிவு, பெண்களுக்கு நோய் தொற்றாத சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவு, ஊசிகள் மற்றும் ‘சி.டி.சி’ ஸ்கேன் ஆகியவை இடம் பெறும்.

முதல் தளத்தில்: பல் மருத்துவம் மற்றும் பிரசவ பிரிவு.

இரண்டாம் தளத்தில்: கூடுதலாக 5 படுக்கைகளுடன் 12 ‘டயாலிசிஸ்’ பிரிவாக மாற்றப்படவுள்ளது.

ஆவடியில் புதிய அரசு மருத்துவமனை கட்டிடம்

தற்போது புதிய மருத்துவமனையின் சிறப்பு அம்சங்கள்:

தரைத்தளம் :

அவசர அறுவை சிகிச்சை மற்றும் பொது பிரிவு
அவசர அறுவை சிகிச்சை அரங்கம்
படுக்கைகள் – 12
ஊடுகதிர் – ‘எக்ஸ்ரே’
மருந்தகம்
வைப்பறை
தீ காய பிரிவு
வயிறு சுத்தம் செய்யுமிடம்
வரவேற்பு
மருத்துவ அறை
செவிலியர் அறை

முதல் தளம் : பெண்கள் பிரிவு

அறுவை சிகிச்சைக்கு பிந்தைய கவனிப்பு மற்றும் பொது பிரிவு
அறுவை சிகிச்சைக்கு பிந்தைய அறை – 6 படுக்கைகள்
பொது அறை – 24 படுக்கைகள்
தனி அறை – 1
மருத்துவர் மற்றும் செவிலியர் அறை                                          மருத்துவமனைக்கான துணிகள் வைப்பிடம்
பரிசோதனை அறை
ஆய்வகம், பொது அங்காடி
யூ.பி.எஸ்.,
பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பதிவு

இரண்டாம் தளம் – ஆண்கள் பிரிவு

அறுவை சிகிச்சைக்கு பிந்தைய கவனிப்பு மற்றும் 6 படுக்கைகள் கொண்ட அறை  பொதுமக்கள் காத்திருப்பு பகுதி                                                                          பொது அறை – 24 படுக்கைகள்
தனி அறை – 1
செவிலியர் அறை
மருத்துமனைக்கான துணிகள் வைப்பிடம்
பரிசோதனை அறை
ரத்த வங்கி

ஆவடியில் புதிய அரசு மருத்துவமனை விரைவில் தொடக்கம்

மூன்றாம் தளம் :

அறுவை சிகிச்சை அரங்கம் – 2

இவை மட்டுமின்றி, 5 .85 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள், ஒரே நேரத்தில் 26 நபர்கள் செல்லக்கூடிய இரண்டு மின் தூக்கிகள், அனைத்து தளத்திலும் கழிப்பறை வசதி, தீயணைப்பு உபகரணங்கள், 250 கி.வா., திறன் கொண்ட இரண்டு ‘ஜெனெரேட்டர்’ , பார்க்கிங் வசதி உள்ளிட்டவை அடங்கும். மேலும், பிரேத பரிசோதனை கூடம் முழு நேரம் செயல்படும்.

ஏற்கனவே செயல்பட்டு வரும் மருத்துவமனையில், மருத்துவர்கள், செவிலியர்கள், என 35 பேர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், புதிய மருத்துவமனையில் பணியாற்ற 157 பணியாளர்கள் வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

புதிய மருத்துவமனையில் கட்டட வடிவமைப்பு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு இணையாக வசதிகள் அமைய உள்ளதால், ஆவடிக்கு முக்கிய அடையாளமாக விளங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

MUST READ