தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் சமுதாயத்திற்கு அவரால் செய்ய முடிந்ததை செய்து விட்டார். ஆனால் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று சன்.டிவி. நிருபரும், APC NEWS TAMIL ஆசிரியருமான என்.கே.மூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
தந்தை பெரியாரின் 146 – வது பிறந்த நாள் நிகழ்ச்சி நாடு முழுவதும் சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆவடி கோவில்பதாகையில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பெரியார் பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆவடி பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் ஜானகிராமன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் என்.கே.மூர்த்தி பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து, பின்னர் பேசினார்.
அப்பொழுது பேசிய என்.கே.மூர்த்தி, தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் இந்த சமுதாயம் மூட நம்பிக்கையில் மூழ்கி போய் இருந்தது. படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை மூட நம்பிக்கையிலும், மூட பழக்கவழக்கங்களிலும் மூழ்கி போய் இருந்தனர். சாதியின் ஆதிக்கம் ஆட்டம் தலைவிரித்து ஆடிய காலம்.
தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலில் நுழைந்து கடவுளை வணங்க முடியாத காலம், சுதந்திரமாக ஆடையோ, காலில் செருப்போ அணிய முடியாமல் இருந்த காலம். அந்த காலகட்டத்தில் தோன்றிய பெரியார், மூட நம்பிக்கைகளுக்கு முடிவு கட்டினார், சாதிய அடக்கு முறைகளுக்கு எதிராக போராடி ஒருவரின் பெயருக்கு பின்னால் சாதி பெயரை போட்டுக் கொள்வது இழிவானது என்று தமிழர்களை உணர வைத்தவர் தந்தை பெரியார்.
மனிதர்களை மனிதனாக மதிக்க கற்றுக் கொடுத்தவர் தந்தை பெரியார். இன்று நாம் எல்லோரும் நாகரீகமான வாழ்க்கை வாழ்வதற்கு அடித்தளமிட்டவர் பெரியார். அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த சமுதாயத்தை மாற்றி அடுத்த தலைமுறையினருக்கு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கி கொடுத்து விட்டு சென்றார்.
தந்தை பெரியாரை போன்றே, டாக்டர் அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் போன்ற தலைவர்கள் அவர்களால் முடிந்ததை செய்தார்கள். அவர்களுடைய சக்திகளையும் மீறி உழைத்தார்கள், சாதித்தார்கள். ஆனால் நாம் என்ன செய்கிறோம், அடுத்த தலைமுறையினருக்காக நாம் என்ன சொல்லி கொடுக்கிறோம்.
வெறும் பெரியாரின் பெருமைகளையும், அண்ணாவின் பெருமைகளையும், கலைஞரின் பெருமைகளை மட்டும் பேசி வருகிறோம். அப்படி பேசியே மகிழ்ச்சி அடைந்து கொள்கிறோம். அது மட்டுமே நமது கடமை என்று நினைத்துக் கொள்கிறோம்.
அது போதுமானது அல்ல, மறைந்த தலைவர்களை கொண்டாடுவது மட்டுமே நமது வேலை முடிந்து விட்டது என்று கருத வேண்டாம். இந்த தலைமுறையில் தலைமை பண்பு கொண்ட இளைஞர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். அவர்களை பகுத்தறிவு பாதைக்கு கொண்டு வருவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
சமுதாயம் என்பது நீங்களும் நானும் சேர்ந்தது தான். நீங்களும் மற்றவர்களும் சேர்ந்தது தான். அந்த சமுதாய அமைப்பு எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அவர்களிடம் மறைந்த தலைவர்களின் தியாகங்களை, அவர்கள் செய்த சாதனைகளை எடுத்து கூறவேண்டும். அதற்கு முன்பு நாம் என்னவாக இருக்கிறோம், நமது எண்ணங்கள் என்னவாக இருக்கிறது என்று நமக்குள் நாம் கவனிக்க வேண்டும்.
நமது எண்ணங்களை, நமது செயல்களை கூர்ந்து கவனிக்க வேண்டும். நமது எண்ணங்களில், சிந்தனைகளில் புதிய மாற்றங்கள் இல்லாவிட்டால் சமுதாயத்தில் மாற்றங்களை கொண்டுவர முடியாது. எனவே, நமது எண்ணங்களில், சிந்தனைகளில் மாற்றங்களுக்கான விதையை விதைப்போம். அடுத்த ஆண்டு புதிய இளைஞர்களுடன் பெரியாரின் சிந்தனைகளை எழுச்சியுடன் கொண்டாடுவோம். இவ்வாறு என்.கே.மூர்த்தி பேசினார்.
அதனை தொடர்ந்து திமுக தலைமை கழக பேச்சாளரும், பெரியாரின் சிந்தனைவாதியுமான கா.மு.ஜான் பேசும்போது பெரியார் பெண் விடுதலைக்காக கடுமையாக உழைத்தார். பெண்கள் படிக்க வேண்டும், அவர்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் என்று போராடினார். பெரியாரின் கொள்கைகளை அறிஞர் அண்ணா நடைமுறை படுத்தினார். 1967ல் அறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்ததும் பெரியார் நடத்தி வைத்த சீர்திருத்த திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் பெற்றுத் தந்தார். தமிழ்நாட்டிற்கு “தமிழ்நாடு” என்று பெயர் சூட்டினார். தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை என்று கூறி தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கையை சட்டமாக்கினார்.
அண்ணா கொண்டுவந்த இருமொழி கொள்கையினால் தமிழர்கள் இன்று உலகம் முழுவதும் சென்று சாதனை படைத்து வருகின்றனர். அண்ணாவை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த கலைஞர் பெண்களுக்கு சொத்துரிமை சட்டத்தை கொண்டுவந்தார். அதனால் பெண்கள் தற்போது தாய் வீட்டு சொத்துக்களை உரிமையுடன் அனுபவித்து வருகின்றனர்.
இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பனிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்லும் இளைஞர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கி உயர் கல்வி பயில வழிவகுத்துள்ளார். மேலும் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்து திராவிட மாடல் அரசு இந்தியாவிற்கே எடுத்துக் காட்டாக இருந்து வருவதாக கூறினார். நிகழ்ச்சியில் தொடர்ந்து பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் ஜானகிராமன் அனைவருக்கும் நன்றி கூறினார்.