முகமூடி அணிந்து வந்து குடும்பத்தையே தீர்த்து கட்ட நினைத்த கொலையாளியை ஒரு மாதமாகியும் பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் திருக்குறள் மெயின் ரோட்டை சேர்ந்தவர் மாதவன்/65.சென்னை துறைமுகத்தில் கப்பல் மெக்கானிக்காக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், வீட்டின் மாடியில் ‘வி.எஸ்.எம் ராயல் மஹால்’ என்ற பெயரில் சிறிய பார்ட்டி ஹால் ஒன்றை நடத்தி வந்தார்.இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி இரவு மாதவன் தனது மனைவி ஷீயாமளா,மகள் தீக்ஷிதா மற்றும் மாமியார் ஆறுமுகம் அம்மாள் ஆகியோருடன் வீட்டில் இருந்தார். அப்போது வீட்டிற்குள் மங்கி குல்லா’ அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் வீட்டில் நுழைந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் மாதவனை தலை, மார்பு,வயிறு உள்ளிட்ட பல இடங்களில் சரமாரியாக வெட்டினர்.
இதனை தடுக்க முயன்ற மனைவி,மகள்,மாமியாரையும் அரிவாளால் வெட்டி சாய்த்த மர்ம நபர் அங்கிருந்து வீட்டின் பின்பக்க வழியாக தப்பிச் சென்றார்.உடலில் பலத்த வெட்டு காயம் அடைந்த மாதவன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிர் இழந்தார்.வெட்டு காயங்கள் அடைந்த சிறுமி உட்பட மூவருக்கும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று கடந்த மாதம் 17ம் தேதி வீடு திரும்பினர்.இந்த நிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை பிடிக்க ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் ஆவடி காவல் உதவி ஆய்வாளர் அன்பழகன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர்.
மேலும் கொலை செய்யப்பட் மாதவனுக்கு சொந்தமான ஓட்டலை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்த சரவணன் என்பவர் காணாமல் போகி உள்ளார். மாதவனுக்கு சொந்தமான கடையை முதலில் வட மாநிலத்தை சேர்ந்த பரத் என்பவர் வாடகைக்கு எடுத்து பல ஆண்டுகளாக கடை நடத்தி வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் கடை உரிமையாளர் மாதவனுக்கும், வாடகைதாரர் பரத்துக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் கடையை காலி செய்ய சொல்லி மாதவன் வற்புறுத்தியுள்ளார். ஆனால் கடையை காலி செய்ய முடியாது என பரத் மறுக்கவே, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து மூன்று மாதத்திற்கு முன்பு கடையை காலி செய்ய செய்துள்ளார்.
பின்னர் அந்த கடையை ஐ.டி ஊழியரான சரவணன் என்பவருக்கு வாடகை விட்டுள்ளார் மாதவன். அவரும் முறையாக வாடகை கொடுத்து பாஸ்ட் புட் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு,புறப்பட்ட சரவணன் இதுவரை வீடு திரும்பவில்லை. இதனால் இவரது மீது சந்தேகம் எழுந்ததால் தனிப்படை போலீசார் சரவணனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையில் கொலையாளியை ஒரு மாதமாகியும் தற்போது வரையில் பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.இதனால் இறந்த மாதவனின் குடும்பத்தினர் உயிர் பயத்தில் உள்ளனர். குடும்பத் தலைவரை கொன்று இவர்களையும் தீர்த்துக்கட்ட எண்ணி கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில்,தற்போது நண்பர்கள் வீட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.
ஆகையால் திருமுல்லைவாயில் போலீசார் கொலையாளியை விரைவாக கண்டுபிடித்து , நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து கொலை செய்யப்பட்ட மாதவனின் மனைவி கூறுகையில்,
கடந்த 10 நாட்களாக நண்பர்கள் வீட்டில் தங்கி உள்ளோம். மருத்துவ சிகிச்சைக்கு கூட எங்களிடம் பணம் இல்லை.போடுவதற்கு துணிகள் இல்லை. போலீசாரிடம் தான் வீட்டின் சாவி உள்ளது சாவியை தாங்கள் என கேட்டால் அவர்கள் தர மறுக்கின்றனர். காவல் நிலையத்திற்கு வாருங்கள் சாவி தந்து விடுகிறோம் என என்னை அழைத்தனர். ஆனால் இதுவரைக்கும் சாவி தராமல் ரொம்பவும் என்னை அலைகழிக்கின்றனர்.
குற்றவாளிகளை கண்டுபிடித்தீர்களா என கேட்டால் நீங்கள் தான் சொல்ல வேண்டும் என கூறுகிறார்கள். எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. நீங்கள் சொன்னால் தான், நீங்கள் ஏதாவது துப்பு கொடுங்கள் என கூறுகின்றனர். இதுவரைக்கும் நான் எல்லாவற்றையும் போலீஸிடம் சொல்லி விட்டேன். ஆனால் குற்றவாளியை இதுவரை கண்டுபிடிக்கவில்லை.
என் கணவரை யார் கொன்றார்கள் என கண்டிப்பாக கண்டுபிடித்து கொடுக்க வேண்டும். இறந்ததற்கு என்ன காரணம் என எங்களுக்கு தெரிய வேண்டும் என்று ஷீயாமளா தெரிவித்துள்ளார்.