ரோஜ்கர் மேளா – 341 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி
சென்னை ஆவடியில் நடைபெற்ற Rozgar Mela ரோஜ்கர் மேளா நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி 341 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
மத்திய மாநில அரசு துறைகளில் புதிதாகப் பணியமர்த்தப்பட்ட சுமார் 71,000 பணியாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலிக்காட்சி மூலம் பணி நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை குழு மைய வளாகத்தில் ‘ரோஜ்கார் மேளா’ நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின், மத்திய இணை அமைச்சர், நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய ஆயுதக் காவல் படையின் பல்வேறு பிரிவுகளான மத்திய ரிசர்வ் காவல் படை, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை, எல்லைக் காவல் படை, இந்தோ திபெத் காவல் படை, சஷஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி), அசாம் ரைபிள்ஸ், போதைப்பொருள் தடுப்பு பணியகம் (என்சிபி) மற்றும் டெல்லி காவல்துறை போன்ற பல்வேறு மத்திய ஆயுதக் காவல் படைகளிலும் இதர துறைகளிலும் புதிதாக நியமிக்கப்பட்ட பணியாளர்கள் இந்நிகழ்வில் தங்களது பணி நியமன ஆணைகளை பெற்றனர்.
இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புதிதாக பணியமர்த்தப்பட்ட 341 பேருக்கு பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. 200 நபர்களுக்கு நேரடியாக மத்திய இணை அமைச்சர் பணி ஆணையினை வழங்கினார்,
நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணையமைச்சர் நாராயணசாமி,‘ ரோஜ்கர் மேளா’ என்பது வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கும் பிரதமரின் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கான ஒரு முயற்சியாகும்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையிலும், இளைஞர்களுக்கு அதிகாரமளிக்கும் நோக்கத்திலும் ரோஜ்கார் மேளா என்ற வேலை வாய்ப்பு திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு துறைகளில் வேலை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரோஜ்கார் மேளாக்கள் மூலம் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அனைத்து துறைகளிலும் திறன் மேம்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகக் கூறினார்.
வளர்ச்சி மிக்க இந்தியாவை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளித்து வருவதாக மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக காணொளி காட்சி வாயிலாக நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, வேலை வாய்ப்பு பெற்ற இளைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பணி ஆணைகளை பெற்ற இளைஞர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.